தொடரும் உள்ளிருப்புப் போராட்டம்: சேரனுக்கு ராதிகா, ராதாரவி ஆதரவு!

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்...
தொடரும் உள்ளிருப்புப் போராட்டம்: சேரனுக்கு ராதிகா, ராதாரவி ஆதரவு!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநரும் நடிகருமான சேரன், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். 

செல்லமே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான விஷால், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை சனிக்கிழமை அவர் வெளியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார் இயக்குநர் சேரன். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் விஷால், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரது முடிவு என்னைப் போன்ற பெரும்பான்மையான தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1,230 உறுப்பினர்களைக் கொண்டு ஆண்டுக்கு ரூ. 500 கோடி முதலீடு செய்து வரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால், எங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக எடுத்துள்ள முடிவு வேதனை அளிப்பதாக உள்ளது. அவர் தனது சுய வளர்ச்சிக்காக சங்கத்தின் பதவியை பயன்படுத்திக் கொள்வதாக உணர்கிறோம். திரைத்துறைக்கான மானியங்கள், வரிச்சலுகை, வரிக்குறைப்பு, டிக்கெட் விலை நிர்ணயிக்க அனுமதி, திருட்டு வி.சி.டி. தடுப்பு போன்ற அனைத்துக்கும் அரசை சார்ந்தே இயங்கவேண்டிய உள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் அரசுக்கு எதிராக விஷால் போட்டியிடுவது ஒட்டுமொத்த திரையுலகத்தையே முடக்கும் நிலைக்குத் தள்ளப்படும். விஷால் தேர்தலில் போட்டியிடுவது தயாரிப்பாளர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. இதனால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும். இதை வலியுறுத்தி தென்னிந்திய திரைப்பட சங்க வளாகத்தில் தயாரிப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் ராஜினாமா செய்யாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ராஜினாமா செய்யும்வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்றார். 

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார் சேரன். நடிகை ராதிகா, நடிகர் ராதாரவி ஆகியோர் சேரனை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். இந்தப் போராட்டத்துக்குப் பாதுகாப்பு கேட்டு ஆயிரம் விளக்கு காவல்துறையினரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com