Enable Javscript for better performance
விஜய்யின் ‘தெறி’ விவகாரம்: எந்திரனை விடவும் அதிக தொகையா? வெளிப்படும் உண்மைகள்!- Dinamani

சுடச்சுட

  

  விஜய்யின் ‘தெறி’ விவகாரம்: எந்திரனை விடவும் அதிக தொகையா? வெளிப்படும் உண்மைகள்!

  By சநகன்  |   Published on : 18th April 2016 05:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vijay_therixx

  விஜய் நடித்த தெறி படம் தமிழ்ப் புத்தாண்டன்று உலகெங்கும் வெளியானது. ஆனால், செங்கல்பட்டுப் பகுதிகளில் மட்டும் பல திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் பல இடங்களில் ரகளை செய்தார்கள். சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டார்கள்.

  அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியானது. ஆனால் செங்கல்பட்டுப் பகுதியில் வெளியாகாததால் தெறி படப் பிரச்னை தொடர்பாகப் பலருக்கும் குழப்பமும் கேள்விகளும் ஏற்பட்டுள்ளன.

  தமிழ்நாட்டில் சினிமா வியாபாரம் என்பது சென்னை, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய என்.எஸ்.சி., கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஒன்பது பகுதிகளைக் கொண்டது. சினிமா வியாபாரத்தில் மினிமம் கியாரண்டி என்றொரு பிரிவு உண்டு. இதனை சுருக்கமாக எம்.ஜி. என்பார்கள். அதன்படி, பெரிய நடிகர்களின் படங்களை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கிக்கொள்ளலாம். பிறகு திரையரங்கில் கிடைக்கும் வசூலைக் கொண்டு அப்பணத்தை மீட்டுக்கொள்வது நம் பொறுப்பு. ஒருவேளை படம் தோல்வி அடைந்துவிட்டால் போட்ட பணம் திரும்பக் கிடைக்காது. தயாரிப்பாளரிடம் முறையிடவும் முடியாது. இதனால் படம் வெளியான சில நாள்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்க வேண்டிய நிலைமையும் திரையரங்குகளுக்கு ஏற்படலாம். இதில் ஒரு தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட எதுவுமில்லை. ஏனெனில் அவர் கணக்கு எல்லாம் பார்த்துதான் ஒரு தொகைக்குப் படத்தை விற்பார். ஆனால் படம் வசூலாகாவிட்டால் பாதிப்பு திரையரங்குகளுக்கு மட்டும்தான்.

  இதற்குப் பதிலாக பிளைன் டேர்ம்ஸ் என்றொரு வியாபாரப் பிரிவும் உண்டு. அதன்படி, கிடைக்கும் வசூலை தயாரிப்பாளரும் திரையரங்க உரிமையாளரும் ஒப்பந்தப்படி பிரித்துக்கொள்வார்கள். இதனால் லாபமோ பாதிப்போ இருவருக்குமே அதில் பங்கு இருக்கும். ஆனால் எம்.ஜி. முறையில் நஷ்டம் என்றால் அது திரையரங்கு உரிமையாளருக்கு மட்டும்தான்.

  இந்நிலையில் விஜய் நடித்த தெறி படத்தை எம்.ஜி முறையில் வாங்கவேண்டும் அல்லது அதிக அட்வான்ஸ் தொகை செலுத்தவேண்டும் என்கிற நிர்பந்தம் இருந்ததால் செங்கல்பட்டுப் பகுதியைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தார்கள். ஆனால் தயாரிப்பாளர் தாணு தன் நிலையில் உறுதியாக இருந்ததால் இரு தரப்பினர் இடையே கடைசிவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

  இதனால் படம் வெளியான ஏப்ரல் 14 அன்று பெரும்பாலான செங்கல்பட்டுப் பகுதியைச் சேர்ந்த திரையரங்குகளில் தெறி வெளியாகவில்லை. ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த மாயாஜால், வேளச்சேரி லக்ஸ், வேளச்சேரி பிவிஆர்,  ஐநாக்ஸ் விருகம்பாக்கம், ஏஜிஎஸ், எஸ் 2, கணபதிராம், பொன்னேரி வெற்றிவேல் ஆகிய திரையரங்குகளில் தெறி வெளியாகியுள்ளது.  திரையரங்கு உரிமையாளர்கள் சிலர் டெபாசிட், அட்வான்ஸ் என எந்தத் தொகையுமே தரமுடியாது எனப் பிடிவாதமாக இருந்ததால் அங்கு தெறி படம் சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தாணு கேட்ட தொகை மிக அதிகமாக இருந்ததாலும் அதிக விலைக்கு டிக்கெட்டை விற்க முடியாத சூழல் நிலவுவதாலும் படத்தை வாங்குவதில் கருத்துவேறுபாடுகள் தோன்றின என்று திரையரங்கு அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

  சென்னைப் புறநகர்ப் பகுதியின் புகழ்பெற்ற திரையரங்கான குரோம்பேட்டை வெற்றி-யிலும் தெறி படம் வெளியாகவில்லை. இதுகுறித்து அத்திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

  முடிந்தவரை போராடிப் பார்த்தோம். ஆனால் வியாபார ஒப்பந்தம் முடிவாகவில்லை. இது சினிமா துறைக்குப் பெரிய நஷ்டம். மிகவும் வருத்தமாக உள்ளது. தெறி படத்துக்காக வெற்றி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

  மேலும் இதுதொடர்பாக பலரும் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:

  பிரச்னை மிகவும் வெளிப்படையானது. விநியோகஸ்தர்கள் மிகவும் அதிகமான அட்வான்ஸ்/ எம்.ஜி. கேட்கிறார்கள். இதுபோன்ற ஒரு தொகையை நாங்கள் எந்தவொரு விஜய் படத்துக்கும் வழங்கியதில்லை. இந்தத் தொகை நகரத்தின் மல்டிபிளெக்ஸ்களுக்கும் எங்களைப் போன்ற சினிகாம்ப்ளெக்ஸ்களுக்கும் வெவ்வேறாக உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தின் வசூல் என்பது ஒரு படத்தின் 20-25% வசூலாகும். 

  tweet1.jpg 

  ரஜினிக்குப் பிறகு விஜய், அஜீத் படங்களுக்கு அதிக அட்வான்ஸ் வழங்குகிறோம். ஆனால் எந்திரன் படத்தின் விலையை விடவும் தெறியின் விலை அதிகமாக இருந்தால் என்ன செய்வது?

  கடந்த 5 வருடங்களாக காசி, வெற்றி, ராக்கி, கங்கா போன்ற திரையரங்குகளுக்கு மினிமம் கியாரண்டி (எம்.ஜி.) தொகை கேட்கப்படவில்லை. இப்போது தெறி படத்துக்கு மட்டும் கேட்பது ஏன்?

  எம்.ஜி என்பது போட்டியுள்ள மையங்களில் மட்டுமே கேட்கப்படும். குரோம்பேட்டை போன்ற பல படங்களைத் திரையிடும் பகுதிகளில் அல்ல. எம்.ஜி. என்பது இங்கு வழக்கொழிந்த ஒன்று.

  புறநகர்களில் உள்ள மல்டிபிளெக்ஸுகளுக்கு உள்ளது போன்ற ஒரு வியாபார விகிதம் ஏன் எங்களுக்குத் தரப்படுவதில்லை? அவர்களை விடவும் அதிக அளவிலான தொகையை (ஷேர்) நாங்கள் தருகிறோம்.

  tweet2.jpg 

  ஒரு படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு திரையரங்குக்கு ரூ. 20 லட்சம் கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரிகிறது. எனில், அப்போது ரூ. 30 லட்சம் கேட்டால் என்ன செய்வீர்கள்?

  தெறி படம் வெளியாகாததால் எங்களுக்கு மகிழ்ச்சி எதுவும் கிடையாது. பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவது கெளரவத்துக்குரியது.

  செங்கல்பட்டுப் பகுதியில் தெறி ரூ. 8 கோடி வசூல் செய்கிற நிலைமை இருந்தபோது படம் வெளியாகாததால் திரைத்துறைக்கு நஷ்டம் என்று கூறினேன். இப்போது ரூ. 3 கோடி வசூல் மட்டுமே செய்யக்கூடும்.

  தெறி பிரச்னை தொடர்பாக பேசிவருகிறோம். நாளை இரவு (அதாவது இன்று) வரை கெடு வைத்துள்ளோம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai