தீரன் படம் போலவே நடந்துவிட்டதே!: பெரியபாண்டியன் மரணத்துக்கு நடிகர் கார்த்தி வருத்தம்!

தமிழக அரசு, காவல்துறை அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என்று நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்...
தீரன் படம் போலவே நடந்துவிட்டதே!: பெரியபாண்டியன் மரணத்துக்கு நடிகர் கார்த்தி வருத்தம்!

தமிழக அரசு, காவல்துறை அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என்று நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் நகைக்கடை ஒன்றில் கடந்த நவம்பர் 16ம் தேதி நடந்த நகைக் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகளைப் பிடிப்பதற்காக, கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர், மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், தலைமை காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் முதல்நிலைக் காவலர் சுதர்சன் ஆகியோர் ராஜஸ்தான் சென்றனர். அங்கு பாலி மாவட்டத்தில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்துள்ளார். மற்ற காவலர்கள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தமிழக காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியபாண்டியனின் மறைவுக்கு, தமிழக முதல்வர் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். உயிரிழந்த பெரியபாண்டியனின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரண நிதியை தமிழக அரசு அறிவித்ததோடு, அவருடைய இரண்டு மகன்களின் படிப்புச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் எனவும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்த பெரியபாண்டியனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், ஜெய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விமான நிலைய வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவருடைய உடலுக்கு முதலில் போலீஸார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின்னர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செலவம், அமைச்சர்கள் பாண்டியராஜன், ராஜலட்சுமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  பின்னர் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

ஆய்வாளர் பெரியபாண்டியன் உடல் அவரது சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு ஆய்வாளர் பெரியபாண்டியன் சொந்த ஊர் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதன்பின் பெரியபாண்டியனின் உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி.

சமீபத்தில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காவல்துறை அதிகாரியாக கார்த்தி நடித்திருந்தார். அக்கதாபாத்திரம் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் வாழ்க்கையையொட்டி உள்ளதால் பெரியபாண்டியன் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் கார்த்தி.

வீட்டில் இருந்த பெரியபாண்டியனின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதன்பிறகு பெரியபாண்டியனின் மரணம் குறித்து கார்த்தி கூறியதாவது:

பெரியபாண்டியன் இல்லத்துக்குச் சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம், 'பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தானுக்குச் சென்ற அதே நாளில்தான் நீங்கள் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைப் பார்த்தேன். 'தீரன்' படத்தைப் பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகாரக் கொள்ளை கும்பலா? இதைப் போன்ற ஒரு கும்பலைத்தான் நம்முடைய கணவரும் பிடிக்கச் சென்றிருப்பாரோ என்று தோன்றியது.

அதன் பின் அவரைத் தொலைப்பேசியில் அழைத்துப் பேசினேன். 'தீரன்' படம் பார்த்தேன். அதில் வந்த பயங்கரமான காட்சிகளைப் பற்றிக் கூறினேன். அவரிடம், கவனமாக இருங்கள், உங்களுடன் இன்னும் அதிகமான காவல் துறையினரை அழைத்துச் செல்லுங்கள். எனக்கு மனது சரியில்லை என்று கூறினேன். அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று பயந்துகொண்டே இருக்கும்போது அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது'' என்றார் .

உண்மைச் சம்பவமான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடிக்கும் போதே இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மனஅழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. 

பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த 15 சென்ட் இடத்தை அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகக் கொடுத்துள்ளார். அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னைப் போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைத்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல்லெண்ணத்தில்தான் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்குச் சென்று வீர மரணம் அடைந்துள்ளார்.

இங்குள்ள மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். தமிழக அரசு, காவல்துறை அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சமாதியில் நிற்கும் போது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. அவருடைய ஆன்மாவுக்கும் குடும்பத்தாருக்கும் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com