சுடச்சுட

  

  பெண்கள் மீதான ஆசிட் வீச்சுக்கு என்ன தண்டனை தரலாம்?

  By உமா பார்வதி  |   Published on : 16th November 2017 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  resham-khan-acid-survivor_blog_759

  சமீபத்தில் படித்து மனத்தை கனக்கச் செய்த செய்திகள் இவை. 

  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியை சேர்ந்தவர் காயத்ரி. அவர் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 5 -ம் தேதி இரவு அவரின் வீட்டில் மின்தடை ஏற்பட்டது. 

  இதையடுத்து காயத்ரி தனது குடும்பத்தாருடன் சென்று உறவினர் ஒருவரின் வீட்டில் தூங்கினார். அதிகாலை காயத்ரி வலி தாங்க முடியாமல் அலறல் சப்தம் கேட்டு அனைவரும் பதற்றத்துடன் கண் விழித்து ஒடி வந்தனர்.

  அப்போது காயத்ரியின் தலை முடி கருகியிருந்தது. உடனே அவரை நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ***

  குறிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணி முடிந்ததும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் வழியாக லாவண்யா வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், லாவண்யாவை வழிமறித்து அவரது முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அதில் அவரது முகம், வலது கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

  இதையடுத்து பலத்த காயமடைந்த லாவண்யா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் டிஎஸ்பி பன்னீர் செல்வம் மற்றும் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆசிட் வீசியவர்களை தேடி வருகின்றனர்.

  ***
  இத்தகைய செய்திகளைக் கேட்கும் போதும், படிக்கும் போதும் நாம் பதற்றமடைவோம். நம்மால் முடிந்தது அக்குற்றச் செயல் செய்தவனை வார்த்தைகளால் கழுவேற்றுவது மட்டும் தான். மாணவி, அலுவலகம் செல்லும் பெண், இல்லத்தரசி என்று அமில வீச்சுக்கு இலக்காகியிருப்பவர்கள் எத்தனையோ எளிய பெண்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களுக்கு அப்படியொரு கொடூரம் நடக்கவிருக்கிறது என்பதை அறியாதவர்கள். சுதாரிப்பு அடைவதற்குள், ஒரு நொடியில், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பலியாக்கிவிடும் அமிலத்தை அவர்கள் மீதெறியும் எதிரிகளின் போக்கை உணராதவர்கள் அவர்கள். தங்களுடைய அழகே ஆபத்தாகிவிடும் அவல நிலைக்கு உள்ளானவர்கள்.

  தில்லியில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆசிட் வீச்சு சம்பவங்கள் தொடர்பாக நடைபெற்ற வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்ட யாருக்கும் அதே ஆண்டில் தண்டனை வழங்கப்படவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. 

  இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தெரிவித்துள்ள பதிலில், 'கடந்த 2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் 203 ஆசிட் வீச்சு வழக்குகளும், 2015ஆம் ஆண்டு 222 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

  2015-ம் ஆண்டு அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 55 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 39 வழக்குகளும், பிகாரில் 15 வழக்குகளும் பதிவாகியுள்ளன. யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக தில்லியில் 21 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2014-ம் ஆண்டு 20 ஆக இருந்தது. இதில் 2014 ஆம் ஆண்டு இரண்டு பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. 2015- ம் ஆண்டு யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஒரு பெண்ணை பின் தொடர்வதும், ஒருதலையாகக் காதலிப்பதும் அவள் அதற்கு உடன்படவில்லை எனில் வன்மத்துடன் அமிலம் வீசி அவளழகை சிதைத்து, தனது வக்கிரத்தைத் தணித்துக் கொள்ளும் மனிதர்களையும் உள்ளடக்கிய சமூகம்தான் இது. அத்தகைய செய்திகள் வரும் சமயத்தில் அது பரபரப்பாகி பல தரப்பு கருத்துக்களையும் விவாதத்தையும் முன் எடுக்கச் செய்யும். ஆனால் தீர்வு? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க சிலராவது போராடுவார்கள். ஆனால் போராட்டத்தின் அதன் முடிவு? அப்பெண் இழந்த அழகு ஒருபோதும் அவளுக்குத் திரும்பக் கிடைக்கப்போவதில்லை. ஆனால் அவளிடமிருந்து இவர்களால் பறிக்க முடியாத ஒன்று உள்ளது. அது அவளது தன்னம்பிக்கை. அதுவே அவளது ஆன்மாவை மீண்டும் கட்டமைத்து இத்தகைய வன்செயல்களைச் செய்வோரின் மீது காறி உமிழும் மற்றொரு அமிலமாக மாறும்.

  பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கச் செய்வது ஒரு புறம் இருந்தாலும், குற்ற மனப்பான்மைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வு இருந்தாலே தவிர இத்தகைய சம்பவங்கள் தொடர்ரும். அவ்வகையில் ஆசிட் வீச்சுக்கு எதிராக சதீஷ் குருவப்பன் எடுத்துள்ள குறுப்படம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

  SHE என்ற தலைப்பில் மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளார் சதீஷ் குருவப்பன். அவை முறையே ஈவ் டீசிங், ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் வன்முறை ஆகியவை. Stop Harassment Everywhere என்ற ஆஷ் டேக் மூலம் இவர் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது. 

  SHE II குறும்படத்தின் காணொலி :

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai