சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படத்தின் வசூலும் விமரிசனமும்!

 சமீபத்தில் வெளிவந்த வேலைகாரன் திரைப்படம் பரவலான விமரிசனத்தைப் பெற்று கவனிக்கத்தக்க ஒரு படமாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படத்தின் வசூலும் விமரிசனமும்!


 
சமீபத்தில் வெளிவந்த வேலைகாரன் திரைப்படம் பரவலான விமரிசனத்தைப் பெற்று கவனிக்கத்தக்க ஒரு படமாகியுள்ளது. படத்தின் டிரெயிலரைப் பார்த்தும், பாடல்கள் வெளியான பிறகும் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது. அதைப் படக்குழுவினர் காப்பாற்றிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் படம் வெளியான இரண்டு நாட்களில் அதன் வசூல் ரூ 15.5 கோடிக்கும் மேல் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களும் விடுமுறை தினங்கள் ஆதலால் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொதுவாக சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள், பெண்கள் என பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் திரைப்படத்தில் நடிக்க வந்த இவருக்கு ரசிகர்களின் அமோக ஆதரவு உண்டு. இந்நிலையில் சமீபத்தில் வெளியான திரைப்படமான வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனை மாறுபட்ட ஒரு வலுவான கதாபாத்திரத்தில் பார்த்ததும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சமூக வலைத்தலங்களிலும் இந்தப் படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

குப்பத்து இளைஞரான அறிவு (இந்தக் கதாபாத்திரத்துக்கு இந்தப் பெயர் பொருத்தம் அருமை) தன்னுடன் வாழும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுகிறான். கடந்த தலைமுறையினர் செய்த குற்றச் செயல்கள், அடிதடி தகறாறுகள், கொலைகள் போன்ற எவ்வித தவறுகளையும் இந்த இளைஞர்கள் செய்யக்கூடாது என்று விரும்பி, அவர்களை நல்வழிப்படுத்த லோக்கலாக ஒரு ரேடியோ ஸ்டேஷன் தொடங்கி அவ்வப்போது பேசி வருகிறான் அறிவு. இதனால் அந்த ஏரியா கேங்க்ஸ்டர் காசியின் (பிரகாஷ்ராஜ்) விரோதத்தத்தை சம்பாதிக்கிறான். வேலை தேடி ஒரு உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு மல்டி நேஷனல் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்குச் செல்கிறான். அங்கிருந்துதான் அவனுடைய சமூகப் பொறுப்பின் அடுத்த கட்டம் தொடங்குகிறது.

தன்னைச் சுற்றி ஒரு விஷ வட்டம் உருவாகியுள்ளதை உணர்ந்த அறிவு அதை எப்படிச் சமாளித்து எல்லாச் சூழலிலும் துணிந்து தனது செயல் திறனால் எவ்வாறு வெற்றி அடைகிறான் என்பதை சில பல திருப்பங்களுடன் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. நல்லதொரு கருத்தை சினிமா என்ற மாஸ் மீடியாவின் மூலம், சிவகார்த்திகேயன் போன்ற ஒரு நடிகர் மூலம் எடுத்துச் சென்ற விதத்தைப் பாராட்டலாம். ஆனால் திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் இன்னும் உச்சம் அடைந்திருக்கும் என்பதும் உண்மைதான்.

ஒரு வசனத்தில் சிவகார்த்திகேயன் இப்படி கூறுவார், ‘நல்லா இருக்கணும்னு நினைச்ச என் நண்பன் என் கண் முன்னாடியே செத்துட்டான், ஆனா கொல்லணும்னு  நினைச்ச காசியை நானே காப்பாத்தி இருக்கேன்’ என்று உருக்கமாக கூறுவார். இந்தக் குழப்பம்தான் திரைக்கதையிலும் நிகழ்ந்துள்ளது எனலாம். கம்யூனிசக் கொள்கைகள், கன்சூமரிஸம் என்று கலந்து கட்டி பலவிதமான கருத்துக்களை ஒரே படத்தில் திணிக்காமல், ஒரே ஒரு விஷயத்தைக் கையில் எடுத்து அதை நோக்கியே கதை பயணித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இதைக் குறையாகக் கூற முடியாது, ஆனாலும் காட்சிரீதியாக சொல்லப்பட வேண்டிய திரைப்படம் மீண்டும் வசனம் மூலமாக செலுத்தப்படும் போது சில சமயம் அது தொலைக்காட்சி டாக் ஷோ போலாகிவிடும். வேலைக்காரனிலும் அது நிகழ்ந்துள்ளது.  படத்தில் பாடல்கள் ஓகேதான் ஆனால் பின்னணி இசை குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. அனிருத் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களது பாத்திரம் முக்கியமானதாக இருந்தாலும், சிலரின் பங்களிப்பு கதையை முன்னகர்த்த உதவுவதில்லை. முதல் பாதியில் வந்த ரோபோ சங்கர் இடையில் காணாமலாகி இறுதியில் வந்து சேர்கிறார். சினேகா, ரோகிணி, ஃபகத் பாசில். ஒய்.ஜி.மகேந்திரா, சார்லி உள்ளிட்ட பிற நடிகர்கள் திரையில் சில மணித்துளிகளே தோன்றினாலும் நிறைவான பங்களிப்பை அளித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சில தவிர்க்க முடியாத குறைகள் இருந்தாலும், நல்ல கருத்துள்ள படமாதலால், நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com