இவர்களின் சிறுகதைகள் இவர்களின் இயக்கத்தில்! சிறப்பான திட்டம்!

தற்போது சில நாடக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் 'கோமல் தியேட்டர்' என்ற குழுவைத் தொடங்கியுள்ளார் தாரிணி.
இவர்களின் சிறுகதைகள் இவர்களின் இயக்கத்தில்! சிறப்பான திட்டம்!

நாடகப் படைப்பாளி, சினிமா கதாசிரியர், அரசியல் அபிமானி, பத்திரிகையாளர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட கோமல் சுவாமிநாதன் குறிப்பிடத்தக்க கலையுலகவாதி ஆவார். ஆரம்ப காலங்களில் நகைச்சுவை நாடகங்களையும், குடும்ப நாடகங்களையும் மேடையேற்றிய கோமல் பின்னாட்களில் சமூகப் பிரச்னைகளை மையமாகக் கொண்ட நாடகங்களையே எழுதி மேடையேற்றினார்.

1980-களில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நாடகத் துறையில் ஒரு மைல்கல்லாக விளங்கிய நாடகம் 'தண்ணீர் தண்ணீர்'. இது பின்னாளில் இயக்குநர் கே.பாலசந்தரால் திரைப்படமாகவும் இயக்கப்பட்டது.  'அனல் காற்று' (1982), 'ஒரு இந்தியக் கனவு' (1983) ஆகிய படங்களை கோமல் இயக்கினார். பல வெளிநாட்டு நாடகங்களாலும் ஈர்க்கப்பட்டு, மேடை அரங்கில் பல புதுமைகளைப் புகுத்தினார்.' அஞ்சு புலி ஒரு பெண்', 'யுத்த காண்டம்' நாடகங்களில் பிரமிக்கத்தக்க வகையில் காட்சி அமைப்பு இருக்கும்.

அவரின் மகள் தாரிணி கோமல் தனது தந்தையால் கடந்த 1971-இல் தொடங்கப்பட்ட 'ஸ்டேஜ் பிரண்ட்ஸ்' என்னும் நாடகக் குழுவை 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்து 'தண்ணீர் தண்ணீர்' உள்பட அவரது பாரம்பரிய நாடகங்களை மேடையேற்றினார்.

தற்போது சில நாடக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் 'கோமல் தியேட்டர்' என்ற குழுவைத் தொடங்கியுள்ளார் தாரிணி.

இதன் முதல் படைப்பாக கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், பிரம்ம கான சபா ஆகியோருடன் இணைந்து 'இவர்களின் சிறுகதைகள் இவர்களின் இயக்கத்தில்' குறு நாடகங்கள் சென்னையில் வரும் அக்.11-இல் அரங்கேற்றப்படவுள்ளன. இவற்றை தயாரிப்பாளரும், இயக்குநருமான தாரிணி கோமல் உருவாக்கியுள்ளார்.

இது குறித்து கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி கோமல் கூறியது: 'மேடை நாடகங்களை தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்க்கையை அர்ப்பணித்த கோமலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், தரமான இலக்கியப் படைப்புகளை மேடையேற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும் 'கோமல் தியேட்டர்' உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது 'இவர்களின் சிறுகதைகள் இவர்களின் இயக்கத்தில்' என்ற தலைப்பில் தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளான கல்கி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சூடாமணி, ஜெயகாந்தன் ஆகியோரது சிறுகதைகளின் நாடக வடிவங்கள் அரங்கேற்றப்படவுள்ளன. இதேபோன்று பல படைப்பாளிகளின் சிறுகதை, நாவல்கள், அந்தக் காலகட்டத்தின் சமுதாயத் தேவைகளும் நாடகமாக மேடை யேற்றப்படும். மூத்த நாடகக் கலைஞர் காத்தாடி ராமமூர்த்தி ஒரு நாடகத்தில் பங்கேற்று நடிக்கிறார். இந்த சிறுகதைகளின் நாடக வடிவங்களை கெளரிசங்கர், இளங்கோ குமணன், தாரிணி கோமல், கார்த்திக் ஆகியோர் இயக்குகின்றனர். அக்டோபர் 11-ஆம் தேதியன்று சென்னை நாரதகான சபா அரங்கில் அரங்கேறுகிறது.
 - ஜெ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com