‘நானே பொண்ணா இருந்தா உங்களைக் கல்யாணம் பண்ணிக்குவேன் சார்’ என்று சொல்லி கலைஞரை அசத்திய நடிகர் யார்!

ஒருமுறை நடிகர் சங்க விருது வழங்கும் விழாவுக்குத் தலைமையேற்ற கலைஞர் கருணாநிதியைப் பார்த்து விருது வாங்க வந்த மோகன்பாபு மேடையில் வைத்தே என்ன சொல்லியிருக்கிறார்? என்று பாருங்கள்;
‘நானே பொண்ணா இருந்தா உங்களைக் கல்யாணம் பண்ணிக்குவேன் சார்’ என்று சொல்லி கலைஞரை அசத்திய நடிகர் யார்!

மறக்க முடியுமா கலைஞரை?! என்ற தலைப்பில் கலைஞர் நினைவேந்தல் விழாவொன்று சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. சத்யராஜ், ராதிகா, நாசர், சிவக்குமார், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், பிரபு, பார்த்திபன் உள்ளிட்டோருடன் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் கூட கலைஞர் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அந்த விழாவிற்கு  அழைக்கப்பட்டிருந்தார். தெலுங்கில் நடிகர் சங்க மேடைகள் என்றில்லை, அரசியல் மேடைகளிலும் கூட மோகன்பாபு எப்போதுமே தனது அதிரடியான மேடைப்பேச்சுகளுக்காக பெயர் போனவர். அப்படிப் பட்டவரை கலைஞர் குறித்துப் பேசவும் அழைத்திருந்தது சற்று வியப்பாகத் தான் இருந்தது. ஏனெனில், மோகன் பாபுவுக்கும் கலைஞருக்கும் அப்படிப் பெரிதாக எந்த ஸ்னேகமும் இருந்ததாகத் தெரியவில்லை. பிறகெதற்கு மோகன்பாபு என்றால், ஒருவேளை அவரது இந்தப் பேச்சுக்காகக் கூட இருக்கலாம்.

ஒருமுறை நடிகர் சங்க விருது வழங்கும் விழாவுக்குத் தலைமையேற்ற கலைஞர் கருணாநிதியைப் பார்த்து விருது வாங்க வந்த மோகன்பாபு மேடையில் வைத்தே என்ன சொல்லியிருக்கிறார்? என்று பாருங்கள்; இது அவரே  நேற்று மேடையில் குறிப்பிட்டது தான்.

தமிழ் எனக்கு நல்லா தெரியாது, தெலுங்குன்னா 2 அவர்ஸ், 3 அவர்ஸ் பேசுவேன். என்று தொடங்கினார் மோகன்பாபு;

‘கலைஞரை நான் நான்கு முறை நேரில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை நான் ஒய் எம் சி ஏவில் படித்துக் கொண்டிருக்கும் போது தேர்தல் பிரச்சாரத்திற்காக சைதாப் பேட்டைக்கு வந்திருந்தார் கலைஞர் அப்போது அவரைப் பார்த்திருக்கிறேன். பிறகு என் டி ராமாராவ் சார் வீட்டுத் திருமணத்திற்கு கலைஞர் வந்திருந்த போது... நான் தான் விமானநிலையத்திலிருந்து கலைஞரை, என் டி ஆர் வீட்டுத் திருமண நிகழ்விற்கு அழைத்துச் சென்றேன். மூன்றாவது முறை எங்களது திரைப்படமொன்றின் 100வது நாள் விழாவுக்கு தலைமை விருந்தினராக கலைஞர் வந்திருந்தார். நான் அவரிடம் இருந்து கேடயம் பெற்றேன். நான்காவது முறையாக சென்னை நடிகர் சங்க விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். அப்போது தான் விழா மேடையில் அவர் அமர்ந்திருந்தார், அவரைப் பார்த்து நான் இப்படிச் சொன்னேன். எனக்கு பயமெல்லாம் இல்லை. நான் எதையும் தைரியமாகச் சொல்லக் கூடியவன்... எனவே;

‘சார் உங்களை கலைஞர் கருணாநிதி என்று சொல்கிறார்களே, எவ்வளவு அழகா இருக்கீங்க சார் நீங்க! நானே பொண்ணா இருந்தா உங்களைக் கல்யாணம் பண்ணிக்குவேன் சார் என்று சொன்னேன். எல்லாரும் ஷாக் ஆயிட்டாங்க, ‘என்னய்யா நீ அப்படிப் பேசிட்டே’ என்றார்கள். நான் என்ன தப்பாகப் பேசி விட்டேன்?! சச் எ பியூட்டிஃபுல் பெர்சனாலிட்டி, சச் எ கிரேட் மேன். நீங்கள் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள்.’ என்று தன் உரையை நீட்டித்தார். அடுத்ததாக; மு.கருணாநிதி என்ற பெயரை தனக்குரிய விதத்தில் மோகன்பாபு விரித்துக் கூறிய விதம் கலைஞர் அபிமானிகளிடையே பலத்த கரகோஷத்தை எழுப்பி ஓய்ந்தது. அதையும் தான் தெரிந்து கொள்ளுங்களேன்;

மு என்றால் முன்னுதாரணம்
க கருணை
ரு ருத்ரம்
ணா என்றால் நாஸ்திகம்
நி என்றால் நிதானம்
தி என்றால் திராவிடம்


அது தான் தி கிரேட் மேன் கருணாநிதி. அறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரகமந்திரத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுக்கோப்பாகக் கடைப்பிடித்த தலைவர் தி கிரேட் மேன் கருணாநிதி. என்று மோகன்பாபு தன்னைப் பேச அழைத்த கணக்கிற்கு விழா அழைப்பாளர்களை தன் பேச்சால் வசீகரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com