ஜப்பானில் பெண்களுக்கு காதலிக்க நேரமில்லை.... ஏன் தெரியுமா?

ஜப்பானில் பெண்களுக்கு காதலிக்க நேரமில்லை.... ஏன் தெரியுமா?

நிலமை இப்படியே சென்றால் ஜப்பானியப் பெண்களுக்கு காதல் என்றாலே வேப்பங்காயாகக் கசக்கத் தொடங்கி விடக்கூடும் என்கிறது மேற்கண்ட சர்வே.


ஜப்பானில் காதலில் விழுவதற்குப் பொருத்தமான வயதிலிருக்கும் இளம்பெண்களில் 60 சதவிகிதம் பேர்களுக்கு காதலிக்க நேரமே இல்லையாம். அலுவலக வேலை நேரம் போக வீட்டிலும் அவர்களுக்கான வேலைகள் சரியாக இருப்பதால் பலரும் வீடு, வீடு விட்டால் அலுவலகம்... மீண்டும் வீடு என்றே உழன்று கொண்டிருக்கிறார்கள். காரணம் வேலைப்பளுவால் மூளையோடு சேர்ந்து மனமும் உடலும் கூட அதிகச் சோர்வுக்கு உள்ளாவதால் வார இறுதிகளில் காதலரோடு வெளியில் சுற்றவோ, விடுமுறையைக் கொண்டாடவோ ஆர்வமற்றும் போகிறதாம் அவர்களுக்கு.

பெரும்பாலான பெண்களும் விடுமுறை நாட்கள் என்றால் வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஹாயாக சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சித் தொடர்களைக் கண்டுகளிக்கவே விரும்புகிறார்களாம். காதலரோடு ஊர் சுற்றுவதை விட இதில் கிடைக்கும் ஆனந்தமே பேரானந்தம் என்று நினைக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள் என ஜப்பானைச் சேர்ந்த cocoloni.jp எனும் இணையதள சர்வே முடிவு ஒன்று கூறுகிறது.

ஜப்பானில் மட்டுமல்ல தெற்கு ஆசியாவைப் பொறுத்தவரை இன்று ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமே. அலுவலகக் காதல்கள் நீண்ட கால நம்பிக்கைக்கு உரியவை அல்ல, கண்டதும் காதல் என்பது மாதிரியாகக் குருட்டுத் தனமாகக் காதலில் விழுவதும் பல நேரங்களில் ஒத்து வராததோடு தீவிர மன உளைச்சலுக்கும் காரணமாகி விடுகிறது. எனவே காதலிப்பதை விட தொலைக்காட்சித் தொடர்களைக் கண்டு பொழுது போக்குவது தேவலாம் என்ற முடிவுக்கு பெண்கள் வந்து விட்டார்கள். பற்றாக்குறை விடுமுறை தினங்கள். சுமக்க முடியாத அளவுக்கு அதிக வேலைப்பளு இரண்டும் தான் இதற்கு முழு முதன்மையான இரு காரணங்கள் என இந்த இணையதள சர்வே நிகழ்வை நடத்திய Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் தெரியவந்தவை;

  • டேட்டிங் செல்லும் பெண்களில் நான்கில் ஒருவர் அச்சமயத்தில் வாரம் முழுவதும் நீடித்த வேலைப்பளுவினால் நேர்ந்த சோர்வின் காரணமாக தூங்கி விடுவதால் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக் கொள்தல் எனும் டேட்டிங் கான்செப்ட்டே அடிபட்டுப் போகிறது. இதனால் டேட்டிங் செல்வதற்கான காரணமே அர்த்தமற்றதாகி விடுகிறது என்கிறது அந்த சர்வே;
  • அதுமட்டுமல்ல; ஜப்பானைச் சேர்ந்த ஆன்லைன் டேட்டிங் இணையதளமான லவ்லி.காமிலிருந்து சரசரவெனப் பல பெண்கள் வெளியேறியதன் பின்னணி ஆன்லைன் டேட்டிங்கும், அதன் பிற்சேர்க்கையாக உருவாகவிருக்கும் புதுப் புதுக் காதல்களும் ‘சுத்த டைம் வேஸ்ட்’ என்று அவர்கள் கருதத் தலைப்பட்டதால் தான் என அவ்விணையதளம் குறிப்பிடுகிறது.
  • காதலிப்பதில் நேரம் செலவளிப்பதைக் காட்டிலும் தங்களுடன் இணைந்து சிறந்த குழந்தைகளைப் பெற்றுத் தரவல்ல ஐடியல் கணவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே சாலச்சிறந்தது என ஜப்பானியப் பெண்கள் கருதத் தொடங்கியதால் அவர்களது தேடலில் முதலிடம் பெறுபவர்கள் கணவர்களைத் தேடித்தரும் ஆன்லைன் திருமண இணையதளங்களே. மாறாக காதலிக்கிறோம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம் என நேரத்தை விரயம் செய்ய இப்போதைக்கு ஜப்பானியப் பெண்கள் தயாரில்லை என்கிறது சர்வே!
  • 1980 களில் 20 வயதுகளில் இருக்கும் ஜப்பானிய பெண்களில் 60 சதவிகிதம் பெண்கள் காதல்வயப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் தற்போது அவர்களது எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டே வந்து தற்போது அதலபாதாளத்தில் இருக்கிறது.

நிலமை இப்படியே சென்றால் ஜப்பானியப் பெண்களுக்கு காதல் என்றாலே வேப்பங்காயாகக் கசக்கத் தொடங்கி விடக்கூடும் என்கிறது மேற்கண்ட சர்வே.

ஜப்பானில் மட்டுமல்ல இப்போது தெற்காசியா முழுவதிலுமே பெண்களின் நிலமை இது தான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com