தயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு!

எனக்கும் மற்றவர்களுக்கும் இரண்டாவது முறையாக இதுபோல நடக்கிறது. பிறகு எதற்காக விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன...
தயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு!

கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் சமயங்களில் தயாரிப்பாளர்கள் அவர்களின் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக்கொள்ளலாம் என்கிற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவுக்கு நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 21 மற்றும் பொங்கல் சமயங்களில் ஏராளமான பெரிய படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன. இப்படிச் செய்தால் சிறிய படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து புதிய திரைப்படங்கள் வெளியீட்டுக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டார்கள். ஒரே தேதியில் பல படங்கள் வெளியாவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் இதை எந்தத் தயாரிப்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் சமயங்களில் தயாரிப்பாளர்கள் அவர்களின் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக்கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவுக்கு நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிசம்பர் 21 அன்று அவர் நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளிவரவுள்ளது. அதே நாளில் மாரி 2, சீதக்காதி (டிசம்பர் 20), கனா, அடங்க மறு, கேஎஜிஎஃப் (டப்பிங்) ஆகிய படங்களும் வெளிவருவதால் தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: 

கட்டுப்பாடுகள் உண்டு... கட்டுப்பாடுகள் இல்லை.... கட்டுப்பாடுகள் உண்டு... கட்டுப்பாடுகள் இல்லை.... இதுதான் விதிமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் நீதி. எனக்கும் மற்றவர்களுக்கும் இரண்டாவது முறையாக இதுபோல நடக்கிறது. பிறகு எதற்காக விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன? #அமைப்புசரியில்லை, #உள்ளுக்குள்அரசியல். எதுவாக இருந்தாலும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் டிசம்பர் 21 அன்று வெளிவருகிறது. தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டங்களில் கடந்த ஒரு மாதமாகக் கலந்துகொண்டபிறகு புரிந்துகொண்டது, விஷால் இதற்குக் காரணமல்ல. ஏற்கெனவே சொன்னதுபோல உள்ளுக்குள் அரசியல் உள்ளது. விதிமுறைகள் எல்லாம் அதைப் பின்பற்றுபவர்களுக்குத்தான் என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com