Enable Javscript for better performance
பிரியங்கா சோப்ராவின் டீஷர்ட் வாசகம்- Dinamani

சுடச்சுட

  

  சர்ச்சையை ஏற்படுத்திய பிரியங்கா சோப்ராவின் டீஷர்ட் வாசகம்!

  By உமா ஷக்தி  |   Published on : 15th October 2016 06:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  priyanka-chopra_a2080c50-c105-11e5-b65a-c4d36a19bd7a

  சமீபத்தில் பிரபல வெளிநாட்டுப் பத்திரிகையின் இந்தியப் பதிப்பின் அட்டைப்படத்தில் வெளிவந்த ஒரு நடிகையின் புகைப்படம் இணைய உலகில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. மாடல், முன்னாள் உலக அழகி, கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என உலகப் புகழ் பெற்ற இந்தி(ய) நடிகை பிரியங்கா சோப்ரா தான் அவர்.

  பிரியங்காவின் உடையோ பேட்டியோ சர்ச்சையைக்குக் காரணமில்லை. அவர் அணிந்திருந்த டீஷர்ட்டில் அச்சிடப்பட்ட வாசகங்களில் தான் வில்லங்கம் . Conde Nast Traveller என்ற பயணம் சார்ந்த கட்டுரைகள் வெளியிடும் பத்திரிகையின் ப்ராண்ட் அம்பாசிடர் ப்ரியங்கா சோப்ரா. அந்த இதழின் ஆறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரியங்கா சோப்ராவுக்காக பிரத்யேகமான வாசகங்களுடன் ஒரு டீ ஷர்ட்டை வடிவமைத்திருந்தார்கள். அதை அணிந்து பிரியங்கா சோப்ரா போஸ் தந்த அப்புகைப்படத்தை பிரியங்கா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அதைப் பார்த்த பலர் அந்த வாசகங்களைப் படித்து எரிச்சல் அடைந்தார்கள். உணர்வாளர்கள் சிலர் கொந்தளிப்பு அடைந்து எதிர்வினை புரிந்துள்ளார்கள்.

  அப்படி என்ன அந்த டீ ஷர்ட்டில் எழுதப்பட்டுள்ளது? அகதி, புலம் பெயர்ந்தவர், வெளிநாட்டவர், பயணி என்று வரிசையாக எழுதி கட்டம் கட்டப்பட்டு, பயணி நீங்கலாக மற்றவற்றை அடித்தல் குறியிடப்பட்டிருக்கும். இந்தப் புகைப்படம் சொல்லும் செய்தியை இப்படி புரிந்து கொள்ளலாம் – நான் அகதியல்ல, புலம் பெயர்ந்தவளும் அல்ல, வந்தேறி இல்லை, நான் ஒரு பயணி மட்டுமே. பிரியங்காவின் இந்த டீ ஷர்ட் வாசகத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. பிரியங்காவின் ரசிகர்களுக்கே கூட இது அதிருப்தியை அளித்துள்ளது.  

  அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் என்றால் தாழ்ந்தவர்களா? பயணிகள் எல்லாரையும் விட மேலானவர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள் உணர்வாளர்கள் சிலர். பத்திரிகையில் வெளியான பேட்டியில் பிரியங்கா தனக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் என்றும் தன்னை ஒரு நாடோடி என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சர்ச்சைக்கு பதில் சொல்லும் விதமாக ட்ராவலர் பத்திரிகை கூறியது, ‘நாங்கள் சர்ச்சைக்காக இந்த வாசகம் கொண்ட டீ ஷர்ட்டை வடிவமைக்கவில்லை. மதத்தின் பெயராலும், இன வெறியாலும், நிலம் வேண்டியும், போரில் மனிதர்களை கொன்று குவிக்கும் மனித நேயமற்ற செயல் உலகம் முழுவதும் காலந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு என்ன? இயற்கை எல்லோருக்கும் பொது, இதில் எல்லைகள் வகுத்தவர் யார்? உலகத்தை சுற்றிப் பார்க்க எவ்விதமான தடைகளும் இனிவரும் காலங்களில் இருக்கக் கூடாது, இதை வலியுறுத்தவே நாங்கள் எங்கள் ப்ராண்ட் அம்பாசிடரான பிரியங்கா சோப்ராவுக்கு இத்தகைய டீ ஷர்ட்டை வடிவமைத்து அவரை அட்டைப் படமாக்கினோம். இது யார் மனத்தையும் புண்படுத்தவோ, விளம்பரத்துக்காகவோ இல்லை. உண்மையில் எங்கள் நோக்கம் அதுதான். உலகத்தை திறந்து வையுங்கள். அதற்கு முதலில் உள்ளத்தை திறந்து வையுங்கள் என்று சொல்லாமல் சொல்வதற்குத்தான் அந்த வார்த்தைகளை பதிவு செய்தோம்’ என்றார்கள்.

  அவர்கள் கூற்றில் உண்மையிருக்கிறதோ இல்லையோ அது விமரிசனம் செய்பவர்களுக்கு முற்றிலும் சமாதானத்தைத் தரவில்லை. இந்தியாவில் எத்தனையோ பயணிகள் நாடு கடந்து பயணம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு விளம்பரத்துக்கென்றே பிரியங்கா சோப்ராவை தேர்ந்தெடுத்து அத்தகைய வாசகங்களை அணியச் செய்துள்ளது நிச்சயம் பப்ளிசிட்டிக்காகத் தான். பல்லாயிரணக்கானவர்களின் துயர் மிகுந்த அகதி வாழ்க்கை இவர்கள் வியாபார உத்திக்காக கேலிப் பொருளாகிவிட்டது என்று மனம் கொந்தளித்துள்ளார்கள்.

  நல்ல நோக்கத்தில் பயணி பத்திரிகை இக்கருத்தை முன்னெடுத்திருந்தாலும் அதை அவர்கள் செயல்படுத்திய விதம் கண்டனத்துக்குரியது. ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பது உண்மையெனில் அந்த டீ ஷர்ட் வாசகம் நிச்சயம் இரண்டாம் வகையை தான் செய்கிறது. மனங்களை கூறு போட்டுப் பார்ப்பது அழகல்ல. அது பத்திரிகையாக இருந்தாலும் சரி நடிகையாக இருந்தாலும் சரி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai