சுடச்சுட

  

  சோதனைகளையும் சாதனையாக்கியவர் ஜெயலலிதா: ரஜினிகாந்த்

  By DIN  |   Published on : 11th December 2016 11:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajinia

  தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ராமசாமி ஆகியோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நடிகர்

  தனக்கு வந்த சோதனைகளையும் எதிர்நீச்சல் போட்டு அதை சாதனைகளாக மாற்றியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.
  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ராமசாமி ஆகியோருக்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
  இந்தக் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 1996-ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்து பேட்டி கொடுத்து அவர் மனதை புண்படுத்தினேன். அதனால் அப்போது அவரின் தோல்விக்கு நான் முக்கிய காரணமாக இருந்தேன். அது அவரது மனதை பெரிதும் புண்படுத்தியிருக்கக் கூடும். அதையடுத்து எனது மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணத்தை எனது போயஸ் கார்டன் இல்லத்திலேயே நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.
  அப்போது, திருமண அழைப்பிதழை ஜெயலலிதாவிடம் கொடுக்க தர்மசங்கடமாக இருந்தது. இருந்தாலும் அவரை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்டேன். அவர் என்னைச் சந்திக்கவும் நேரம் ஒதுக்கினார். ஆனால் திருமணத்திற்கு வரமாட்டார் எனக் கருதி சம்பிரதாயத்திற்காக அழைப்பிதழ் அளித்தேன். இதே தேதியில் கட்சித் தொண்டரின் திருமணத்தில் பங்கேற்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் அதை ரத்து செய்து விட்டு உங்களது மகள் திருமணத்திற்கு வருகிறேன் என்றார்.
  அதேபோல், சொன்னபடியே வந்தார், அவரின் முன்னிலையில் எனது மகள் திருமணம் நடைபெற்றது. ஜெயலலிதாவின் மனம் பொன்மனம் போன்றது. சில சமயங்களில் குருவை சிஷ்யர்கள் விஞ்சிவிடுவார்கள். அந்த விதத்தில் தன் அரசியல் குருவான எம்.ஜி.ஆரை தனது வியூகத்தாலும், திட்டங்களாலும் விஞ்சியவர் ஜெயலலிதா. பூமிக்கடியில் உள்ள கார்பன் வெப்பத்தாலும், கால ஓட்டத்தாலும் வைரமாக மாறிவிடும். அதை வெளியே எடுத்து பக்குவப்படுத்தி தேய்த்து, தேய்த்து வைரமாக ஜொலிக்க வைப்பார்கள். அதேபோல் ஆணாதிக்கம் மிகுந்த இச்சமூகத்தில் அழுத்தப்பட்டு, தேய்க்கப்பட்டு வைரமாக ஜொலித்தவர்தான் ஜெயலலிதா.
  அவர் மறைந்து 7 நாள்கள் ஆன நிலையிலும் கோடிக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். இது இறைவனின் ஆசிர்வாதம். தனது துணிச்சலாலும், எதிர்நீச்சலாலும் சோதனைகளையும் சாதனைகள் ஆக்கியவர் ஜெயலலிதா. அவர் வாழ்க்கை நமக்கெல்லாம் பாடம். பெண்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கான முன் உதாரணம். அவரை பின்பற்றி பயணித்தால் சமூகத்தில் நாமும் உயரலாம். அவருக்கு என் கண்ணீர் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்.
  சோ எனக்கு நெருங்கிய நண்பர்: மறைந்த சோவும் மிகவும் நெருக்கமான நண்பர். ஆனால், ஜெயலலிதாவுக்கு என நெருக்கமான நண்பர்கள் கிடையாது. அந்த இடத்தில் இருந்த ஒரே நபர் சோ மட்டுமே. ஜெயலலிதா மறைந்த ஓரிரு நாள்களில் சோவும் மறைந்து விட்டார். இந்த இருவர் மறைவும் அவர்களுக்குள் இருந்த நட்பை பறைசாற்றுகிறது. அவருக்கும் என் கண்ணீர் அஞ்சலி என்றார் ரஜினிகாந்த்.
  விழாவில் நடிகர்கள் சிவகுமார், வடிவேலு, விவேக், நடிகைகள் லதா, வாணிஸ்ரீ, செம்மீன் ஷீலா, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர். நாசர், விஷால், பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்கள் நிர்வாகிகளும், பல்வேறு நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.


  கமல் கடிதம்

  மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க முடியாத கமல் இரங்கல் கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்தை நடிகை
  ஸ்ரீபிரியா அனைவருக்கும் முன்னிலையிலும் வாசித்தார். அதில், "மேல்கோட்டை இளவரசி, நம் கோட்டை ஆளவென்று, ஈன்ற அந்தக் கழகத்துக்கு, இழந்த தமிழகத்துக்கு, சூழ்ந்த சுற்றத்தார்க்கு என சார்ந்த அனைவருக்கும் நம் ஆழ்ந்த அனுதாபங்கள்' என தனது கடிதத்தில் கமல் குறிப்பிட்டிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai