ரஜினி ரசிகரின் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்ததா 2.0?

டாப் ஆங்கிலில், Birds eye view-வில் படம் துவங்குகிறது. சென்னையின் ஒதுக்குப்புறம் போன்ற ஓரிடத்தில் செல்ஃபோன் டவரொன்றில்
ரஜினி ரசிகரின் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்ததா 2.0?

டாப் ஆங்கிலில், Birds eye view-வில் படம் துவங்குகிறது. சென்னையின் ஒதுக்குப்புறம் போன்ற ஓரிடத்தில் செல்ஃபோன் டவரொன்றில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் படம் வேறு திசையில் பயணிக்கிறது. சென்னையில் பல இடங்களில் மக்களின் செல்ஃபோன்கள் திடீரென்று பறந்து போய் மாயமாகிவிடுகிறது. செல்ஃபோன் வணிகத்திலுள்ள சிலர் கொலை செய்யப்படுவதும் தொடரவே, மக்கள் பதற்றமடைகிறார்கள். அரசாங்கமே குழப்பம் அடைகிறது. இந்நிலையில் விஞ்ஞானி வசீகரனின் உதவியை நாடுகிறார்கள். இதையெல்லாம் செய்பவர் யார் என்று கண்டறிய ஒரே தீர்வாக தடை செய்யப்பட்ட சிட்டி ரோபோவைப் பரிந்துரை செய்கிறார் வசீகரன். முதலில் மறுத்த மந்திரி வேறு வழியின்றி சிட்டியால் மட்டுமே மனிதர்களுக்கு ஏற்படவிருக்கும் இந்த பேராபத்திலிருந்து காப்பாற்ற முடியும் என முடிவு செய்கிறார். வசீகரனும் அவரது அழகிய புதிய ரோபோ பெண் உதவியாளர் எமியும் இணைந்து மீண்டும் சிட்டியை ரீசெட் செய்கிறார்கள். செல்ஃபோன் உபயோகிப்பவர்கள் மீது இத்தனை ஆவேசம் கொண்ட பட்சிராஜனின் நோக்கம் என்ன? அவரது பின்னணி என்ன? வசீகரனுக்கு என்ன நிகழ்ந்தது? சிட்டி எப்படி வசீகரனை காப்பாற்றி பட்சி ராஜனை அழிக்கிறான் என்பதை பரபரப்பாக சொல்வதுதான் ‘2.0’படம்.

2.0 படத்தில் பாஸிட்டிவ் விஷயங்கள்

சந்தேகமில்லாமல் ரஜினிதான். சிட்டியாகவும், வசீகரனாகவும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறப்பாக தன் பங்கினை செய்துள்ளார். வசீகரன் சனாவிடம் அலைபேசியில் பேசும் வசனங்கள் அழகு. ஆரா பற்றி அறிவியல்பூர்வமாக விளக்கியிருப்பது படத்தின் சிறப்பு. இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை. இதில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் சொந்தம். மனிதன் தன் சுய லாபத்திற்காக இயற்கையை அழித்துக் கொண்டிருப்பதைத் தொடர்ந்தால் மிகப் பெரிய ஆபத்தில் அது முடியும் எனும் எச்சரிக்கை மணியை இத்திரைப்படத்தின் மையக் கதை விளக்குகிறது. 

பட்சிராஜனாக நடித்துள்ள ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் அக்கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். 'பறவைகளை காப்பாற்றுங்கள்' என்ற பதாகையுடன் அவர் நடத்தும் எளிய போராட்டங்கள் கவனம் பெறாமல் போகும் போது, அவரது மனநிலை மெள்ள சிதைக்குள்ளாவதை தனது நிதானமான நடிப்பின்மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பறவைகளை நேசிக்கும் ஒருவராக வாழ்ந்து இறுதியில், அதற்கெனவே தன்னுயிரையும் மாய்த்துக் கொள்ளும் அழுத்தமான கதாபாத்திரம் அவருடையது.

2.0-வில் குறிப்பிடத்தக்க முக்கியமான அம்சம் 3டி தொழில்நுட்பம். அட்டகாசமாக மிரட்டியிருக்கிறார்கள். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தில் இயந்திரங்கள் மனிதத்தன்மையுடன் இருப்பதும், மனிதர்கள் கொடூரமாக இருப்பதும் இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுயநலம் மட்டுமே குறிக்கோளாகவும்,  சுய லாபம் மட்டும் பிழைப்பாகவும் உள்ள மனிதர்களின் மனசாட்சியை இது போன்ற திரைப்படங்கள் லேசாக உலுக்கலாம். 

போதாமையில் நிரம்பிய திரைப்படம் 2.0

ஹாலிவுட்டில் ஒரு படத்தின் sequel ஏன் எடுக்கிறார்கள் எனில் கதை அத்துடன் முடிவதில்லை. முதல் பாகம் நிறைவடைந்துள்ளதைப் போலிருந்தாலும் அடுத்தடுத்து இயக்குநருக்கு அக்கதையை வளர்த்துச் செல்வதற்கான Space இருக்கும். ப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலோவின் ‘The Godfather’ மற்றும் கிறிஸ்டபர் நோலானின் The Dark Knight டிராலஜி இதற்கு சிறந்த உதாரணம். போலவே பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், ஜுராஸிக் பார்க் உள்ளிட்ட படங்கள். ஆனால் தமிழ் படங்களில் எடுக்கப்பட்டுள்ள சீக்வல் திரைப்படங்கள் அவ்வரிசையில் முந்தைய படமே சிறப்பு என்று தோன்றும் வகையில்தான் உள்ளது. அதில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ‘எந்திரன் 2.0’ படமும் இடம்பிடித்துவிட்டது சோகமே. எந்திரன் படத்தில் சிட்டியின் செயல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கும். சிட்டியை உடைக்கும் போது நம் மனம் வருத்தமடையும். ஆனால் 2.0-வில் சிட்டிக்கு என்ன நேர்ந்தாலும் ரசிகரால் அதனுடன் கனெக்ட் ஆகமுடியவில்லை. சிட்டிக்கு மீண்டும் இணைப்பு தரும் காட்சிகளை இன்னும் மெனக்கிட்டிருக்கலாம். மேலும் இப்படத்தில் இறுதிக் காட்சி உட்பட, சிட்டியின் சாகஸம் எதுவும் மனதில் பதியவில்லை. ஏதோ ஒரு கம்யூட்டர் கேமை பார்ப்பது போலிருந்தது.

ஷங்கர் படங்களில் உள்ள வழமையான டெம்ப்லேட் 2.0-விலும் தொடர்ந்துள்ளது. வெவ்வேறு வடிவமாக இருந்தாலும் திரும்பக் காணுதல், கூறுவது கூறல் போன்றவை திரையில் பார்ப்பது சலிப்பூட்டுகிறது. திரைக்கதையில் எந்தவொரு திருப்பமோ, அதிர்வோ இல்லை. குறிப்பிட்டுச் சொல்லும்படியோ அல்லது நினைத்துப் பார்த்து மகிழும்படியாகவோ எவ்வித காட்சிகளும் இல்லை என்பது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். போலவே, வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்கள் கூட இந்தப்படத்தில் குறைவுதான். ஆழமான கருத்து இருந்தாலும், கையாளப்பட்ட விதத்தால் நீர்த்துப் போகிறது. நோக்கத்தையே சிதைக்கும் வண்ணம் இப்படம் உருவாகிவிட்டதை எப்படி படக்குழுவினர் கவனிக்கத் தவறினார்கள் என்று தெரியவில்லை. 

இந்தப் படத்தில் யார் ஹீரோ யார் வில்லன் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. பறவைகளுக்காக உயிர் இழந்த நிலையிலும் போராடும் பட்சிராஜனா? அல்லது தந்திரோபாயத்தைப் பயன்படுத்தி அதே பறவைகளை வைத்து அவனை முடக்கி அழிக்கும் சிட்டியா? இத்தகைய முரண்களைச் சமன் செய்ய தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்று ஷங்கர் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாலும் எது தர்மம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சுற்றுச் சூழலுக்காகவும், பறவைகளின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடும் நாயகனை எதிர் நாயகனாக்கி அக்கதாபாத்திரத்தின் ஆன்மாவைக் கொலை செய்துவிட்டது 2.0. 

சில காட்சிகளில் ரஜினிகாந்த் க்ளோஸ் அப்பில் காண்பிக்கப்படும் போது அவருக்கு மேக்-அப் போடப்படவில்லை என்பது தெரிகிறது. ரஜினியின் வசன உச்சரிப்பை எப்போதும் பலரும் ரசிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அவரது டயலாக் டெலிவரியில் தடுமாற்றம் உள்ளது. அதற்குக் காரணம் டெக்னிக்கல் விஷயங்களில் அதீத கவனம் செலுத்தியவர்கள், டப்பிங் போன்ற விஷயங்களை சரிவர பார்க்காமல் விட்டுவிட்டதுதான்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கவில்லை. புள்ளினமே பாடல் மட்டும் புன்னகைக்க வைக்கிறது. மிகச் சில தருணங்களைத் தவிர பின்னணி இசை மனதை நிறைக்கவில்லை. எந்திரன் படத்தின் 'இரும்பிலே ஓர் இருதயம் முளைத்ததோ’ பாடலை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இத்திரைப்படத்தில் ஆரம்பத்தில் பாடல்கள் வேண்டாம் என்றுதான் ஷங்கர் முடிவெடுத்திருந்தார். ஆனால் ரஹ்மானின் விருப்பத்திற்கிணங்கி சில பாடல்களைச் சேர்ந்திருந்தாலும், அது கதையோட்டத்திற்கு உதவவில்லை. ஏனோ ரஜினி - ஷங்கர் - ரஹ்மான் மேஜிக் நடக்கவில்லை என்பது இசை ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். மொத்தத்தில் இது ரஜினி படமல்ல, ஷங்கர் படமும் அல்ல. ரஜினி ரசிகர்களுக்கான படமும் இல்லை. ஒரு தரமான தொழிற்நுட்பம் சார்ந்த திரைப்படம் என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com