தவறான பிரசாரம் முறியடிப்பு: நெ.1 இடத்தைப் பிடித்த விஸ்வாசம் படத்தின் தமிழ் லிரிக் விடியோ!

இந்த அவலம் யூடியூபுடன் முடிந்தாலும் பரவாயில்லை. அதே ஆங்கில லிரிக் விடியோ தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும்...
தவறான பிரசாரம் முறியடிப்பு: நெ.1 இடத்தைப் பிடித்த விஸ்வாசம் படத்தின் தமிழ் லிரிக் விடியோ!

யூடியூபில் வெளியிடப்படும் தமிழ்ப் பாடல்களில் எப்போதுமே ஒரு பிரச்னை இருக்கும். பாடல் வரிகள் எப்போதுமே ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதாவது தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். 

இந்த அவலம் யூடியூபுடன் முடிந்தாலும் பரவாயில்லை. அதே ஆங்கில லிரிக் விடியோ தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும். இது தமிழ் ஆர்வலகர்கள் பலருக்கும் கோபத்தை வரவழைத்தது.

இதற்கு ஆடியோ நிறுவனங்கள், திரையுலகினர் தரப்பிலிருந்து அளிக்கப்படும் விளக்கம் - தமிழ் படிக்கத் தெரியாத பலர் வெளிநாடுகளில் உள்ளார்கள். அவர்கள் பாடல் வரிகளைப் படிப்பதற்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் தரப்படுகிறது. 

சரி, பாடல் வரிகளை ஆங்கிலத்தில் தரவேண்டாம் என யாரும் சொல்லவில்லை. ஆனால் பாடல் வரிகளை ஆங்கிலம், தமிழ் எனத் தனித்தனியாகத் தரலாமே என்றால் அதற்குப் பதில் இருக்காது. இதனால் யூடியூப் வியூஸ் குறையும் என்றொரு கருத்தும் நிலவி வந்தது. இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பாடலாசிரியர்களிடம் முறையிட்டார்கள். அதற்கு அவர்கள் அளித்த பதில் - நாங்கள் சொல்லிக்கொண்டுதான் வருகிறோம். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது எனப் பதில் வருகிறது. நாங்கள் என்ன செய்வது என்பார்கள். தமிழ் தமிழ் என்று முழங்கும் ஜி.வி. பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழ் ஆகிய இருவர் இசையமைக்கும் பாடல்களுக்கும் இதே நிலை தான். யார் தான் இதை மாற்றுவார்கள் என்று நொந்துபோகும் அளவுக்கு ஆங்கில லிரிக் விடியோக்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. 

எனினும் அவ்வப்போது இதற்கு சிலர் தீர்வு காண முயன்றுள்ளார்கள். சீதக்காதி படப்பாடல்களின் லிரிக் விடியோ தமிழில் தரப்பட்டன. ரஜினி நடித்த பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலின் லிரிக் விடியோவும் தமிழில் தரப்பட்டது. சர்கார் படப் பாடல்களில் ஒரு விரல் புரட்சி பாடலுக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் நெவர் லெட் மீ கோ பாடலுக்கும் தமிழ் லிரிக் விடியோக்கள் வெளியிடப்பட்டன. 

இந்நிலையில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண ஒரு முயற்சி எடுத்துள்ளது விஸ்வாசம் படக்குழு. அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. அந்த மூன்று பாடல்களில் இரண்டு பாடல்களுக்குத் தமிழ் லிரிக் விடியோக்கள் தான் வெளியாகியுள்ளன. இது யாருமே எதிர்பாராத ஒரு மாற்றம். இதுவரை அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் எந்தவொரு படத்தின் பாடல்களுக்கும் இதுபோன்று தமிழ் லிரிக் விடியோ வெளியிடப்பட்டதில்லை. நேற்று மூன்றாவதாக வெளியான கண்ணான கண்ணே பாடல், தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இதன்மூலம் தமிழ் லிரிக் விடியோக்களை வெளியிட்டால் அது அதிகளவில் ரசிகர்களைச் சென்று சேராது என்கிற தவறான பிரசாரம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் இனிமேல் மேலும் பல தமிழ் லிரிக் விடியோக்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான மிகப்பெரிய முயற்சியை விஸ்வாசம் படம் ஆரம்பித்து வைத்துள்ளது. அஜித், சிவா, இமான், லஹரி மியூசிக், சத்யஜோதி ஃபிலிம்ஸ் என இதற்குக் காரணமான அனைத்து தரப்பினருக்கும் நன்றி சொல்லலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com