சுடச்சுட

  

  சென்னை சாலிகிராமத்தில் துணை நடிகை கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
  சேலத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ என்ற ஜெயசீலி. இவர் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். அதற்காக, சென்னை சாலிகிராமம் அருகே உள்ள காந்தி நகர் பெரியார் தெருவில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
  இந்த நிலையில், சேலத்தில் வசிக்கும் அவரது சகோதரர் பிரேம்குமார், கடந்த 4 -ஆம் தேதி தனது சகோதரியைப் பார்க்க சாலிகிராமம் வந்தார். அப்போது அங்கு வீட்டில் ஜெயசீலி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
  இதுகுறித்து அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், மாங்காட்டைச் சேர்ந்த அசீனா பேகம் (32), அவருடைய நண்பர் சிராஜூதீன் (35) ஆகியோர் சேர்ந்து ஜெயசீலியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் கிடைத்த தகவல்கள்:
  அசீனாபேகத்துக்கும், ஜெயசீலிக்கும் இடையே தொழில்ரீதியாக பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்மையில் அவர்கள் இருவருக்கும் இடையே தொழில் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டதாம். ஆனால் அதை அசீனா பேகம் வெளியே காட்டிக் கொள்ளாமல், ஜெயசீலியிடம் நட்புடனே பழகுவதுபோல நாடகமாடியுள்ளார்.
  இந்நிலையில் அசீனாபேகம், சிராஜூதீன் ஆகியோர் ஜெயசீலி வீட்டுக்கு கடந்த 2 -ஆம் தேதி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அசீனாபேகமும், சிராஜூதீனும் சேர்ந்து ஜெயசீலியை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தார்களாம். பின்னர் அவர்கள், ஜெயசீலி வைத்திருந்த 8 பவுன் தங்கநகையை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியதாக தெரிகிறது.
  தனது குடும்ப வறுமையின் காரணமாகவே நகையைக் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் ஜெயசீலியை கொலை செய்ததாக அசீனாபேகம் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடமிருந்த ஜெயசீலியின் தங்கநகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai