அன்பின் தீவிரவாதி இந்த 'அருவி'! திரைப்பட விமரிசனம்

பெண்ணை மையப்படுத்திய திரைக்கதை என்பது தமிழ் சினிமாவிற்கு
அன்பின் தீவிரவாதி இந்த 'அருவி'! திரைப்பட விமரிசனம்


பெண்ணை மையப்படுத்திய திரைக்கதை என்பது தமிழ் சினிமாவிற்கு புதிய விஷயம் இல்லை. ஆனால் அதை மிகவும் வித்தியாசமான களனில், எதிர்பாராத நிகழ்வுகளைத் திரைக்கதைக்குள் காட்சிப்படுத்தியிருப்பது நிச்சயம் புதுசுதான். அதுவும் ஊடக அரசியலையும், வணிக சந்தையையும், மனித நேயம் குறைந்து வருவதையும் ஒரு திரைப்படத்தில் பெண்ணை மையப்படுத்திக் கூறும் இந்த அருவி தனித்து நிற்கிறது.

ஒரு பெண் எதைவிடவும் அதிகமாக விரும்பக் கூடியது மனத்துக்கு ஏற்ற ஒரு துணை, நேசித்து வளர்க்க ஒரு குழந்தை. தனக்கேயான ஒரு குடும்பம்.  சராசரி பெண்களின் எளிய கனவு இதுதான். அம்மா, அப்பா, தம்பி என குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள் அருவி. ஆனால் சூழல் காரணமாக தன்னுடைய குடும்பத்தில் இருந்து வெளியேறும் அந்தப் பெண்ணின் எதிர்காலம் என்ன? இந்தச் சமூகமும் அவளைச் சுற்றி உள்ளவர்களும் அவளை எந்தவிதமான கண்ணோட்டத்தில் பார்த்தார்கள்? சூழ்நிலைக் கைதியான அவளுடைய பிரச்னை என்ன? அதற்கான தீர்வு எது போன்ற பல கேள்விகளை உள்ளடக்கியது அருவி படத்தின் மையக் கதை.

வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு எதிரான விமரிசனங்களை விடுங்கள், அவர்களுடைய பாதுகாப்புக்கு என்ன உத்திரவாதம்? ஒவ்வொரு நாளும் கூர்முனையில் நின்று பலவிதமான சவால்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். தனியாக வாழத் துணியும் பெண்ணுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதிலிருந்து தொடங்கும் பிரச்னை அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தொடரம் நிலைதான் இன்றளவும் உள்ளது. மேலும் சமூகம் பெண்களுக்கு என வரையறுத்து வைத்திருக்கும் விதிகளை அவள் மீறத் தொடங்கினால், அவளுடைய மிச்ச வாழ்க்கை என்னவாகும்?

அருவி ஒரு கையில் சிகரெட்டை பிடித்து புகையை ஊதித் தள்ளுவதும், நுரைக்கும் மது கோப்பைகளை வெறுப்புடன் பருகுவதன் காரணம் என்ன? தனிமைப் பிடிக்குள் சிக்கிய அருவிக்கு இப்படியான ஒரு இக்கட்டான சூழல் ஏன் வந்தது? கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பெற்றோரை அவள் பிரிய நேர்கையில் கூட அவளுக்கு சமூகத்தைப் பார்த்து பயம் ஏற்படவில்லை. தன்னைப் பார்த்துத் தான் பயந்தாள். தான் ஒரு  பூவா? முள்ளா? விதியின் கைப்பாவையா என பல கேள்விகளைத் தாங்கிய அருவியின் பயணம் புன்னகையில் ஆரம்பித்து கண்ணீரில் முடிகிறது.

மாண்டேஜில் தொடங்கும் ஆரம்பக் காட்சிகளை திரைக் கவிதை எனலாம். பெண் குழந்தைகள் எல்லாருமே தகப்பன்களுக்கு சாமிதான். தனது தாயின் ஒரு சிறு பதிப்புத் தான் மகள் என்றுதான் தந்தையர் மகள்களைக் கொண்டாடுவார்கள். ஒரு பெண் குழந்தை பிறந்து வளர்வதை இதைவிட மிகச் சுருக்கமாகவும் செறிவாகவும் அழகியலுடனும் காட்சிப்படுத்தியிருக்கும் சினிமாவை சமீபத்தில் பார்த்ததாக நினைவில் இல்லை. அருவி அப்பாவுடன் ஃபோட்டோ எடுப்பது, சிரிப்பது, தம்பியை ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க வைப்பது என ஒவ்வொரு காட்சியும் மனத்தை விட்டு அகலாத அழியாச் சித்திரங்கள். அறிமுக ஒளிப்பதிவாளர் ஷெல்லி காட்லிஸ்ட்டினின் ஒளிப்பதிவு இப்படத்தை நம் மனத்துக்கு நெருக்கமாக்கச் செய்கிறது.

காதலை எப்படி வார்த்தையால் விளக்க முடியும்? பணம்தான் இங்க எல்லாமே போன்ற அருவி பேசும் வசனங்கள் எதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்புக்கள் எனலாம். சொல்வதெல்லாம் சத்தியம் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும் அருவி சமூகம் சார்ந்த கோபத்தை வெளிப்படுத்துவதும் போது புருவம் உயர்த்த வைக்கிறாள். அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடையாது என்பது அவளுக்கும் தெரியும், பார்வையாளர்களுக்கும் தெரியும். ஆனால் இதற்கெல்லாம் தீர்வு எதாவது ஒரு புள்ளியிலிருந்து தொடங்க வேண்டும் என்ற அருவியின் ஆதங்கம் நமக்கும் தொற்றிக் கொள்ளும் என்பது உண்மை.

தன்னந்தனியாக பயணம், அதன் பின் அறிமுகமாகும் திருநங்கையான ஒரு தோழி, மனத்துக்குப் பிடித்த மாதிரியான ஒரு வாழ்க்கை என ஆரம்பக் காட்சிகளில் அருவி போன்ற பெண்ணை அனைவரும் ரசிப்பார்கள். ஆனால் அருவிக்கு நேர்ந்த துயரங்களை நினைத்து இப்படியும் வாழ வேண்டாம், அப்படியும் நோக வேண்டாம் என்ற முடிவுக்கு வருவார்கள். காரணம் தனிமை என்பது நமது விருப்பத் தேர்வாக இருந்தால் அதைவிட இனிமை வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் அது நம் மீது திணிக்கப்பட்டதாகவும், புறக்கணிக்கப்படும் போதும் தான் உயிர்வலி தரும் ஒன்றாகிறது. அருவிக்கு நேர்ந்தவை யாருக்கும் நேரக் கூடாது என்று பதைபதைக்கச் செய்யும் படமிது.

யாரிந்த அதிதி பாலன் என்று ஆச்சரியப்பட வைக்கிறார் அறிமுக நாயகி. குறும்பான பார்வை, புன்னகை சிந்தும் அமைதியான முகம், ரெளத்திரம் பழகு எனும்படியாக கோபமான பேச்சு, குரல் உடைந்து மூக்குச் சிவந்து அழும் காட்சிகள் என ஒவ்வொரு ப்ரேமிலும் அசர வைக்கிறார் இவர். வசன உச்சரிப்பு, மிகையற்ற நடிப்பு, அதற்கேற்ற உடல் மொழி என நுட்பமாக தனது பங்களிப்பை அருவி கதாபாத்திரத்துக்குச் செய்துள்ளார் அதிதி. கன்ஸ்யூமரிசத்தில் தொடங்கும் அந்த நீள் வசனம் முதல் பாட்டில் விளையாட்டு வரையில் படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் அதன் தன்மைக்கு ஏற்ப உணர்ச்சிகளை கொட்டியுள்ளார். அவ்வகையில் ஒட்டுமொத்த படத்தையே அனாசயமாக  தனது தோளில் சுமந்துள்ளார் அதிதி பாலன்.

அருவியோடு படம் முழுவதும் பயணிக்கும் திருநங்கை பாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார் அஞ்சலி வரதன். மேலும் மொஹமத் அலி பேக், கவிதா பாரதி, ல‌ஷ்மி கோபாலசாமி, ஷிவதா நாயர், ஸ்வேதா சேகர் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அறிமுக இசையமைப்பாளர்கள் பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜின் பங்களிப்பு ஒத்திசைவுடன் திரைக்கதைக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

எடிட்டர் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா நான் லீனியர் முறையில் படத் தொகுப்பை செய்துள்ளது இப்படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. காரணம் அருவி பிறந்தது முதல் அவளது 25 வயது வரை வாழ்க்கையை நேர்க்கோட்டில் சொல்வதற்கான கால அவகாசம் திரைக்கதையில் இருந்திருக்க முடியாது. மழலைப் பருவம், பதின் பருவம், இளம் பெண் என அருவியின் மூன்று கட்ட வாழ்க்கையை சுறுக்கமாகவும், அதே சமயம் நெகிழ்ச்சியாகவும் இதைவிட யாரும் கூறிவிட முடியாது. மேலும் கலை இயக்கம், ஒலியமைப்பு என எல்லாமே மிகச் சிறப்பாக இப்படத்தில் அமைந்துள்ளது.  இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் ‘அருவி’யை அசலான பெண்ணாக உருவாக்கியிருக்கிறார். கதாபாத்திரத் தேர்வு முதற்கொண்டு, அதிராமல் பதறாமல் நிதானமான திரைமொழியில் சொல்ல வந்த விஷயங்களை பொட்டில் அடித்தாற் போல அழுத்தமாகச் சொல்லிய விதம் வரை இக்கதையை வெகு நேர்த்தியாக கையாண்டுள்ளார். 

அருவியில் சில குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவை பொருட்படுத்தக் கூடியவை அல்ல. காரணம் தமிழ் சினிமா பல காலமாகப் பேசத் தயங்கிய ஒரு விஷயத்தை உரக்கப் பேசியுள்ளது அருவி. உருக்கமாகவும் உரைக்கும் விதமாகவும் பேசியிருப்பது இதன் தனிச் சிறப்பு. ஒரு திரை ஆர்வலராக நாம் பார்க்கும் பல திரைப்படங்கள் நமக்குள் ஏதோவொரு பாதிப்பை ஏற்படுத்தும். வெகு சில படங்கள் மட்டும் மனத்தில் தங்கிவிடும். அப்படிப்பட்ட படங்களில் அருவியும் ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com