சுடச்சுட

  

  பாகுபலி 2: அட்டகாசமான முன்பதிவு! வசூல் சாதனைகள் உடைபடுமா?

  By எழில்  |   Published on : 26th April 2017 02:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  baahubali2-1111xx_main1

   

  பாகுபலி 2 படம் பார்க்க ஆவலாக இருக்கிறீர்களா? ஆம் எனில் உடனே சென்று முன்பதிவு செய்துவிடுங்கள். அந்தளவுக்கு மிளகாய் பஜ்ஜி போல அதன் டிக்கெட்டுகள் முன்பதிவு வழியாக உடனக்குடன் விற்றுத் தீர்கின்றன. கொஞ்சம் தாமதித்தாலும் அடுத்த வாரம், கதையெல்லாம் ஏற்கெனவே தெரிந்துகொண்டு, கட்டப்பா பாகுபலியை கொன்றது ஏன் என்கிற ரகசியத்தையும் அறிந்த பிறகே படம் பார்க்க நேரிடும். ஜாக்கிரதை.     

  பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் -  'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், ஏப்ரல் 28 அன்று வெளிவருகிறது. 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

  இந்தியாவில் 6500, வெளிநாட்டில் 2000 என மொத்தமாக 8500 திரையங்குகளில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 600 திரையரங்குகளில் வெளியாகிறது. 

  இந்நிலையில் படத்தின் முன்பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நீண்டநாள் எதிர்பார்ப்பு என்பதால் டிக்கெட்டுகளுக்குப் பலத்த டிமாண்ட் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக நகரங்களில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் முதல் மூன்று நாள்களுக்கான டிக்கெட்டுகள் வேகவேகமாக விற்றுவருகின்றன. இதனால் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுக்க முதல் மூன்று நாள்களுக்கு நூறு சதவிகித வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  சமூகவலைத்தளங்கள் வழியாக பாகுபலி படத்தின் டிக்கெட் நிலவரம் குறித்து தகவல்கள் வேகமாகப் பரிமாறப்படுவதால் எங்கெங்கெல்லாம் டிக்கெட்டுகள் கிடைக்கின்றனவோ உடனே அந்த டிக்கெட்டுகளை வாங்கப் பலரும் முயற்சி செய்கிறார்கள். இதனால் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் நிச்சயம் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  பாகுபலி 1 படம் இந்தியாவில் 4000 திரையரங்குகளில் வெளியாகி, முதல் நாளன்று இந்தியா முழுக்க ரூ. 54 கோடி வசூலை அள்ளியது. கடைசியில் இதன் வசூல் ரூ. 650 கோடி வரை சென்றுதான் நின்றது. இதையடுத்து பாகுபலி 2 முதல் நாளன்றே ரூ. 100 கோடி வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அமீர் கான், சல்மான் கான், ரஜினி படங்களுக்கு இணையான வசூல் இந்தியா முழுக்க கிடைக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியா முழுக்க அட்டகாசமாக நடைபெற்றும் வரும் இதன் முன்பதிவு, வருங்கால வசூல் சாதனைகளை முன்கூட்டியே அறிவிப்பதாக உள்ளது. 

  தென்னிந்திய நடிகர்கள் நடித்துள்ள பாகுபலி 1 படம் தமிழ், தெலுங்குப் பதிப்புகளில் அதிக வசூல் அள்ளியதுகூட பெரிய அதிசயம் இல்லை என்று கூறலாம். ஆனால் ஹிந்தியிலும் ரகளை செய்ததுதான் ஆச்சர்யம். இப்போது பாகுபலி 2 ஹிந்திப் பதிப்பு பல சாதனைகளை உடைக்கும் என்று நிபுணர்கள் கூறிவருகிறார்கள்.

  தற்போது நடைபெற்றுவரும் சூறாவளி முன்பதிவுகள் இந்தப் படத்தின் மீதான ஆச்சர்யத்தை மேலும் அதிகப்படுத்துகின்றன. 28-ம் தேதி முதல் பழைய வசூல் சாதனைகள் உடைபடும் நேரம் ஆரம்பமாகிவிடும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai