மார்ச் 1 வேலை நிறுத்தம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!

மேற்கண்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை என்பதாலும்...
மார்ச் 1 வேலை நிறுத்தம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால், மார்ச் 1 ஆம் தேதி முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தைக் குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும் செவி சாய்க்காத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம் மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. அவர்கள் ஒட்டுமொத்தமாக மார்ச் 1-ஆம் தேதி முதல், எந்த ஒரு திரைப்படத்தையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஒருமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் இந்தப் பிரச்னை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக தமிழ்த் திரையுலகமும் அண்டை மாநிலங்களுடன் இணைந்து அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது.

படம் திரையிடப்படாது: தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் தமிழ்த் திரையுலகமானது மிக மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டு இன்று தயாரிப்பாளர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. இந்த நிலை மாற, நியாமான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக வரும் மார்ச்1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்படத்தையும் வெளியிடுவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ந்நிலையில் டிஜிட்டல் நிறுவனங்களுடன் தென்னிந்தியத் திரையுலகம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். அதில், திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் தொடரும் என்று மீண்டும் அறிவித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குக் கடும் நஷ்டத்தினை ஏற்படுத்தி கொண்டிருக்கும் QUBE and UFO (Digital Service Prodivers) கட்டணங்களைக் குறைப்பது அல்லது அதற்கான மாற்றான டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு ஏற்பாடு செய்வது என்கிற அடிப்படையில் மார்ச் 1-முதல் திரைப்படங்கள் வெளியீட்டு நிறுத்தம் செய்வது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 07.02.2018 அன்று QUBE and UFO (Digital Service Prodivers) சம்பந்தமாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பிலிம் சேம்பர் நிர்வாகிகள் மற்றும் 5 மாநிலத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் QUBE and UFO - நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

மேற்கண்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை என்பதாலும், 07.02.2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாத காரணத்தினாலும் மீண்டும் வருகிற 16.02.2018 அன்று சென்னையில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பிலிம் சேம்பர் நிர்வாகிகள் மற்றும் 5 மாநில திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் QUBE and UFO - நிறுவன உரிமையாளர்களும் கலந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 1 முதல் திரைப்பட வெளியீடு நிறுத்தம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com