ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்: ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வில் ரஜினிகாந்த் காரம்! 

சில அரசியல்வாதிகள் என் பெயரை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள் என்று 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் இன்று நடைபெற்ற தனது ரசிகர்கள் சந்திப்பில் பேசினார்.
ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்: ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வில் ரஜினிகாந்த் காரம்! 

சென்னை: சில அரசியல்வாதிகள் என் பெயரை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள் என்று 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் இன்று நடைபெற்ற தனது ரசிகர்கள் சந்திப்பில் பேசினார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்டவாரியாக ரசிகர்களை இன்று முதல் ரஜினிகாந்த் சந்திப்பார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது. சந்திப்புக்கான அடையாள அட்டைகள் இல்லாத ரசிகர்கள் யாரும் மண்டபத்துக்கு வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கரூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்ட ரசிகர்களை முதல் நாளான இன்று ரஜினி சந்தித்தார். முதல்நாளில்  மொத்தம் 750 பேர்  ரஜினியை சந்தித்து தனித் தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

சரியாக 9 மணிக்கு ரஜினி மேடைக்கு வந்தார். அவருடன் டைரக்டர் எஸ்.பி. முத்துராமனும் வந்திருந்தார். அவரை கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். முதலில் பேசிய எஸ்.பி. முத்து ராமன், 'ரஜினி எப்பொழுதும் கேமராவுக்கு முன்பு மட்டும்தான் நடிப்பார் என்றும், ரசிகர்கள் மேல் மாறாத அன்பு உடையவர் என்று பேசினார்.அவரைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

என்னை வாழவைக்கும் ரசிகர்களுக்கு எனது நன்றி; உண்மை பேசுவது, நல்ல பழக்கங்கள்,ஒழுக்கம் என பல நல்ல விஷயங்களை நான் இயக்குனர் முத்துராமானிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன்.எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் அவர். 2.0 பட வேலைகளின் காரணமாக ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. அடுத்த படமானது வரும் 20 ஆம் தேதி தொடங்க இருக்கிறோம்.ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், கண்டிப்பாக நல்ல படத்தை கொடுப்பேன்

நான் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. நான் அரசியலுக்கு வந்தால் நியாயமாக இருப்பேன்; அரசியல் மூலமாக பணம் சம்பாதிக்க எனது ரசிகர்களை விட மாட்டேன்.

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானிக்கிறான்; என்னுடைய வாழ்க்கை ஆண்டவன் கையில் இருக்கிறது.நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னால் நீங்கள் ஏமாந்துவிடுவீர்கள்.இன்று நடிகனாக இருக்கிறேன், நாளை என்னவாக இருப்பேன் என தெரியாது.

1996-ஆம் ஆண்டு நான் ஆதரித்த கூட்டணியை வெற்றி பெற செய்தீர்கள். ஆனால் தேர்தல் சமயத்தில் எனது ஆதரவு அவர்களுக்கு உள்ளது என்பதை காட்டுவதற்காக, சில அரசியல்வாதிகள் என் பெயரை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள்

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரிசை எண்படி ரசிகர்கள் மேடைக்கு அழைக் கப்பட்டு ரஜினியுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ரசிகர்கள் அனைவருக்கும் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது.

நாளை மேலும் 3 மாவட்ட ரசிகர்கள் சென்னை வந்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். வருகிற 19-ந்தேதி வரை தினந்தோறும் ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வானது நடைபெற் உள்ளது.  ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com