பேனர் கலாச்சாரத்தை புறக்கணிக்கும் திரைப் பிரபலங்கள்! ரசிகர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்களா?

திரையுலகத்தில் தல - தளபதி என்று அழைக்கப்படும் விஜய், அஜித் உள்ளிட்டோர் இந்த விவாகரத்தை கையில் எடுத்திருக்கும் நிலையில் அனைத்து திரைப் பிரபலங்களும் இதனை தனது ரசிகர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
பேனர் கலாச்சாரத்தை புறக்கணிக்கும் திரைப் பிரபலங்கள்! ரசிகர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்களா?

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ(23) என்ற இளம்பெண் பி.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் பள்ளிக்கரணை வழியாக சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அங்கிருந்த கட்சிப் பேனர் ஒன்று காற்றில் பறந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதில் சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதே நேரத்தில் அவ்வழியாக வந்த லாரி ஒன்று சுபஸ்ரீ மீது மோதியது. இதில் அவர் உயிருக்கு போரடிய நிலையில் மருத்துவமனை கொண்டு சென்ற வழியில் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலரும் சுபஸ்ரீயின் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பேனர் கலாச்சாரத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து பல தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். 

இந்நிலையில், பேனர் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்பதை திரையுலகப் பிரபலங்கள் கையில் எடுத்துள்ளன. விஜயின் 'பிகில்' பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதேபோன்று பேனர்கள் வைப்பதை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையானவற்றை கொடுத்து உதவுங்கள். மேலும், ரத்த தானம் செய்யுங்கள் என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார். 

எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்களை இடையூறு செய்யும் விதத்தில் பேனர்கள் வைப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் நடிகர்கள் விஜய், சூர்யா இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மதுரையில் அஜித் ரசிகர்களின் சுவரொட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக  பரவி வருகிறது. அந்த சுவரொட்டியில், 'சுபஸ்ரீயின் இழப்பு மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னால் நாம் சிந்தித்து செயல்பட தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவிக்கின்றது. இனிமேலாவது சிந்தித்து செயல்படவும். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 

தல அஜித் படங்களுக்கு அவர் புகழைப் பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம்' என்று உறுதிமொழி எடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 

'பேனர்கள் வைக்க வேண்டாம்; மாறாக ஏழைக்குழந்தைகளுக்கு உதவுங்கள்' என கடந்த 2013ம் ஆண்டு அஜித் கூறிய செய்தித்தாள்களின் பிரசுரங்களும் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 3 -யை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் அவர் சுபஸ்ரீ-யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, முன்னதாகவே தனது ரசிகர்களுக்கு, கட்சித் தொண்டர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தியதாகக் கூறினார். 

திரையுலகத்தில் தல - தளபதி என்று அழைக்கப்படும் விஜய், அஜித் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களே இந்த விவாகரத்தை கையில் எடுத்திருக்கும் நிலையில் அனைத்து திரைப் பிரபலங்களும் இதனை தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக பேனர் கலாச்சாரத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com