சுடச்சுட

  
  vairamuthu

   

  "மக்கள் கவிஞர்' என்று அழைக்கப்பட்ட இன்குலாப் (73), சென்னையில் வியாழக்கிழமை (டிச.1) காலமானார்.

  உடல் நலப் பாதிப்பின் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார். கவிஞர் இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் ஹமீது. ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களைக் கிளர்ச்சி அடையச் செய்யும் வகையிலே அவரது எழுத்துகள் இருந்தன. சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். 2006 -ஆம் ஆண்டு "கலைமாமணி' விருது அவருக்கு வழங்கப்பட்டபோது, ஈழத் தமிழர்களைக் காக்க தமிழக அரசு காக்கத் தவறிவிட்டதாகக் கூறி, அந்த விருதை அவர் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் இன்குலாப்வுக்கு, கமருன்னிசா என்ற மனைவியும், செல்வம், இன்குலாப் என்ற இரு மகன்களும், ஆமீனா பர்வீன் என்ற மகளும் உள்ளனர்.

  இன்குலாபின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்குலாப் என்ற கவிஞனின் பெளதிக உடல் மறைந்துவிட்டது. தான் நம்பிய தத்துவத்தோடு சமரசம் செய்துகொள்ளாத கவிஞன், வாழ்வோடு சமரசம் செய்துகொள்ளாமல் சாவைத் தழுவியிருக்கிறான். எந்த மழைக்காலமும் அந்தப் புரட்சித் தீயை அணைத்துவிட முடியாது. விருதுகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத கவிஞன், என் பிறந்த நாளில் வழங்கப்பட்ட கவிஞர்கள் திருநாள் விருதை மட்டும் பெற்றுக்கொண்டு என்னைப் பெருமைப் படுத்தினார். அவர் கவிதைகள் மரணத்தின் விரல்களால் தொடமுடியாதவை. இன்குலாப் மரணத்தை வென்ற கவிஞன். மழையோடு சேர்ந்து அழுகின்றன என்னிரண்டு கண்ணீர்த் துளிகளும் என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai