அன்புவும், சந்திராவும் வெளிக் கொண்டுவந்த வடசென்னை! இது விமரிசனம் அல்ல! 

வடசென்னை - அண்மை காலத்தில் அதிகளகவு எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான படமிது.
அன்புவும், சந்திராவும் வெளிக் கொண்டுவந்த வடசென்னை! இது விமரிசனம் அல்ல! 

வடசென்னை - அண்மை காலத்தில் அதிகளகவு எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான படம். வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி - கதாபாத்திரத் தேர்வு மற்றும் படக்குழுவினர் என இக்கதையின் எதிர்ப்பார்ப்புக்கான காரணங்களை அடுக்கிச் செல்லலாம். இவ்வளவு நடிகர்களா என்று ஆச்சரியப்படுத்த வைத்த இயக்குநர் அத்தனை பேரையும் கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார். படம் தொடர்பான விமரிசனங்கள் தொடர்ந்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளி வந்து கொண்டிருப்பதால், நான் ரசித்த ஒரு சில தருணங்களை பார்க்கலாம்.

உண்மையில் வடசென்னை நான் எதிர்பார்த்ததை விட ஒரு படி மேலான அனுபவத்தை எனக்களித்தது. வெகு நாள் கழித்து இமைக்க மறந்து ஒரு திரைப்படத்தை திகட்ட திகட்ட பார்த்த அனுபவம் ஏற்பட்டது. குறிப்பிட்டதொரு பகுதி மக்களின் வாழ்க்கையை நேரடியாக அணுகி அவர்கள் வாழ்நிலைச் சூழலில் குற்றம் என்பது எப்படி ஒரு மறுக்க முடியாத பகுதியாகிவிடுகிறது என்பதை ரத்தம் அதிகம் தெறிக்க விடாமல் முதல் பாகத்தில் மிரட்டலாகக் கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.

முன்னும் பின்னுமாக காலத்தை திரும்பிப் பார்க்கும் முறையில் இக்கதை சொல்லல் முறை புதிய காட்சியனுபவத்தை தருகிறது.  கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருட சம்பவங்களை ஒற்றை திரைப்படத்தில் அனாயசமாகத் தொகுத்திருப்பது கடினமானது. ஆனாலும் அதை குழப்பமில்லாமல் இயக்குநர் செய்திருப்பது பாராட்டுக்குரியது. அனேகக் காட்சிகளில் திரைக்குள் புகுந்து அக்கதாபாத்திரங்களுக்கு இடையே நாமும் உலவுவது போன்ற ஒரு மந்திரத்தன்மையுடன் நம்மை உள்ளிழுத்துச் செல்கிறது. அதற்குப் பக்க துணையாக இசையும், படத்தொகுப்பும், முக்கியமாக ஒளிப்பதிவும் உறுதுணையாகின்றன. படம் முழுவதும் நிறைந்த ஒத்திசைவு இதற்குரிய அழகியலை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் படத்தின் பிற்பகுதியில் வருகின்ற ராஜன் (அமீர்) கதையை வேறொரு தளத்திற்கு உயர்த்திச் செல்கிறார். 

இப்படத்தில் தனுஷ் உள்ளிட்டு, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரகனி, கிஷோர், பவண், சாய் தீனா, சரண் ஆகியோர் தமது கதாபாத்திரங்களை கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக இத்தனை நட்சத்திரங்களுக்கு நடுவே தனித்தன்மையுடன் இருக்க அதிகவே மெனக்கிட்டுள்ளார் தனுஷ். ஒரு காட்சியில் குணாவிற்கும் செந்திலுக்கும் நடுவில் அவஸ்தையாக நெளிந்தபடி நிற்கின்ற காட்சியில் குற்றவுணர்வை தனது உடல்மொழியில் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பார்.  இவர்களை எல்லாம் மீறி திரையை ஆக்கிரமித்து, அலட்சியம் நிரம்பிய கண்களுடன், அதீத அழகுடனும் ஒருவித மாயத்தன்மையுடனும் படம் நெடுக வரும் ஆன்ட்ரீயா மனம் கவர்கிறார். இந்தக் கதாபாத்திரம் மிக அழுத்தமாக சித்திரிக்கப்பட்டதுடன் படத்தின் மற்ற கதாபாத்திரங்களை இயக்கும் சக்தியுடையதாக இருக்கிறது. அதிலும் முக்கியமாக கதை நாயகன் சந்திராவால் மறைமுகமாக இயக்கப்படுபவன் ஆகிறான். கதையில் தன் பங்களிப்பை முழுவதும் உணர்ந்து உள்வாங்கி அக்கதாபாத்திரத்தின் வன்மத்தை இறுக்கி பிடித்தபடி வெளிப்படுத்தும் ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆண்ட்ரியா. இத்தகைய குரூர அழகியல் தமிழ்த் திரையுலகில் முதல் முறையாகக் கையாளப்பட்டுள்ளது எனலாம்.

மனத்திலுள்ள ஒரு விஷயத்தை செயல்படுத்த, காலத்தை துணைக்கு அழைத்து, அதை நிறைவேற்றும் ஆற்றலுடைய ஒருவனாகக் காத்துக் கொண்டிருக்கும் ரெளத்திரம் நிறைந்தவள் சந்திரா. ஆனால் அவளது கோபமோ உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்போ வெளியே தெரியாது. யாராலும், உடன் வாழ்ந்து வரும் முத்து (சமுத்தரகனி) உட்பட ஒருவரும் கண்டுணர முடியாதது. நீலியைப் போல பழிவாங்கும் மனதுடன் அவள் தீர்க்கத்துடன் முடிவெடுத்திருப்பது படத்தின் இறுதியில் தான் பார்வையாளர்களுக்கு உறுதிப்படும். இப்படத்தின் முதல் பாகத்தின் மொத்த கதையையும் அக்காட்சிகள்தான் தாங்கி நிற்கிறது எனலாம். சந்தோஷ் நாராயணனின் இசை இப்படத்தி ஒவ்வொரு நொடியையும் நமக்குள் ஆழமாக கடத்துகிறது. படம் நெடுகிலும் வரும் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. 

இப்படத்தின் அசைக்க முடியாத இன்னொரு விஷயம் திரைக்கதை. அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள திரைக் கதை எழுத்தும், வலிமையான காட்சிப்படுத்தலும் வடசென்னையை தரத்தில் உயர்த்துகின்றன. ஒரு திரைக்கதைக்கு முக்கியம் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சித்தரிப்பு மற்றும் படத்தில் அவர்களின் பங்களிப்பும்தான்.  வடசென்னையை பொருத்தவரையில் பல்வேறு கதாபாத்திரங்களும் தத்தமது ரோலை மிக இயல்பாகவும், நீரோட்டம் போல தமது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றனர். மேலும் எண்பதுகளில் தொடங்கி வெவ்வேறு காலகட்டத்தை மீள் உருவாக்கம் செய்து, சென்னை மத்திய சிறைச்சாலையை கண் முன் நிறுத்தி, அங்கு நிலவும் வாழ்க்கைமுறையை பதிவு செய்திருப்பது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம். இதற்கு முன்னர் வந்த திரைப்படங்கள் இவற்றை வேறு வகையில் சித்திரத்திருந்தாலும் வடசென்னையின் ஆன்மாவை இத்திரைப்படத்தில் பார்க்கலாம். வடசென்னை என்றால் கொலை, கடத்தல், வன்முறை என்பது போன்ற ஒரு பிம்பத்தை பல திரைப்படங்களில் பார்த்திருப்போம்.

இத்திரைபப்டம் முதன் முறையாக இதன் பின்னணியில் உள்ள அரசியலைப் பேசுகிறது. வட சென்னை மக்கள் மட்டுமல்லாமல் அடிமட்ட மக்கள் அனைவரின் பிரச்னைகள் உரிமை சார்ந்தது. கல்வியின் மூலம் மட்டுமே அவர்களுக்கு விடிவு கிடைக்கும் ஆனால் அரசியல் சமூக சூழல்கள் அவர்களை திசை திருப்பி அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு பந்தாடப்படும் நிலை அங்குள்ளவர்களுக்கு நேர்கிறது என்பது இப்படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. காதல், பிரிவு, வன்மம், பழிவாங்குதல் என பார்வையாளர்களை வெவ்வேறு உணர்வு நிலைக்கு இழுத்துச் செல்கிறது. அன்பு என்பவன் இந்த களத்தின் மையத்திலிருந்து எதிரிகளை வீழ்த்தி தான் சார்ந்த மக்களை எவ்விதம் காப்பாற்ற போகிறான் என்ற எதிர்ப்பார்ப்புடன் படத்தின் முதல் பாகம் நிறைவடைகிறது. அடுத்த இரண்டு பாகத்தில் இக்கதை ஒரு விரிவான தளத்திற்குச் சென்றடையும். இந்த களத்தை, இக்கதையை துணிச்சலுடன் அணுகியிருப்பதாலும், குழப்பங்கள் இல்லாமல் தெளிவாக விவரித்தமைக்கும் வடசென்னை தமிழ் சினிமாவின் மைல்கல் எனலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com