‘96’ தயாரிப்பாளர் படத்தில் நடிக்க வேண்டாம்: நடிகர் சங்கம் வேண்டுகோள்

கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, சம்பளம் வழங்காமல் தொடர்ந்து படங்களைத் திரையிட்டு...
‘96’ தயாரிப்பாளர் படத்தில் நடிக்க வேண்டாம்: நடிகர் சங்கம் வேண்டுகோள்

96 பட வெளியீட்டின்போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக 96 படத்தயாரிப்பாளரின் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம், துப்பறிவாளன் படத்தில் நடித்ததற்காக விஷாலுக்கும் வீரசிவாஜி படத்தில் நடித்ததற்காக விக்ரம் பிரபுவுக்கும் ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது. 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சம்பளப் பாக்கி பெற்றுக்கொள்ளாமலேயே படம் வெளியானது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, சம்பளம் வழங்காமல் தொடர்ந்து படங்களைத் திரையிட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கும் தயாரிப்பாளருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்கள் எந்த ஒரு நிகழ்வுக்கும் படங்களுக்கும் ஒத்துழைப்பு தரவேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. சமீபத்தின் வெளியான இந்தப் படம் மக்களின் பலத்த பாராட்டைப் பெற்றது. ஆனால் அப்படத்தின் அதிகாலை 5 மணி சிறப்புக் காட்சி கேடிஎம் பிரச்னை காரணமாக ரத்தானது. இதனால் காலையிலேயே 96 படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வந்த ரசிகர்கள் கடுப்பானார்கள். பிரச்னை காலை 10 மணி அளவில் சரிசெய்யப்பட்டு பிறகு படம் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. 

96 படத்தயாரிப்பாளர் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தகோபால், விஷால் நடித்த கத்திச்சண்டை படத்தைத் தயாரித்தார். இதில் விஷால் மற்றும் ஃபைனான்சியர்களுக்கு பணப்பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கான சம்பளப் பாக்கியைத் திருப்பிக் கொடுத்த பிறகே 96 படத்தைத் திரையிடவேண்டும் என்று விஷால் தரப்பில் அழுத்தம் கொடுத்ததால் காலைக்காட்சி ரத்தானதாகவும் கூறப்படுகிறது. இதன்பிறகு 96 படக்கதாநாயகன் விஜய் சேதுபதி இப்பிரச்னையில் தலையிட்டு தன்னுடைய சம்பளம் ரூ. 3 கோடி மற்றும் கூடுதலாக ரூ. 1 கோடி என  ரூ. 4 கோடியை அளித்த பிறகே பிரச்னை முடிவுக்கு வந்து படம் திரையிடப்பட்டது. 

இந்தப் பிரச்னை குறித்து தயாரிப்பாளர் சதீஷ் குமார் வெளியிட்ட ஆடியோ அறிக்கையில் கூறியதாவது: நந்தகோபாலுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் 96 படத்தின் காலைக்காட்சி திரையிடப்படவில்லை. அப்படி ஒரு பிரச்னை இருந்தால் மாற்று வழியை விஷால் யோசித்திருக்க வேண்டும். இத்தனைக்கும் விஜய் சேதுபதி ரூ. 1 கோடி தருவதாகக் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் படத்தை வெளியிடத் தடையாக இருப்பது அழகல்ல. அதேபோல நந்தகோபாலிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விஷாலின் இந்தச் செயல் கண்டனத்துக்கு உரியது. தனது நிலையை விஷால் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறினார். 

96 பட வெளியீட்டின்போது ஏற்பட்ட பிரச்னையை அடுத்ததாக நடிகர் சங்கம் 96 படத் தயாரிப்பாளர் படத்தில் நடிக்க வேண்டாம் என்று நடிகர் சங்க உறுப்பினர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com