படக்குழுவினர் குழம்பும்படி அப்படியென்ன செய்தார் நித்யா மேனன்?

ஹிந்தியில் இயக்குநராக தனக்கென இடம் பிடித்த பிரபுதேவா, தற்போது தமிழில் கை நிறையப் படங்களை வைத்திருக்கிறார்.
படக்குழுவினர் குழம்பும்படி அப்படியென்ன செய்தார் நித்யா மேனன்?

• ஹிந்தியில் இயக்குநராக தனக்கென இடம் பிடித்த பிரபுதேவா, தற்போது தமிழில் கை நிறையப் படங்களை வைத்திருக்கிறார். புதுமுகமோ, தெரிந்தவரோ எந்த இயக்குநராக இருந்தாலும் அவர்கள் பிரபுதேவாவை எளிதாக அணுக முடியும் என்ற அளவுக்கு மாறி வந்திருக்கிறார். இந்த வரிசையில் தற்போது வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் "எங் மங் சங்' படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமணன், அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் அர்ஜுன். படத்தின் பெருமளவு படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பிரபுதேவா பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்ஃபூ மாஸ்டராக நடிக்கிறார். நவம்பரில் படம் திரைக்கு வருகிறது. 

• விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள படம் '96'. காதலை அணுகிய விதத்தில் புதுமையாக திரைக்கதை வந்துள்ள இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தெலுங்கில் இப்படத்தின் ரீமேக் உரிமை பற்றி பேச்சு எழுந்துள்ளது. இப்படத்தைப் பார்த்து பிடித்துப் போன தெலுங்கு நடிகர் நானி ரீமேக் செய்ய விரும்பினார். ரீமேக் உரிமையை முறையாக பெற்றுள்ள நானி, விஜய்சேதுபதி நடித்த வேடத்தில் நடிக்கவும் உள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன. த்ரிஷா நடித்த வேடத்தில் அவரையே தெலுங்கிலும் நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இதற்காக த்ரிஷாவிடம் தேதிகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

• "கம்பீரம்' படத்தில் நடித்ததுடன் "என் சகியே', "முத்திரை' போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பவர் நடிகை ராக்கி சாவந்த். ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருப்பதுடன், பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். ராக்கி சாவந்த் அவ்வப்போது அதிரடியாக பேட்டி அளித்து பரபரப்பு ஏற்படுத்துவதுண்டு. ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் கண் தானம் செய்திருக்கின்றனர். அவர்களைப் பாராட்டியிருக்கும் ராக்கி சாவந்த், "உறுப்பு தானம் என்பது மிகவும் அவசியமானதாகும். இதை எல்லோரும் செய்ய முன்வர வேண்டும். அதன்மூலம் பலர் பலன் அடைவார்கள். பலரும் உறுப்பு தானம் செய்வதை கண்டு நான் நெகிழ்ந்திருக்கிறேன். அவர்களைப்போல் நானும் உறுப்பு தானம் செய்ய எண்ணினேன். எனது மார்பகத்தை நான் தானம் செய்ய முடிவு செய்திருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். 

• பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1992}ஆம் ஆண்டு வெளியான படம் "தேவர் மகன்'. சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி, நாசர், வடிவேலு, காக்கா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்தனர். கமல்ஹாசன் இந்தப் படத்துக்குக் கதை எழுதியதோடு, தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரித்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் இளையராஜா இசையமைத்தார். இந்தப் படம் வெளியாகி தற்போது 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை கமல்ஹாசன் எழுதி வருவதாக தகவல் உலா வருகிறது. அரசியலுக்குப் பின் "இந்தியன் 2' படம்தான் நான் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்றும், அதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், "தேவர் மகன்' இரண்டாம் பாகத்தின் கதையை கமல் எழுதி வருவதாக வெளியான தகவல், அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. 

• நடிகை சாவித்ரி வாழ்க்கை படத்தில் நடிக்க கேட்டு நித்யா மேனனைப் படக்குழுவினர் அணுகினர். சாவித்ரி வேடத்துக்காக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றபோது வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். தெலுங்கில் தற்போது என்.டி.ராமராவ் வாழ்க்கை, படமாகி வருகிறது. ராமராவ் மனைவியாக நடிக்க நித்யாமேனனை அணுகினர். ஆனால் அந்த வாய்ப்பை அவர் ஏற்க மறுத்து விட்டார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்து வருகிறார். இந்நிலையில் என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தில் சாவித்ரி வேடத்தில் நடிக்க படக்குழுவினர் நித்யா மேனனை கேட்டனர். நித்யா மேனன் அதற்கு சம்மதம் தெரிவித்தார். சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்ரி வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்த நித்யா மேனன், தற்போது என்டி.ராமராவ் வாழ்க்கை படத்தில் சாவித்ரி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது ரசிகர்களை மட்டுமல்லாமல் அவரிடம் கால்ஷீட் கேட்டு செல்லும் இயக்குநர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com