உண்மையை காலம் சொல்லுமா? ஏன், நீங்களே சொல்லலாமே? வைரமுத்துவுக்கு கஸ்தூரி பதிலடி!

கவிஞர் வைரமுத்துவின் மீதான பாடகி சின்மயி தெரிவித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையை காலம் சொல்லுமா? ஏன், நீங்களே சொல்லலாமே? வைரமுத்துவுக்கு கஸ்தூரி பதிலடி!

ஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இந்த அதிர்வு தற்போது கோலிவுட்டிலும் ஏற்பட்டுள்ளது. 

மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் கடந்த திங்கள்கிழமை முதல் கோலிவுட்டை உலுக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்துக்கும் பத்திரிகையாளர் சந்தியா மேனன் வெளியிட்ட ட்வீட் முதன்மையானதாக அமைந்துவிட்டது. அதில், தன்னுடன் பணியாற்றிய 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று சந்தியா மேனன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

இதனைத் தொடர்ந்து பிரபல பின்னணிப் பாடகி சின்மயி, வைரமுத்துவால் தனக்கும் பாலியல் ரீதியாக தொல்லைகள் ஏற்பட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தைரியமாகப் பதிவிடத் தொடங்கினார். 

முதலில், சுவிட்சர்லாந்தில் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து பதிவிட்டார். கடந்த 2005 அல்லது 2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் சுவிட்சர்லாந்தில் வைரமுத்து தங்கியிருந்த லூசிரின் விடுதியில் அவருடன் இணக்கமாகச் சென்று ஒத்துழைக்குமாறு அந்த விழா ஏற்பாட்டாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், அதற்கு மறுத்தபோது எனது திரை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மிரட்டப்பட்டேன். இருப்பினும் நானும் எனது தாயாரும் உடனடியாக இந்தியா திரும்பிவிட்டோம் என்று கூறியுள்ளார்.  

இத்தனை காலமாக இதை ஏன் வெளிப்படையாக் கூறவில்லை என்று பலர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அதற்கு தற்போது தனது ஃபேஸ்புக் பதிவில் விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். எனது திரை வாழ்வில் தற்போது வரை வைரமுத்து மட்டும் தான் என்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார் என்றார் சின்மயி, விரிவாக அந்தச் சம்பவத்தை கூறியதுடன், தன் மீது சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் மிகத் தெளிவாக பதிலுரைத்தார். அவரவர் வீட்டுப் பெண்களுக்கும் பணியிடங்களில் இதுபோன்று நடத்திருக்கலாம் எனவே அவர்களுக்கு ஆதரவாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடகி சின்மயிக்கு ஆதரவாக முன்னணி நட்சத்திரங்கள் சமந்தா, சித்தார்த், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதர பெரிய நட்சத்திரங்கள் இவ்விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் தீவிரமாக இயங்கி வரும் கஸ்தூரி தற்போது வைரமுத்துவிற்கு  நேரடி கேள்வியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com