வெற்றிகளால் என் காதல் பாதிக்கப்பட்டது: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

எனக்குரிய மரியாதையை அவர் தரவில்லை. இதனால் மதிப்பில்லாதவளாக நான் உணர்ந்தேன்.
வெற்றிகளால் என் காதல் பாதிக்கப்பட்டது: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

சேதன் பகத்தின் ஒன் இண்டியன் கேர்ள் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பேட்டியளித்ததாவது:

ஒன் இண்டியன் கேர்ள் புத்தகத்தைப் பற்றி?

தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையின் இடையே இன்றைய பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்தப் புத்தகத்தைப் படித்தபோது நான் அழுதுவிட்டேன். என் அனுபவத்திலிருந்து எடுத்த சம்பவங்கள் போல சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.

ஆண்கள் உங்களுடைய வெற்றியில் பாதுகாப்பின்மையை உணர்ந்தார்களா?

நான் நடித்த படங்கள் நன்றாக ஓடாத சமயத்தில், ஒருவரை டேட்டிங் செய்தேன். அவர் அப்போது என்னைவிடவும் வெற்றிகரமான நடிகராக இருந்தார். எனக்குரிய மரியாதையை அவர் தரவில்லை. இதனால் மதிப்பில்லாதவளாக நான் உணர்ந்தேன். இது நான் சிறந்த நடிகையாக மாற ஊக்கம் அளித்தது.

காதல் உறவுகளில் என்னுடைய அந்தஸ்தும் வெற்றியும் எனக்கு எதிராகவே இருந்தன. நான் வெற்றிகரமான நடிகையாக இருந்தபோது என்னைக் காதலித்தவர்கள் பொறாமைப்பட்டார்கள். என்னுடன் போட்டியிட்டார்கள். இது தாங்கமுடியாததாக எனக்கு இருந்தது. காதலர் மீதான விருப்பம் குறைய ஆரம்பித்தது. இந்தச் சூழல்களில்,  நம்முடன் போட்டி போட்டு, நம்மை அழிக்கவே ஆண்கள் விரும்புகிறார்கள். நம்பிக்கை என்பது காதலில் இல்லாமல் ஆகிவிடுகிறது.  எதனால் இப்படிச் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் இது மிகவும் கொடுமையானது. நான் தோல்வி பெற்ற நடிகையாக இருந்தபோது நான் எதற்கும் லாயக்கு இல்லை. ஆனால் இதே நான் வெற்றியடைகிறபோது என்னுடன் போட்டி போடுகிறார்கள். இதில் காதலுக்கு எங்கே நேரம் இருக்கிறது?

இனியும் காதலிக்கமுடியும் என எண்ணுகிறீர்களா?

இன்னும் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள் அல்லவா! எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது (சிரிக்கிறார்). 20களின் மத்தியில் இருந்தபோது ஒரு ஆங்கிலேய மருத்துவரைக் காதலித்தேன். அவர் நடிகர் அல்லர். நான் அவரைவிடவும் அதிகம் சம்பாதித்துவந்தேன். என் சூழலுடன் அவரால் ஒத்துப்போகமுடியவில்லை. என் நண்பர்களிடம், நான் அவரைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்றே ஒவ்வொருமுறையும் கேட்பார். அப்படியொரு மன அழுத்தத்தில் அவர் இருப்பதைப் பார்க்கும்போது இதயமே உடைவதுபோல இருந்தது.

ஒருமுறை லண்டனில் உள்ள பெரிய உணவு விடுதிக்குச் செல்லலாம் என்று கூறினேன். அவர் அதை கூகுளில் பார்த்துவிட்டு, உணவுக்காக நான் இவ்வளவு தொகையைச் செலவு பண்ண விரும்பவில்லை என்றார்.  பரவாயில்லை. எனக்கு அங்குப் போகவேண்டும். நான் பணம் தருகிறேன் என்றேன்.

பிறகு இருவரும் அங்குச் சென்றோம். அருமையான டின்னர் அமைந்தது. கிரெடிட் கார்ட் மூலமாகப் பணம் கட்ட முயன்றபோது அவர் பதற்றமானார். வெயிட்டர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று அந்தப் பெண் முன்பே சொன்னார். அதைத் தொடர்ந்து எங்களிடையே சண்டை மூண்டது. பணமளிக்க நான் முயன்றதை மிகவும் நொந்துகொண்டேன். ஒரு சினிமா நட்சத்திரமாக இருந்தாலும் அவருக்காக நான் உடைகளைச் சலவை செய்கிறபோது அவரால் ஏன் இதற்கு ஒத்துப்போக முடியவில்லை. இந்தச் சூழலில் உங்கள் காதலருடன் எப்படி ஒரு நல்ல ஆரோக்கியமான உறவு வளரும்?

தமிழில்: எழில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com