எந்த குற்றச்சாட்டு என்றாலும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்து சொல்லுங்க: விஷால் வேண்டுகோள் 

தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளில் எந்த குற்றச்சாட்டு என்றாலும் உறுப்பினர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்து சொல்லலாம் என்று சங்கத் தலைவர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எந்த குற்றச்சாட்டு என்றாலும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்து சொல்லுங்க: விஷால் வேண்டுகோள் 

சென்னை: தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளில் எந்த குற்றச்சாட்டு என்றாலும் உறுப்பினர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்து சொல்லலாம் என்று சங்கத் தலைவர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்தும், அவர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் கூறி தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் புதனன்று போராட்டம் நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இரு அலுவலகங்களுக்குத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் பூட்டு போட்டார்கள். 

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் போட்ட பூட்டை உடைக்க விஷால் வியாழன் காலை வந்தார். ஆனால் பூட்டை உடைக்கக் காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள். பதிவுத்துறையினர் வந்து பூட்டைத் திறப்பார்கள் என்று காவலர்கள் விஷாலிடம் தகவல் தெரிவித்தார்கள். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் விஷால். 

எதிர்தரப்பினர் போட்ட பூட்டை உடைக்க அனுமதி மறுத்ததால் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் மற்றும் அவருடைய ஆதரவு தயாரிப்பாளர்கள் பலரும் காவல்துறையினரால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள். 

கைது செய்யப்பட்ட விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் திடீர் திருப்பமாக கைதான் விஷால் மீது இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.  பின்னர் விஷால் வியாழன் மாலை விடுதலை செய்யப்பட்டார். 

அதேசமயம் கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் அதிகாரிகள் இணைந்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை முடிவுக்கு வரும் வரையில் அலுவலகம் சீல் வைக்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதேசமயம் தயாரிப்பாளர் சங்க இரு தரப்பினரும் வெள்ளியன்று  ஆர்.டி.ஓ விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளில் எந்த குற்றச்சாட்டு என்றாலும் உறுப்பினர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்து சொல்லலாம் என்று சங்கத் தலைவர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
சங்க அலுவகத்திற்கு வைக்கப்பட்ட சீலை நீக்க விஷால் தொடர்ந்த வழக்கின் மீது  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெள்ளியன்று விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைத்த சீலை நீக்குமாறு வருவாய் கோட்டாட்சியர், மற்றும் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி தயாரிப்பாளர் சங்க அலுவலகம் திறக்கப்பட்டது. தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை திறந்து விஷால் உள்ளே சென்றார். வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள் அவருடன் இருந்தனர். 

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நிச்சயமாக இளையராஜாவுக்கு விழா நடத்தப்படும். சங்கம் தொடர்ந்து நற்பணிகளில் ஈடுபடும். மற்றொரு அலுவலகமும் சனிக்கிழமையன்று  திறக்கப்படும். தொடர்ந்து எங்களது பணிகளை செய்வோம். 

அனைவருக்கும் இங்கு கருத்துரிமை வேண்டும் அரசியலில் யார் வேண்டுமானாலும் வந்து நல்லது செய்யலாம்.  அரசியல் என்பது ஒரு தனிப்பட்ட நபர்களுக்காக ஒதுக்கப்பட்டது அல்ல; யார் வேண்டுமானாலும் வரலாம். 

தயாரிப்பாளர் சங்க பிரச்னையில் நல்ல முடிவு கிடைத்துள்ளது. வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்துக்கு நன்றி. சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சீல் அதிகாரிகளால் அகற்றப்படும்.

தேர்தலின் பொது தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளில் எந்த குற்றச்சாட்டு என்றாலும் உறுப்பினர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்து சொல்லலாம்

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com