இயக்குநர் விஜய்- நடிகை அமலா பால் விவாகரத்து கேட்டு மனு தாக்கல்

திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளுக்குள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திரைப்பட இயக்குநர் விஜய்யும், நடிகை அமலா பாலும் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இயக்குநர் விஜய்- நடிகை அமலா பால் விவாகரத்து கேட்டு மனு தாக்கல்

திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளுக்குள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திரைப்பட இயக்குநர் விஜய்யும், நடிகை அமலா பாலும் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை அமலாபா (25). கடந்த 2010-இல் தமிழ் திரைப்பட துறையில், "வீரசேகரன்' என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் "சிந்து சமவெளி', "மைனா', "தெய்வத் திருமகள்', "தலைவா' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதே போன்று, அஜீத் நடிப்பில் வெளியான "கிரீடம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல். விஜய். தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன்.

பின்னர், "மதராசப் பட்டினம்', "தலைவா', "சைவம்' உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி முன்னணி இயக்குநரானார். இவரது இயக்கத்தில் உருவான "தலைவா' படத்தில், நடிகர் விஜய்-க்கு ஜோடியாக அமலா பால் நடித்தார்.

அப்போது இயக்குநர் விஜய், அமலா பால் ஆகியோர் இடையே நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது. இரு வீட்டார் ஒப்புதலுடன், கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 7-இல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பின்னர் கணவருடன் சென்னையில் அமலா பால் குடியேறினார். அடையாறு போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக் குடித்தனம் நடத்தினர்.

சுமார் இரண்டு ஆண்டுகளான நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், விரைவில் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

திருமணத்துக்கு பின்னரும் அமலா பால் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்ததால், இயக்குநர் விஜய் வீட்டார் விரும்பவில்லை. இதன் காரணமாகவே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதாகவும் கூறப்பட்டது.

இருவரும் விவாகரத்து செய்வது குறித்து, இயக்குநர் விஜய் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினர். இந்த நிலையில், இருவரும் தனித் தனியாக காரில் சனிக்கிழமை நீதிமன்றத்துக்கு வந்தனர்.

பின்னர், சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மரியா டில்டாவிடம் மனமொன்றி இருவரும் பிரிய விரும்புவதாகவும், எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், பரஸ்பர முறையில் பிரிவதால், "ஜீவனாம்சம்', சொத்துகள் கேட்க மாட்டோம் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். நீதிமன்றத்துக்கு வந்த பின்னரும் விஜய்-அமலா பால் ஆகிய இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. தனித் தனியாக அமர்ந்து இருந்தனர்.

பின்னர், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்னரும் இருவரும் தனித் தனியாக அவரவர் காரில் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com