2018-ம் ஆண்டின் சிறந்த 5 தமிழ்த் திரைப்படங்கள்!

முதல் அமைச்சர் பதவியைக் கைப்பற்றுவதற்காக கொலை செய்யவும் துணியும் வாரிசு பற்றிய கதையாக மட்டும் சர்க்கார்
2018-ம் ஆண்டின் சிறந்த 5 தமிழ்த் திரைப்படங்கள்!

5.சர்க்கார்

முதல் அமைச்சர் பதவியைக் கைப்பற்றுவதற்காக கொலை செய்யவும் துணியும் வாரிசு பற்றிய கதையாக மட்டும் சர்க்கார் திரைப்படத்தை மதிப்பிட முடியவில்லை. அரசியல்வாதிகளின் சுயநலப் பண்புகளை வெளிபடுத்தியது மட்டுமின்றி சுயநலமற்ற சமூகசேவகர்களை அரசியல்வாதிகளாக்க வேண்டும். அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வைக் கொண்டு வர படக்குழு முயற்சி செய்திருக்கிறது. ஒரு விரல் புரட்சியின் முக்கியத்துவத்தைப் பேசத் தொடங்கிய நல்ல முயற்சிக்காகவும் அமைதிப்படைக்கு அடுத்து ஒரு வெளிப்படையான அரசியல் திரைப்படத்தைக் கொடுக்க முயற்சி செய்தமைக்காகவும் சர்கார் திரைப்படத்தை இந்தப் பட்டியலில்  ஐந்தாவது இடத்திற்குக் கொண்டு வரலாம்.

4.செக்கசிவந்த வானம்

ரௌடிகள் அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தந்தையையே கொல்ல முயற்சி செய்து, தம்பிகளை ஒழிக்க நினைக்கும் வில்லத்தனத்தின் மொத்த உருவமாக அரவிந்த்சுவாமி வருகிறார். ஆனால் அண்ணனோ தம்பியோ வெற்றி பெறுவதற்கு எந்தப் பாசமும் பந்தமும் குறுக்கே நின்றுவிட முடியாது, வெற்றிக்காக யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்கிற இந்திய இதிகாசங்கள் சொல்வதை நவீனயுலகத்திற்கு ஏற்ற வகையில் திரைக்கதையாக்கியதில் மணிரத்னம் வெற்றி பெற்றிருக்கிறார். 'எனக்கு இந்த ரௌடிசம் சின்ன வயசிலே இருந்தே பிடிக்காது” என்ற ஒற்றை வாக்கிய வசனத்தை மட்டுமே நம்பி இப்படி ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தைத் தந்தமைக்காக  இந்தப் பத்துப்படப் பட்டியலுக்குள்  செக்க சிவந்த வானத்தை நான்காவது இடத்திற்குக் கொண்டு வரலாம்.

3.மேற்குத் தொடர்ச்சி மலை

உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்ற உரிமை முழக்கம் எப்போதுமே சொல்லாடல் மட்டுமே. இந்தக் கோட்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வர எந்த அரசியலும் துணைக்கு வராது. எவ்வாறான முயற்சிகள் இருப்பினும் முதலாளித்துவத்தின் அழுத்தப் பிடிக்குள் இருந்து விளிம்பு நிலை மக்கள் வெளியே வர என்ற ஏக்கத்தை, எதார்த்தமல் மீறாமல் சொல்வதற்கு லெனின் பாரதியால் மட்டுமே முடிந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் தமிழ்த் தயாரிப்பாளர்களில் உச்சகதாநாயாகன் தகுதியைத் தானாகப் பெறுகிறார் விஜய்சேதுபதி.  இயற்கையின் அழகியலோடு துல்லியமாகக் கதை சொல்லியமைக்காக இந்தத் திரைப்படம் 2018-ம் ஆண்டின் சிறந்த பத்துப்படப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடிக்கிறது.

2.கனா

விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த ஏழைச் சிறுமியாலும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற முடியும் என்பதை எளிமையான திரைக்கதையின் மூலம் சொல்லியதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் அருண்ராஜா காமராஜும் சிவ கார்த்திகேயனும். 13 வயது சிறுமி தோற்றமாக இருந்தாலும் 18 வயது தோற்றமாக இருந்தாலும் ஐஸ்வராய் ராஜேஷிற்குச் சரியாகப் பொருந்துகிறது. கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு சிறந்த கிரிக்கெட் கதாநாயகியாகிய உயர்வதற்கான இவரின் உழைப்பு தமிழ்த் திரையுலகிற்குப் பெருமையைச் சேர்த்துத் தந்துள்ளது. சத்யராஜிடம் என்ன வேலையைக் கொடுக்க வேண்டும் என்று சரியாகக் கொடுத்திருக்கிறார்கள். மகளின் கனவை நிறைவேற்ற ஆசைப்படும் அப்பாவாக, விவசாயத்திற்குப் போராடும் மெய் மனிதனாக வாழ்ந்திருக்கிறார். திரைப்படத்தில் உள்ள முதுபெரும் நடிகர் இளவரசு மட்டும் அல்லாமல், தர்ஷன் உள்ளிட்ட அனைத்துப் புது முக நடிகர்களும் தங்களின் நடிப்புப் பங்களிப்பைக் குறைவில்லாமல் வழங்கியிருக்கிறார்கள். படம் தொடங்குவது முதல் முடியும் வரை விறுவிறுப்புப் பஞ்சமில்லாமல் குடும்பத் திரைப்படமாக இத்திரைப்படத்தை வழங்கியிருக்கிறார்கள். ஒரு பெண்ணின் விடா முயற்சி, ஆண்களின் இழிபேச்சுகளைத் தாண்டி சாதிக்கத் துடிக்கும் கோபம், பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பெற்றோர் போன்ற நல்ல கருத்துக்களைப் பேசியுள்ள கனா இரண்டாவது இடம் பெறுவதில் வியப்பு ஏதுமில்லை.

1.பரியேறும் பெருமாள்

இந்தியா விடுதலை பெற்று 71 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் ஜாதி ஆதிக்கமும் ஜாதி ஆணவமும் முடிவுக்கு வரவில்லை. இந்த ஜாதிச் சிந்தனையால் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்படும் உயிர்களின் வலியை உணரக்கூடிய மனநிலையை இந்தியச் சமூகம் இன்னும் பெறவில்லை. பெரியார் பூமி என்று சொல்லப்படும் தமிழ்நாட்டிலும் ஜாதி ஆவணக் கொலைகள் அதிர்ச்சியைத் தருகின்றன. பிராமணர் மற்றும் பிரமாணர் அல்லாதவருக்குமான பிரச்சினையே ஜாதி என்று பெரியாரியவாதிகள் சொல்லிக் கொண்டிருக்கும்போது, பிராமணர் அல்லாதவர்களில் உள்ள ஆதிக்க ஜாதியினரின் அடக்குமுறைகளையும் இழிஜாதிப் பற்றையும் துணிச்சலாகப் பேசி இருக்கிறார் மாரி செல்வராஜ். எத்தனை தடைகள் வந்தாலும் பொறுமை காத்து, அறிவு வளர்ச்சியிலும் திறன் மேம்பாட்டிலும் கல்வியிலும் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் ஒடுக்கப்பட்டத் தாழ்த்தப்பட்ட சமூகம் வளர்ச்சியையும் சுயமரியாதையையும் பெற முடியும் என்கிற அண்ணல் அம்பேத்கரின் கருத்தை ஆழமாகச் சொல்வதற்காக இப்படத்தைத் தயாரித்து இருக்கிறார் பா.ரஞ்சித். இவர்களின் நேர்மறையான முயற்சிகளுக்காக 2018ம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பரியேறும் பெருமாள் பெறுகிறது.

- சி.சரவணன் 9360534055 senthamizhsaravanan@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com