நாட்டியப் பேரொளி பத்மினி

நாட்டியப் பேரொளி பத்மினியின் பிறந்த நாள் இன்று.
நாட்டியப் பேரொளி பத்மினி

இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய நடிகைகளுள் ஒருவரும் ஏறத்தாழ 30 வருடங்கள் திரைப்பட உலகில் புகழின் உச்சியில் இருந்தவரும், மேலும் திரைப்பட உலகில் எல்லோராலும் பப்பியம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான நாட்டியப் பேரொளி பத்மினியின் பிறந்த நாள் இன்று. (ஜுன் 12)

திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்பட்ட லலிதா, பத்மினி ராகினி சகோதரிகளில் இரண்டாமவர் பத்மினி.

1932ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள பூஜாப்புர என்ற இடத்தில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் தங்கப்பன் பிள்ளை தாய் பெயர் சரஸ்வதி அம்மா.

4 வயதிலேயே கதகளி நாட்டியம் பயில ஆரம்பித்தார். கதகளி நாட்டியத்தில் பத்மினியின் குரு குருகோபிநாத். பரத நாட்டியத்தில் பத்மினியின் குரு திருவிடைமருதூர் திருமலைப் பிள்ளை.

16 வயதில் வட இந்தியாவில் புகழ் பெற்ற நாட்டிய மேதையும் சிதார் மேதை ரவி சங்கரின் சகோதரருமான உதய் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த “கல்பனா” என்ற ஹிந்தி படம்தான் பத்மினி முதன் முதலாக நடித்த திரைப்படம்.  

பத்மினி முதன் முதலாக நடித்த தமிழ்த் திரைப்படம் “மணமகள்”. கலைஞர் மு.கருணாநிதி வசனத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய படம். 1950ஆம் ஆண்டு வெளிவந்தது.

தமிழில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த முதல் படம் “பணம்” இப்படத்துக்கும் திரைக்கதை-வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. இயக்கம் என்.எஸ்.கிருஷ்ணன். சிவாஜியுடன் இணைந்து ஏறத்தாழ 60 படங்களில் பத்மினி நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், உத்தமபுத்திரன், வியட்நாம் வீடு, இருமலர்கள், திருவருட்செல்வர் தங்கப்பதுமை போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பத்மினிக்கும் சிவாஜிக்கும் எழுதப்பட்ட கதை என்றே சொல்லலாம். இப்படத்தில் இருவருடைய நடிப்பும் தத்ரூபமாக அமைந்தது.

எம்ஜிஆருடன் இணைந்து நடித்த முதல் படம் “மதுரை வீரன்”. அதன் பிறகு ரிக்ஷாகாரன், அரசிளங்குமரி, மன்னாதி மன்னன் ராணி சம்யுக்தா போன்ற படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆருடன் கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜியுடன் நடித்து வெளிவந்த “திருவருட்செல்வர்” படத்தில் வரும் “மன்னவன் வந்தானடி தோழி” என்ற நாட்டியப் பாடலைக் காட்சிப்படுத்த 5 நாட்கள்  ஆயின.

ஜெமினி கணேசனுடன் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்க்கவை தேனும் பாலும் மற்றும் வஞ்சிக்கோட்டை வாலிபன்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வைஜெயந்தி மாலாவுடன் இணைந்து “கண்ணும் கண்ணும் கலந்து” என்ற பாடலுக்கு ஆடிய நாட்டியத்தை யாராலும் மறக்கமுடியுமா?

பத்மினியின் சகோதரர் மகள்தான் ஷோபனா (தளபதியில் ரஜினியின் காதலியாக நடித்தவர். மறைந்த குணச்சித்திர நடிகை சுகுமாரி பத்மினியின் மாமன் மகள்.)

சித்தி என்ற படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு இரண்டாவது மனைவியாக பத்மினி நடித்திருப்பார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சினிமா ரசிகர் சங்க விருதை பத்மினி பெற்றார். எம்.ஆர்.ராதாவுக்குச் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. சித்தி என்ற பெயருக்கு முன்பு இக்கதைக்கு தயாநிதி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கதைக்கேற்ப சித்தி என்று மாற்றிவிட்டார்கள். சித்தி படத்துக்குக் கதை எழுதியவர் வை.மு.கோதைநாயகி என்ற பெண் எழுத்தாளர். 

பத்மினிக்குத் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி தவிர ரஷ்ய மொழியும் தெரியும். ஒரே ஒரு ரஷ்யப் படத்தில் நடித்துள்ளார்.

சிலோன் தியேட்டர்ஸின் கபாடி அரட்சகாயா என்ற சிங்களப் படத்திலும் பத்மினி நடனமாடியுள்ளார்.

பத்மினி கடைசியாக நடித்த தமிழ்ப்படம் லஷ்மி வந்தாச்சு.

1958ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும், தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்ததற்காகத் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். அன்றைய சோவியத் யூனியன், பத்மினியின் கலைச் சேவையைப் பாராட்டித் தபால்தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நாட்டியத்திலும் இந்தியத் திரைப்படங்களிலும் 30 ஆண்டுகள் கோலோச்சி நாட்டியப் பேரொளியாகத் திகழ்ந்த பத்மினிக்கு மத்திய அரசின் பத்ம விருது வழங்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. அவருடைய பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து பரதம் எனும் கலையை உலகம் முழுவதும் பரப்புவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com