திரையரங்குகள் திறப்பு: புதிய கட்டணம் அமலுக்கு வந்தது!

இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்துள்ளன.
திரையரங்குகள் திறப்பு: புதிய கட்டணம் அமலுக்கு வந்தது!

திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து விவாதிக்க குழு அமைக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொண்டதை அடுத்து இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்துள்ளன. 

திரையரங்கு உரிமையாளர்கள் குழுவினர், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.சி.வீரமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோரையும், துறை செயலாளர்களையும் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து பேசினர்.

அதன் பிறகு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் நான்காவது நாளாக (வியாழக்கிழமை) 1,200 திரையரங்குகள் மூடப்பட்டன. ஒரு நாளைக்கு சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், வேலை நிறுத்தத்தை மேற்கொண்டோம். இதற்கு எங்களது இயலாமைதான் காரணம். அரசும் தற்போது எங்களின் சிரமங்களை புரிந்து கொண்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 6) நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. முதல்வரும் மூன்று, நான்கு முறை எங்களை அழைத்துப் பேசியுள்ளார். இன்றைக்கும் எங்களை அழைத்து பேசியுள்ளனர். இதைத்தொடர்ந்து, கேளிக்கை வரி குறித்து விவாதித்து முடிவெடுக்க அரசுத் தரப்பிலும், திரையரங்கு உரிமையாளர் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் தரப்பிலும் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழுவில் அரசு சார்பில் ஆறு பேரும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எட்டு பேரும் இடம்பெறுவர். இந்தக் குழுவின் முடிவு எங்களுக்குச் சாதகமாக இருக்கும். காரணம், அரசு உள்பட அனைத்து தரப்பினரும் எங்களுடன்தான் இருக்கின்றனர். அரசின் இந்த முடிவை ஏற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம் என்றார்.

அதன்படி இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்துள்ளன. இந்த வாரம் எந்தவொரு புதுப்படமும் வெளியாகவில்லை. கடந்த வாரங்களில் வெளியான வனமகன், இவன் தந்திரன் ஆகிய படங்களும் மொழிமாற்றுப்படங்களான ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங், மாம் ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன. இதையடுத்து புதிய டிக்கெட் கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன.  

சினிமா டிக்கெட் இனி எவ்வளவு?

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்தக் கட்டணம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

சினிமா டிக்கெட் ரூ.100 மற்றும் அதற்கு மேல் இருந்தால் அதனுடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். டிக்கெட் கட்டணம் ரூ.100 - க்கு குறைவாக இருந்தால், அத்துடன், 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

அதாவது, இதுவரை ரூ.120 - க்கு இருந்த டிக்கெட் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.153.60, ரூ.100 க்கான டிக்கெட் ரூ.128, ரூ.90 - க்கான டிக்கெட் ரூ.106, ரூ.50க்கான டிக்கெட் ரூ.59, ரூ.10க்கான டிக்கெட் ரூ.12 என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.  ஆன்லைனில் பதிவு செய்தால்: சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நிலையில், அதனுடன் ஜிஎஸ்டி தவிர, வழக்கம்போல் கூடுதலாக ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com