தீபிகா படுகோன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமான ராணி பத்மாவதியின் அழகால் ஏற்பட்ட அழிவைப் பற்றி அறிவீர்களா?

முதன் முதலில் ராணி பத்மினியின் பெயர் கவிஞர் மாலிக் முகமத் எழுதிய ‘பத்மாவத்’ என்னும் கவிதையில் தான் இடம் பெற்றது.  கவிதை முழுவதும் அவளது அழகு, துணிவு, வீரம் மற்றும் வல்லமை பற்றியும் எழுதப்பட்ட காவியம்.
தீபிகா படுகோன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமான ராணி பத்மாவதியின் அழகால் ஏற்பட்ட அழிவைப் பற்றி அறிவீர்களா?

சஞ்சய் லீலா எழுதி இயக்கும் படமான ‘பத்மாவதி’ திரைப்படம் ஆரம்பித்த காலம் முதல் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகிக் கொண்டுதான் வருகிறது. ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனும், பத்மாவதியின் கணவன் ராஜா ரத்தன் சென்னாக ஷாஹித் கபூரும், பத்மாவதியின் அழகால் கவரப்பட்டு போர் தொடுத்த தில்லி சுல்தானான அலாவுதின் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். 

பொதுவாகவே வரலாற்று திரைப்படம் என்றால் கதாப்பாத்திரங்கள் மற்றும் காலகட்டத்தை தவிர கதாசிரியரின் ஆதிக்கம் கதையில் அதிகமாக இருக்கும். அதன் அடிப்படையில் இந்தத் திரைப்படத்தில் எந்த அளவு நாம் கேள்விப்பட்டவையும், இதுவரை நாம் கேள்வி படாதவையும் இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், பத்மாவதியின் பொதுவான கதைக்களம் என்பது அந்த ராணியின் கண்கொள்ளா அழகும், அந்த அழகில் மயங்கிய அரசர்களும், அதனால் ஏற்பட்ட போர்களும், இறுதியாக பத்மாவதியின் உயிர்த் தியாகமும் தான். 

முதன் முதலில் ராணி பத்மினியின் (பத்மாவதியின் மற்றொரு பெயர்) பெயர் கவிஞர் மாலிக் முகமத் எழுதிய ‘பத்மாவத்’ என்னும் கவிதையில் தான் இடம் பெற்றது. அந்தக் கவிதை முழுவதும் அவளது அழகு பற்றியும் துணிவு, வீரம் மற்றும் வல்லமை பற்றியும் எழுதப்பட்ட ஒரு அர்ப்புதமான காவியம் என்றே கூறலாம். அதன் அடிப்படையில் கூறப்படும் கதையானது என்னவென்றால்....

பத்மாவதி சிங்கள ராஜியத்தின் இளவரசி ஆவார், அந்த ராஜியத்தை சேர்ந்த அனைத்துப் பெண்களும் பார்ப்பவரைப் பிரமிப்பு அடையச் செய்யும் அழகான தோற்றத்தை கொண்டவர்கள். அத்தகைய ராஜியத்தின் இளவரசியாக இருந்த பத்மாவதிக்கு ஹிராமன் என்னும் பெயருடைய ஒரு பேசும் கிளி மிக நெருங்கிய நண்பனாக இருந்தது. ஆனால், பத்மாவதியின் தந்தை ராஜா கந்தர்வ சென்னிற்கு தனது மகள் ஒரு கிளியுடன் பேசிக் கொண்டிருப்பது பிடிக்காததால் வீரர்களிடம் அந்தக் கிளியை கொன்று விடுமாறு உத்தரவிடுகிறார். வீரர்கள் கொல்ல வருவதை அறிந்த கிளி அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து அந்த ராஜியத்தை விட்டே பறந்து செல்கிறது, ஆனால் போகு வழியில் ஒரு கூண்டில் அகப்பட்டு சித்தூருக்கு விற்கப்படுகிறது. 

அந்த ரஜியத்தின் அரசனான ரத்தன் சென் இந்தக் கிளியின் பேசும் திறனை பார்த்து வியந்து அதை வாங்கிச் செல்கிறார். அப்போது அந்தக் கிளி ரத்தன் சென்னிடம் இளவரசி பத்மாவதியின் அழகைப் பற்றி வர்ணிப்பதைக் கேட்டு பத்மாவதியைக் காதலிக்க தொடங்குகிறார். பின்னர் அவரை எப்படியாவது பார்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று கிளியின் வழிகாட்டுதலோடு 16,000 சேனை வீரர்களை அழைத்துக்கொண்டு எழு கடல்களை தாண்டி அந்த ராஜியத்தை சென்றடைகிறார். அந்த ராஜியத்துடன் போர் புரிந்து பத்மாவதியைத் திருமணம் செய்து கொள்கிறார். ரத்தன் சென்னிற்கு ஏற்கனவே திருமணமாகி நாக்மதி என்றொரு மனைவி இருக்கிறார். மீண்டும் கோட்டைக்கு திரும்பிய நிலையில் இரு மனைவிகள் மத்தியிலும் சிறு பனிப் போர் நிகழ்கிறது. அந்தச் சமயத்தில் தான் தில்லியின் சுல்தான் அலாவுதின் கில்ஜிக்கு பத்மாவதியைப் பற்றிய தெரிய வருகிறது.

ரத்தன் சென்னும், ராணி பத்மாவதியும் அந்தப்புரத்தில் தனியாக இருப்பதை தற்செயலாக பார்த்துவிடும் அமைச்சர் ராகவ் சேட்டன், இதை அறிந்தால் ராஜா தன்னை தண்டித்து விடுவார் என்பதை அறிந்து ராஜியத்தை விடுத்துத் தப்பித்து தில்லியில் சரணடைகிறார். அப்போது அவரது வாயிலாக பத்மாவதியின் அழகைப் பற்றி அறியும் அலாவுதின் அவளை எப்படியாவது கவர்ந்து வர வேண்டுமென்று சித்தூரை நோக்கிப் படை எடுக்கிறார். பின்னர் பத்மாவதியை ஒருமுறை கண்ணால் பார்த்துவிட்டு மட்டும் செல்வதாக ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு வருகிறார். அதற்கு ஒப்புக்கொள்ளும் ரத்தன் சென்னும் ஒரு நிபந்தனையை வைக்கிறார், ராணி பத்மாவதியை மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடியிலேயே அலாவுதின் பார்க்க வேண்டும் என்று. இதற்குச் சம்மதம் தெரிவித்து கண்ணாடியில் பத்மாவதியின் பிம்பத்தை பார்த்து முதலில் அமைதியாகத் திரும்பும் அலாவுதின் பின்னர் பல வழிகளில் சித்தூர் ராஜியத்திற்கு தொல்லைகளைத் தர துவங்கி இறுதியில் ராஜா ரத்தன் சென்னை சிறைபிடிக்கிறார். 

பத்மாவதி தன்னிடம் வந்தால் மட்டுமே ரத்தன் சென்னை உயிருடன் திருப்பி அனுப்புவேன் என நிபந்தனையிடுகிறான் அலாவுதின். கணவனது உயிரைக் காப்பாற்றுவதற்காக அதற்குச் சம்மதம் தெரிவிக்கிறார் பத்மாவதி. ஆனால், பல்லக்கில் தன்னை போன்ற வேடம் அணிந்த ஆண்களையும் அவர்களுக்குத் துணையாக பல போர் வீரர்களையும் அனுப்பி வைத்து அலாவுதின் அசறும் சமயத்தில் அவர்களைத் தாக்கி ரத்தன் சென்னை மீட்டு வருகிறார். மீண்டும் சித்தூருக்கு வரும் வழியில் பக்கத்து நாட்டு அரசனான தேவ்பால் என்பவனும் பத்மாவதியின் மீது ஆசை கொண்டு ரத்தன் சென்னை கொலை செய்கிறான். தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்து கோவத்துடன் அலாவுதினும் சித்தூரை நோக்கிப் படை எடுக்கிறான். 

போரில் நிச்சயம் அலாவுதின் ஜெயித்து விடுவான் என்பதை அறிந்த பத்மாவதி, முகலாய ஆண்களுக்கு அடி பணிந்து வாழ்வதை விட இறப்பதே மேல் என முடிவெடுக்கிறார். ஒரு மிகப் பெரிய சிதை நெருப்பினை மூட்டி முதலில் பத்மாவதி உயிருடன் அதில் இறங்குகிறார், அவரைத் தொடர்ந்து ரத்தன் சென்னின் முதல் மனைவியான நாக்மதி சிதையில் இறங்குகிறார் பின்னர் சித்தூரின் அனைத்துப் பெண்களும் அந்தச் சிதை தீயில் குதித்து உயிர்த் தியாகம் செய்கிறார்கள். ஆண்கள் அனைவரும் முகலாய படையுடன் மோதி உயிர் துரக்கிறார்கள். இறுதியாகப் போரில் வெற்றி பெற்ற அலாவுதினுக்கு கிடைத்தது என்னவோ பிணங்கள் நிறைந்த காலி அரண்மனை மட்டும் தான். 

இதுதான் மாலிக்கின் கவிதையில் கூறப்பட்டுள்ள பத்மாவதியின் சரித்திரம். இவரைப் போல் ஹெம்ரடன்ஸ் கோரா, ஆங்கிலேயர் ஜேம்ஸ் டாட் போன்றோர் பலர் தங்களது பாணியில் இந்தக் கதையை கூறியுள்ளனர். தற்போது சஞ்சய் லீலா புதிதாக என்ன கதையை சொல்ல போகிறாரொ என்று தெரியவில்லை. பெண்ணுக்காக நடைபெற்ற போர்களில் ராமாயணத்தைத் தொடர்ந்து அந்த வரிசையில் இடம் பெற வேண்டிய ஒன்று இந்த பத்மாவதி சரித்திரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com