ஆமாம்..நான் முறைகேடுதான் செய்தேன்: வெடித்துக் கிளம்பிய விஷால் 

நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்வது முறைகேடு என்றால் , 'ஆமாம்..நான் முறைகேடுதான் செய்தேன்' என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். 
ஆமாம்..நான் முறைகேடுதான் செய்தேன்: வெடித்துக் கிளம்பிய விஷால் 

சென்னை: நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்வது முறைகேடு என்றால் , 'ஆமாம்..நான் முறைகேடுதான் செய்தேன்' என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். 

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்தும், அவர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் கூறி தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் புதனன்று போராட்டம் நடத்தினார்கள்.  அதன் தொடர்ச்சியாக விஷால் பதவி விலகக் கோரி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இரு அலுவலகங்களுக்குத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் பூட்டு போட்டார்கள். இந்த விவகாரம் குறித்து விஷால் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். 

இதையடுத்து தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் போட்ட பூட்டை உடைக்க விஷால் வியாழன் காலை வந்தார். ஆனால் பூட்டை உடைக்கக் காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள். பதிவுத்துறையினர் வந்து பூட்டைத் திறப்பார்கள் என்று காவலர்கள் விஷாலிடம் தகவல் தெரிவித்தார்கள். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் விஷால். எதிர்தரப்பினர் போட்ட பூட்டை உடைக்க அனுமதி மறுத்ததால் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் மற்றும் அவருடைய ஆதரவு தயாரிப்பாளர்கள் பலரும் காவல்துறையினரால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள். காவலர்களால் கைதான விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக பாரதிராஜா, ஏ.எல். அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் தமிழக முதல்வரை வியாழனன்று சந்தித்து புகார் அளித்தார்கள். இறுதியாக, தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களில் எதிரணியினர் போட்ட பூட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. பதிவுத்துறை அதிகாரிகள் தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களின் பூட்டுகளைத் திறந்துள்ளார்கள். 

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக கைதான் விஷால் மீது இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாகக் கூடுதல், பிரச்னைக்குரிய சொத்துகள் குறித்து தகராறில் ஈடுபட்டு அமைதியைக் குலைத்தல் ஆகிய பிரிவுகளில் விஷால் மீது சென்னை - பாண்டி பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். தொடர்ச்சியாக தி.நகரில்  தயாரிப்பாளர் சங்க அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்வது முறைகேடு என்றால் , ஆமாம்..நான் முறைகேடுதான் செய்தேன்' என்று தயரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்டு வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த விஷால், வியாழன் மாலை விடுதலை செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

நடந்திருப்பது எனக்கு வேடிக்கையாக உள்ளது. நான் தலைவராக உள்ள சங்கத்தில் உள்ளே நுழைய முடியாமல், பூட்டை உடைக்க முயற்சித்தேன் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இ.பி.கோ 145-ஆவது பிரிவில் கைது செய்யப்பட்டிருப்பது தர்ம சங்கடமாக உள்ளது. 

வெள்ளிக்கிழமை 7 படங்கள் வெளியாக உள்ளன, அதற்காக பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது.  ஆனால் எங்களுக்கு இந்த மாதிரியான பிரச்னைகள் கொடுக்கிறார்கள். 

புதனன்று நாங்கள் புகார் கூறியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் சங்க  உறுப்பினர்களே இல்லாதவர்கள், குற்றவாளிகள் செய்த காரியத்திற்காக, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம்,   

நான் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் தெய்வமாக நம்புகிறேன். நான் முறையாக அவற்றை அணுக உள்ளேன்.,எனக்கு அங்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். 

நாங்கள் பதவிக்கு வந்ததிலிருந்து எப்போதுமே சிறு மற்றும் நலிவடைந்த தயாரிப்பாளர்கள் பக்கமே நிற்கிறோம்,.அவர்கள் நலனுக்காகவே செயல்படுகிறோம். 

தயாரிப்பாளர்களுக்கு  நிலம் வழங்கவேண்டும் என்பதற்காக நாங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கண்டிப்பாக நடத்தியே தீருவோம். அதுவரை ஓய மாட்டோம். 

நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு என்று ஓய்வூதியம், அவர்களின் வாரிசுகளுக்கான கல்வி நிதி, திருமண நிதியுதவி, மருத்துவச் செலவுகள், இன்ஸ்யூரன்ஸ் மற்றும் தீபாவளி போனஸ் என பல்வேறு உதவிகள் செய்துள்ளோம். அதை இப்போது வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கி விட்டார்கள். 

முறைகேடுகள் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டுபவர்கள், கண்டிப்பாக சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு முறையாக கேள்வி கேட்டு விளக்கம் பெறலாம்.  

நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்வது முறைகேடு என்றால் ,'ஆமாம்..நான் முறைகேடுதான் செய்தேன். 

இவ்வாறு அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com