விக்ராந்த் நடிக்கும் படத்துக்குத் திரைக்கதை, வசனம் பொறுப்பேற்றுள்ள விஜய் சேதுபதி!

நடிப்பு, தேர்வு செய்யும் படங்கள் போன்ற அம்சங்களில் ஆச்சர்யப்படுத்தும் விஜய் சேதுபதி, சக நடிகர்கள் மீது அக்கறை செலுத்துவதிலும்...
விக்ராந்த் நடிக்கும் படத்துக்குத் திரைக்கதை, வசனம் பொறுப்பேற்றுள்ள விஜய் சேதுபதி!

ஓர் இயக்குநர் விஜய் சேதுபதியிடம் கதை சொல்கிறார். அந்தக் கதை விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்துப் போகிறது. ஆனால் அவர் இந்தக் கதை தன்னை விட விக்ராந்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்கிறார். அதோடு அந்தப் படத்துக்குத் தானே வசனம் எழுதித் தரவும் முன்வருகிறார். திரைக்கதை அமைப்பதிலும் பங்கேற்றுள்ளார். 

நடிப்பு, தேர்வு செய்யும் படங்கள் போன்ற அம்சங்களில் ஆச்சர்யப்படுத்தும் விஜய் சேதுபதி, சக நடிகர்கள் மீது அக்கறை செலுத்துவதிலும் முன்மாதிரியாக இருக்கிறார். இப்போது அப்படியொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இயக்குநரும் விக்ராந்தின் சகோதரருமான சஞ்சீவ் இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியதாவது: நான் விஜய் சேதுபதிக்காகத்தான் அந்தக் கதையை எழுதினேன். அவரை நேரில் பார்த்து கதையைச் சொன்னபோது அவருக்குக் கதை மிகவும் பிடித்தது. ஆனால் இந்தக் கதை விக்ராந்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றார். அப்படிச் சொன்னது மட்டுமல்லாமல், இந்தப் படத்துக்கு நானே வசனம் எழுதட்டுமா என்றும் கேட்டார் எனக் கூறியுள்ளார் சஞ்சீவ்.

விஜய் சேதுபதி கையில் அரை டஜன் படங்கள் உள்ளன. இந்தச் சமயத்தில் ஒரு படத்துக்கு வசனம் எழுதும் அளவுக்கு நேரம் இருக்குமா? இதற்கு முன்பு ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு வசனம் எழுதிய அனுபவம் இருந்தபோதும் தற்போது உள்ள நேர நெருக்கடியில் இது சாத்தியமா என்கிற சந்தேகம் சஞ்சீவுக்கு எழுந்துள்ளது. ஆனால் தினமும் படப்பிடிப்புப் பணிகள் எல்லாம் முடித்துவிட்டு இரவு நேரங்களில் அப்படத்தின் கதை, திரைக்கதை குறித்து ஓயாது விவாதித்துள்ளார் விஜய் சேதுபதி. சொன்னபடி திரைக்கதையை உருவாக்கி, வசனமும் எழுதித் தந்துள்ளார். திரைக்கதையை இயக்குநருடன் இணைந்து செய்துள்ள விஜய் சேதுபதி, வசனத்தைத் தனி ஆளாகக் கையாண்டுள்ளார்.

நானும் என் சகோதரர் விக்ராந்தும் அவருக்கு எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளோம் என்கிறார் இயக்குநர் சஞ்சீவ். நவம்பர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com