ஹீரோவாக நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை! நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி!

தன்னுடைய திரை வாழ்க்கையில் ராட்சசன் ஒரு முக்கியமான படம் என்கிறார் விஷ்ணு விஷால்.
ஹீரோவாக நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை! நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி!

தன்னுடைய திரை வாழ்க்கையில் ராட்சசன் ஒரு முக்கியமான படம் என்றார் விஷ்ணு விஷால். படம் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இது ஒரு நல்ல படம் என்று பாராட்டுவார்கள் என்று உறுதியாக கூறுகிறார் அவர். முண்டாசுப்பட்டி படத்துக்குப் பிறகு இயக்குநர் ராம் குமாருடன் இணைந்த விஷ்ணு விஷால், சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் ஆஷாமீரா அய்யப்பனுக்கு அளித்த நேர்காணலின் சில துளிகள்:

ராட்சசன் மற்ற போலீஸ் படங்களை விட வித்யாசமானதா?

முதன் முதலாக இந்தப் படத்தில் தான் போலீஸாக நடித்துள்ளேன். இந்தப் படத்தில் கூட வேற வேலைக்கு முயற்சி பண்ணிட்டு கடைசியில போலீஸ்ல சேருவேன். இந்த ரோல் மற்ற படங்களில் வரும் போலீஸ் காரெக்டர்கள் போல இருக்காது. தமிழ் சினிமாவில் முதல் தடவையா இப்படியொரு சாது போலீஸைப் பார்க்கப் போறீங்க. காரணம் இதில் மென்மையாகவும் எமோஷனலாகவும் இந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கு. போலீஸ் விரைப்பு, அதிகாரம் என்பது எல்லாம் துளியும் இல்லாத வித்யாசமான ஒரு கதாபாத்திரம். இப்படி நடிக்கறது எனக்கு சவாலா இருந்தது. இதுக்கு முன்னாடி நான் பார்த்த அத்தனை போலீஸ் கதாபாத்திரங்களோட பாதிப்பு எனக்குள்ள இருந்துச்சு. எப்படியோ அதை உடைச்சிட்டு இந்த கதாபாத்திரத்துக்கு என்னை பொருத்திக்கிட்டேன்.

முண்டாசுப்பட்டியில் நடிக்கும் போதே ராமுடன் இன்னொரு படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர் ஸ்க்ரிப்ட் முடித்ததும் தான், இந்த கதாபாத்திரத்தின் வயது 40 என்றார் ராம். அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகரை இரண்டு ஆண்டுகளாகத் தேடிக் கிடைக்காமல் மறுபடியும் என்னிடம் நடிக்கக் கேட்டார். முதலில் கதையை முழுக்க கேட்கச் சொன்னார், தேவைப்பட்டால் வயதை குறைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார். எனக்கு அந்தக் கதை பிடித்துவிட்டது. ஆனால் எனக்காக கதையையோ அல்லது கேரக்டரையோ மாற்றச் சொல்வது சரியாக இருக்காது என்று நினைத்து, மறுத்துவிட்டேன். மேலும் அதில் ஹீரோயிஸம் வேறு மிக அதிகமாக இருந்தது. இதற்கு முன்னால் நான் அப்படி நடித்தது இல்லை. இந்த விஷயங்களை ராமிடம் சொன்னேன். அடுத்த வாரம் மறுபடியும் என்னைச் சந்தித்தார். கதையில் சில மாற்றங்களைச் செய்து, மீண்டும் முழுதாகக் கதையை என்னிடம் சொன்னார். கதை கேட்டதும், இப்போது அது என்னுடன் பொருத்திப் பார்க்க முடிந்தது. இப்படித்தான் ராட்சசன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன்.

நான் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. என்னுடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது படங்கள் சரியாக போகவில்லை என்றதும், இன்னொரு தடவை ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அதன் பிறகு கவனமாக கதைகளைக் கேட்கத் தொடங்கினேன். எனக்கு பொருத்தமான ரோல்களையே தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினேன். 'ஹீரோ’த்தனம் அதிகமில்லாத, ரியலிசம் சார்ந்த கதைகளில் நடிக்கிறேன். காமெடி ஜானரில் முதல் முறையாக நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் க்ளிக் ஆகி வெற்றி பெற்றது. அதற்கு பிறகுதான் கமர்ஷியல் சினிமாவில் வெற்றி பெற என்னால் முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

உங்களுடைய தயாரிப்பு நிறுவனம் எப்படி உருவானது?

'கதாநாயகன்’ முதலில் என்னுடைய புரொடக்‌ஷனில் உருவான படமில்லை. வீர தீர சூரன் என்ற பெயரில்தான் இந்தப் படம் தொடங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. என்னுடைய முதலீடும் அதில் இருப்பதால் என்ன செய்வதென்று யோசித்து ஒரு கோபத்தில் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். கதாநாயகன் படத்தின் மூலம் தான் நான் நிஜமாகவே கதாநாயகனாக உணர்ந்தேன். இப்படத்தில் கதாநாயகியாக கேத்ரீன் தெரஸா நடித்தார். நல்ல இசையும், அருமையான சண்டைக் காட்சிகள் என இவையெல்லாம் சேர்ந்துதான் எனக்கு முழு நம்பிக்கையை விதைத்தது. அந்த நம்பிக்கையைத் தொடர்ந்துதான் ராட்சசன் போன்ற ஒரு படத்தில் நடிப்பதற்கு தைரியத்தை அளித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் இதில் நடிக்கத் துணிந்திருக்க மாட்டேன். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் எனக்குள் உள்ள ஹீரோவை மேலும் வளர்த்தெடுக்கும் என்று நம்புகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். வணிகரீதியாகவும் விதவிதமான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிக்க அசைப்படுகிறேன்.

இதுவரை ஒரு படம் முடித்து அடுத்த படத்தில் கமிட் ஆக ஒரு வருடம் ஆனது. ஆனால் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்துக்குப் பிறகு இது மாறிவிட்டது. எனக்கு அடுத்தடுத்து ஏழு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னைப் பொருத்தவரையில் அர்த்தமுள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். ஏற்கனவே என்னுடைய பெயருக்கு எந்தளவுக்கு மார்கெட் உள்ளது என்பதையும், எனக்கு வாய்ப்புக்கள் குறைவாக கிடைக்கிறது என்பதையும் நான் நன்கு அறிவேன். எனவே கமர்ஷியல் சக்ஸஸ் கிடைத்தபின் என்னுடைய பாதை மாறிவிட்டது. அதே சமயம் நல்ல கதைப் படங்களிலும் நடிப்பதை விடப் போவதில்லை. இரண்டையும் பேலன்ஸ் செய்து பயணம் செய்ய முடிவெடுத்துள்ளேன். இதில் நான் தோற்றாலும் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.

விமரிசனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நல்ல விமரிசனங்களை எப்போதும் வரவேற்கிறேன். மதிப்பீடுகளால்தான் இன்று நான் இந்தளவுக்கு வளர்ந்து உள்ளேன். விமரிசகர்கள் கூறுவதை மிகவும் கவனமாக பின்பற்றுகிறேன். ஆனால் விமரிசனங்கள் சில சமயம் படங்களை ஆதிக்கம் செலுத்துகின்றன. எல்லா படங்களும் ஒவ்வொரு வகைமையில் தயாரிக்கப்படுகின்றன. ரசிகர்களை சந்தோஷப்படுத்த சில படங்கள் எடுக்கப்படுகின்றன. ஒரு படம் எந்த நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பதை விமரிசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக அனேக ரசிகர்கள் தெளிவாகவே உள்ளனர். ஒரு படம் என்றால் பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதை வைத்துதான் விமரிசகர்கள் அத்திரைப்படத்தை அளவிட வேண்டும். ஒரு நடிகரையோ அல்லது படைப்பாளியையோ தனிப்பட்ட முறையில் தாக்குவதாக ஒருபோதும் விமரிசனங்கள் இருக்கக் கூடாது.

அடுத்து என்ன படத்தில் நடிக்கிறீர்கள்?

சிலுக்குவாருப்பட்டி சிங்கம் எனும் படத்தில் நடிக்கிறேன். இன்னும் பெயரிடப்படாத இன்னொரு படத்திலும் நடித்து வருகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் தர விரும்புகிறேன். அதே சமயம் ஆக்‌ஷன், நடனம் உள்ளிட்ட கமர்ஷியல் படங்களிலும் நடிக்கவிருக்கிறேன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com