கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

'நான் கல்லூரியில் படிக்கும்போதே, எழுத்தாளராக மட்டுமின்றி சமூக ஆர்வலராக செயல்பட்ட சாதத் ஹாசன் மான்ட்டோ
கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

'நான் கல்லூரியில் படிக்கும்போதே, எழுத்தாளராக மட்டுமின்றி சமூக ஆர்வலராக செயல்பட்ட சாதத் ஹாசன் மான்ட்டோ பற்றி படித்துள்ளேன். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த அரசியல், மக்களைப் பற்றி எழுதியிருந்தவிதம் என்னை வெகுவாக கவர்ந்தது. விலைமாதர்களைப் பற்றி அவர் எழுதியிருந்தது ஆபாசமாக இருந்தது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் மூன்று முறையும், பாகிஸ்தான் அரசு மூன்று முறையும் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. ஆனால், அவர் தன்னுடைய எழுத்துகள் இலக்கியதரமானவை என்பதை நிரூபிக்க போராட வேண்டியதாயிற்று. அவரது வாழ்க்கையை இன்றைய முகநூல் தலைமுறையினருக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் 'மான்ட்டோ' என்ற பெயரில் அவரது வரலாற்றை திரைப்படமாக இயக்கியுள்ளேன்' என்று கூறும் நந்திதா தாஸ், இதுவரை 12-க்கும் மேற்பட்ட பிறமொழி படங்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பதோடு முதன்முதலாக 'பைராக்' (2008) என்ற படத்தை இயக்கிய நந்திதா தாஸ், தற்போது திரைக்கு வந்துள்ள 'மான்ட்டோ'வை இயக்கியுள்ளார். இதில் மான்ட்டோவாக நவாசுதீன் சித்திக் என்பவரும், மான்ட்டோவின் மனைவி சபியாவாக ரசிகா தூகலும் நடித்துள்ளனர். நடிகை, இயக்குநர், சமூக ஆர்வலர் என்று அனைத்து துறையிலும் ஈடுபாடு காட்டி வரும் இவர், அண்மையில் உடலுறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் சார்ந்துள்ள கவிதா சாமுவேல் தலைமையிலான 'டார்க் இஸ் பியூட்டிபுல்' என்ற அமைப்பைப் பற்றி என்ன சொல்கிறார்:

'டார்க் இஸ் பியூட்டி புல்' என்ற அமைப்பை நான் தொடங்கியிருப்பதாக தவறான தகவல்கள் பரவியுள்ளது. இந்த அமைப்புக்கு ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சாதி, மதம், பாலினம் உள்பட கறுப்பு என்றால் பாரபட்சம் காட்டுவது குறித்து நான் பல கருத்தரங்களில் எதிர்த்து பேசியுள்ளேன். பேசி வருகிறேன். இது குறித்து மக்கள் மனதை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளை வெயிலில் அலையாதே, கறுத்து விடுவாய் என்று அச்சுறுத்துவதுண்டு. அழகு சாதன பொருள்கள் விற்பனை மையத்திற்குள் நுழைந்தால் சிவப்பழகை தரும் கிரீம்களை வாங்குங்கள் என்று விற்பனையாளர் கூறுவதுண்டு. சாதாரண தோற்றமுள்ள பெண்ணை அழகுள்ளவராக மாற்றும் ஒப்பனை கலைஞரிடம் கூட நான் கூறுவதுண்டு. என்னுடைய நிறத்தை மாற்ற வேண்டாம். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே நடிக்கிறேன். ஒப்பனை வேண்டாம் என்று கூறுவேன். என்னுடைய நிறம் என்னவென்று மக்களுக்கேத் தெரியும்.

என்னைப் பொருத்தவரை என் தோலின் நிறம் கறுப்பாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. வசதியாகவும் இருக்கிறது. என்னைப் பற்றி எழுதும் போது கறுப்பு மற்றும் அரையிருட்டு என்று எழுதுவார்கள். நான் அதை பொருட்படுத்துவதில்லை. என்னிடம் உள்ள திறமைகளைப் பாராட்டாமல் என் நிறத்தை மட்டும் ஏன் குறிப்பிட்டு எழுதுகிறார்கள் என்று நினைப்பதுண்டு. நடிகை என்றால் சிவப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்தாக இருக்கலாம். அதற்காக கறுப்பாக இருப்பவர்கள் மீது வெறுப்பை காட்டுவது அழகல்ல.

நீங்கள் அழகாக இல்லாவிட்டாலும் கறுப்பு நிறமாக இருந்தால் உங்களை நீங்களே தாழ்வாக நினைக்காதீர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் 'டார்க் இஸ் பியூட்டிபுல்' அமைப்பின் நோக்கமாகும். கறுப்பு நிறமுடைய இளம் பெண்கள் தங்கள் நிறத்தை கொண்டாட வேண்டும். அழகு என்பது தோலின் நிறத்தில் இல்லை. அகத்தின் அழகுதான் முக்கியம். மின்னும் கண்களும், ஒளிரும் கபடமற்ற சிரிப்பும்தான் உண்மையான அழகு என்பேன். உங்கள் நிறத்தை பற்றி யாராவது விமர்சனம் செய்தால் கவலைப் படாதீர்கள். உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் நன்னடத்தையும், செயலும்தான் முக்கியம். இயற்கையாக இருங்கள். அதுவே அழகாகும்' என்கிறார் நந்திதா தாஸ்
 - பூர்ணிமா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com