கல்லூரியில் பட்டம் பெறுவது திருமணம் செய்து கொள்ள மட்டுமா? கேள்வி எழுப்பும் தளிர் குறும்படம்

நம்ம ஊரில் குழந்தை வரம் வேண்டினால் கூட ஆண் குழந்தையைக் கொடு கடவுளே என்று கேட்பவர்கள்தான் அதிகம்.
கல்லூரியில் பட்டம் பெறுவது திருமணம் செய்து கொள்ள மட்டுமா? கேள்வி எழுப்பும் தளிர் குறும்படம்

நம்ம ஊரில் குழந்தை வரம் வேண்டினால் கூட ஆண் குழந்தையைக் கொடு கடவுளே என்று கேட்பவர்கள்தான் அதிகம். பெண் குழந்தை என்றால் கருவிலேயே கலைக்க முயற்சி செய்யும் கொடூர நபர்கள் இன்னமும் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன்? பெண் குழந்தையை வளர்ப்பது கஷ்டமா? பெண்ணாக பிறந்து விட்டாலே இன்னொறு வீட்டுக்கு செல்லப் போகிறவள்தானே என்று ஒரு எண்ணமும், அவளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற அச்சமும் இங்கே உள்ள பெற்றோர்களுக்கு எழுந்து விடுகிறது. அப்படி எல்லோரும் கருதினால் இங்கே உலக இயக்கமும் இருக்காது; பல சாதனை பெண்மணிகளும் இங்கே இருந்திருக்க முடியாது.

பெண்ணாக பிறப்பது தவம். பெண்ணால் மட்டுமே ஓர் உயிரை இந்த உலகத்துக்குக் கொண்டு வர முடியும் என்ற உண்மை கூட சிலருக்கு இன்னமும் புரியாமல் இருப்பது ஏன்?

அப்படியும், இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து பல சவால்களையும், கஷ்டங்களையும் கடந்து, தடைகளை தகர்த்தெறிந்து வரும் பெண்களில் பெரும்பாலானவர்கள் திருமணத்துக்கு பிறகு வீட்டுக்குள் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.

வீட்டில் இருக்கும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா என்றால், அது பெரும்பாலான வீடுகளில் இல்லை என்பதே கசப்பான உண்மை. வேலையில்லாதவர் என்றும் வீட்டில் தானே இருக்கிறாய் என்று கணவரும், பிள்ளைகளும் கடிந்து கொள்வதை பல வீடுகளில் காண முடியும்.

நீங்கள் என்ன வேண்டுமானால் சொல்லிவிட்டு போங்கள், உங்களுக்காகவே இந்த வாழ்க்கை என்ற அர்ப்பணிப்புடன் பல இறைவிகள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் வேலைக்கும் சென்று கொண்டே குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வருகிறார்கள்.

குறும்பட இயக்குனர் பொன்வாணி
குறும்பட இயக்குனர் பொன்வாணி

திருமணத்துக்கு பிறகு, சுயமரியாதையை கணவரிடம் இழக்க நேரிடும் ஒரு பெண் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதே தளிர் குறும்படத்தின் கதை.

குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாமல் போகும் மனைவிக்கு ஆறுதல் கூறி குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்ற ஆலோசனையையும் வழங்குகிறார் கணவர். பெண் குழந்தையைத் தத்தெடுப்பது போன்று கனவு கண்டு, மிகுந்த மகிழ்ச்சி அடையும் மனைவிக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. பெண் குழந்தை வேண்டாம், ஆண் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று கணவர் விருப்பம் தெரிவிக்கிறார். பெண் குழந்தையை வளர்ப்பது கஷ்டம் என்றும், கல்லூரியில் படித்து பட்டம் பெறுவதே திருமணம் செய்து கொள்வதற்காக தானே என்றும் கணவர் கூறுவதை கேட்டு கண்ணீர் சிந்துகிறாள் மனைவி. அதன் பிறகு அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதே குறும்படத்தின் இறுதிக்காட்சி. அற்புதம்!

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார் கணேஷ் சிவா. படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டுகிறது குழுவினரின் உழைப்பு. இக்குறும்படத்தில் நடித்திருக்கும் நிவேதாவும், ஆனந்த்ராமும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். குறும்படத்தை பொள்ளாச்சியைச் சேர்ந்த பொன்வாணி என்ற இளம்பெண் எழுதி இயக்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் பரவலான பாராட்டை பெற்றுவரும் இந்தப் படம், யூ-டியூப்பில் அதிக பார்வையாளர்களை கடந்துச் சென்று கொண்டிருக்கிறது.

இவரிடம் பேசியபோது, 'கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் விஸ்காம் படித்துக் கொண்டிருந்த போது, இறுதி ஆண்டில்  ப்ராஜக்ட்டுக்காக இந்தக் குறும்படத்தை எடுத்தேன். விஸ்காம் எடுத்துப் படிக்கவும், இந்தப் படத்தை உருவாக்கவும் எனது பெற்றோரும், நண்பர்களும் ஆதரவாக இருந்தனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். என்னை சுற்றியிருந்தவர்களிடம் இருந்து நான் பார்த்ததையும், எனது கற்பனையையும் கலந்து இந்தக் கதையை எழுதுனேன்.

தற்போது, சென்னையில் உள்ள எம்சிசியில் எம்ஏ மாஸ் கம்யூனிகேஷன் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். அடுத்து ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறேன்’ என்று கூறிய பொன்வாணிக்கு வாழ்த்துக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com