இந்தியத் திரையுலகின் வசூல் மன்னன் - சல்மான் கான்; வசூல் ராணி - தீபிகா படுகோன்!

இதன் அடிப்படையில் இந்தியாவின் வசூல் மன்னன் என சல்மான் கானையும் வசூல் ராணி என தீபிகா படுகோனையும் மதிப்பிடலாம்...
இந்தியத் திரையுலகின் வசூல் மன்னன் - சல்மான் கான்; வசூல் ராணி - தீபிகா படுகோன்!

தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவத் படம் வசூலில் சாதனை படைத்துவருகிறது. இதையடுத்து தீபிகா படுகோனின் திரை வாழ்க்கையில் இன்னொரு சூப்பர் ஹிட் படமாக இது அமைந்துள்ளது. 

சல்மான் கான், கத்ரினா கயிஃப் நடிப்பில் அலி அப்பாஸ் ஜஃபர் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் - டைகர் ஜிந்தா ஹை (Tiger Zinda Hai). இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியது. இந்த இலக்கை எட்டிய சல்மான் கானின் 12-வது படம் இது. இந்தியாவில் எந்தவொரு நடிகரின் படங்களும் இத்தனைமுறை ரூ. 100 கோடி வசூலைத் தொட்டதில்லை. இதில் இரு சல்மானின் படங்கள் ரூ. 300 கோடியை  எட்டியுள்ளன. சுல்தான் ரூ. 300 கோடியும் பஜ்ரங்கி பைஜான் ரூ. 320 கோடியும் இந்தியாவில் வசூல் செய்துள்ளன. இந்நிலையில் தற்போது சல்மானின் மூன்றாவது ரூ. 300 கோடி படம் என்கிற பெருமையை எட்டியுள்ளது டைகர் ஜிந்தா ஹை. மேலும் சல்மான் கான் படங்களில் அதிகம் வசூல் செய்த படமாகவும் பெருமை பெற்றுள்ளது. இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலித்த 6 படங்களில் மூன்று சல்மான் கான் நடித்தவை. அமீர் கானின் இரு படங்கள் (பிகே, டங்கல்) ரூ. 300 கோடியைத் தாண்டியுள்ளன. இந்தியாவில் ஷாருக் கானின் எந்தவொரு படமும் ரூ. 300 கோடி வசூலித்ததில்லை என்பது ஆச்சர்யமான தகவல். இந்தியத் திரையுலகில் சல்மான் கானுக்கு நிகரான வசூல் மன்னன் வேறு யாருமில்லை என்பது சமீபத்தில் வெளியான டைகர் ஜிந்தா ஹை படம் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

சரி, இந்திய அளவில் வசூல் ராணி என்று எந்த நடிகையைக் கூறமுடியும்? 

சந்தேகமேயில்லாமல் தீபிகா படுகோன் தான் இந்தப் பட்டத்துக்கு உரியவர். தீபிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்மாவத் படம் நேற்றுவரை இந்தியாவில் ரூ. 231 கோடி வசூலித்துள்ளது. 

பத்மாவத் படம் ரூ. 100 கோடி வசூலை அடைந்த தீபிகா படுகோனின் 7-வது படம். தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர், ஹே ஜவானி ஹை தீவானி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா, ரேஸ்2, பத்மாவத் என ஏழு படங்கள் நூறு கோடி வசூலை அடைந்துள்ளன. இதுபோன்று வேறு எந்த இந்திய நடிகையின் படங்களும் ஏழு முறை ரூ. 100 கோடி வசூலைத் தொட்டதில்லை. 

இதன் அடிப்படையில் இந்தியாவின் வசூல் மன்னன் என சல்மான் கானையும் வசூல் ராணி என தீபிகா படுகோனையும் மதிப்பிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com