மறைந்த நடிகர் அம்பரீஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ரஜினி!

நடிகர் அம்பரீஷுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ரஜினிகாந்த் இன்று காலை சென்னையிலிருந்து பெங்களூருக்கு கிளம்பினார்
மறைந்த நடிகர் அம்பரீஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ரஜினி!

நடிகர் அம்பரீஷுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ரஜினிகாந்த் இன்று காலை சென்னையிலிருந்து பெங்களூருக்கு கிளம்பினார்.  

தனது நண்பர் அம்பரீஷுடன் இணைந்து தமிழிலும் கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் ரஜினி. பிரியா, தாய் மீது சத்தியம், கில்லாடி கிட்டு ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அம்பரீஷ், விக்ரம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில், சனிக்கிழமை இரவு காலமானார்.  இவருக்கு மனைவி சுமலதா மற்றும் ஒரு மகன் உள்ளார். அம்பரீஷ், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராவார். 

மண்டியா மாவட்டம், தொட்டரசினகெரெவைச் சேர்ந்த அம்பரீஷ் அரசியலிலும், திரைப்படத்திலும் தனி முத்திரை பதித்துள்ளார். 1972-இல் நாகரஹாவ் படத்தின் மூலம் அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் 208 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜனதா தளத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய அம்பரீஷ், மண்டியா தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் 2013 முதல் 2016 வரை வீட்டுவசதி துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006-07-இல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சராக இருந்தார். மூன்றுமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அம்பரீஷின் மரண செய்தி அறிந்து கன்னட திரையுலகினர் வருத்தம் அடைந்துள்ளனர். சக நடிகர் நடிகைகள் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் அம்பரீஷின் மரணம் குறித்து ரஜினி, 'நல்ல மனிதர் மற்றும் அற்புதமான நண்பனை இன்று இழந்து விட்டேன். உங்களை மிஸ் பண்ணுவேன்’ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனது ஆத்மார்த்த நண்பருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ரஜினிகாந்த் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கிளம்பிச் சென்றார். பெங்களூரூ கண்டீ ரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பரீஷ் உடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார் ரஜினி.

அன்னாரது உடலுக்கு முன்னாள் பிரதமர் தேவ கெளடா, கர்னாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com