இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கா தற்கொலை எண்ணம் இருந்தது? சுயசரிதையில் விளக்கம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையை ‘நோட்ஸ் ஆப் எ டிரீம்’ எனும் பெயரில் கிரு‌ஷ்ணா திரிலோக்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கா தற்கொலை எண்ணம் இருந்தது? சுயசரிதையில் விளக்கம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையை ‘நோட்ஸ் ஆஃப் எ டிரீம்’ எனும் பெயரில் கிரு‌ஷ்ணா த்ரிலோக் என்பவர் சுயசரிதையாக எழுதி அண்மையில் மும்பையில் வெளியிட்டுள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான் இது குறித்து கூறுகையில், ‘இந்தப் புத்தகத்தின் மூலம் என்னுடைய வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களைத் திரும்பிப் பார்க்கிறேன். அவை நீண்ட நாட்கள் என் நினைவில் இருந்தவை. என்னுடைய இசை மற்றும் சொந்த வாழ்க்கையைப் பற்றி பலருக்கும் தெரியாதவற்றை கிருஷ்ணா திரிலோக் என்னுடன் நீண்ட உரையாடலின் மூலம் அறிந்து எழுதியுள்ளார்.

பல ரசிகர்களின் அன்பும் பிரார்த்தனையும் எப்போதும் என்னை நெகிழச் செய்கிறது. அவர்களது ஆதரவு இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை. இந்தப் புத்தகம் பாசிட்டிவ் விஷயங்களைப் பேசுகிறது. அன்பைப் பேசுகிறது. இதைப் படிப்பவர்கள் நிச்சயம் விரும்புமாறு திரிலோக் எழுதியுள்ளார்’ என்றார்.

புத்தக ஆசிரியரான த்ரிலோக் கூறுகையில், 'இந்தப் புத்தகம் எழுதும் காலகட்டம் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு மேஜிக் ஜர்னி போனது போலிருந்தது. தன்னுடைய சொந்த வாழ்க்கை மற்றும் இசைப்பயணம் குறித்து பல்வேறு தகவல்களை அவர் பரிமாறிக் கொண்டது எனக்கு ஒரு கனவைப் போலவே இருந்தது. இந்த ப் பிரபஞ்சத்தை, எதிர்காலத்தை அவர் நோக்கும் விதமே ஒரு பாடலைப் போலானது’ என்றார்.

இப்புத்தகத்தில் ஏ.ஆர்.ரகுமான் தனது பால்ய கால வாழ்க்கை, இளமைப் பருவம், சினிமா அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்களை பகிர்ந்துள்ளார். இளம் வயதில் அவருக்குத் தற்கொலை எண்ணம் இருந்ததாகவும் கூறியிருக்கிறார். ‘எனது இளமை கால வாழ்க்கை க‌ஷ்டம் நிறைந்ததாக இருந்தது. எனது ஒன்பதாவது வயதில் தந்தை இறந்ததும் வாழ்க்கை சூனியம் ஆனது போலாகிவிட்டது. குடும்பத்தை காப்பாற்ற என் தந்தையின் இசைக் கருவிகளை வாடகைக்கு கொடுத்து, அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில்தான் செலவுகளை சமாளித்தோம். என் 25-வது வயது வரை எனக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தது. ஆனால் அந்த எண்ணம் நீடிக்கவில்லை, எனக்கு அதிக மனோ தைரியத்தையும் கொடுத்தது. காரணம் என்றாவது ஒருநாள் அனைவரும் சாகத்தானே வேண்டும்? மரணம் என்பது அனைவருக்கும் நிரந்தரமான ஒன்று. எல்லோருக்குமே காலாவதி நாள் குறிக்கப்பட்டு இருக்கும் பொழுது நான் ஏன் வாழ்வதற்கு பயப்பட வேண்டும்? என்ற உறுதி எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு தான் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் ‘ரோஜா’ படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது.’ என்று புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com