என் உடலில் சிவப்பு நிறம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால், நான் தமிழ் முகம்! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி பேட்டி!

'பண்ணையாரும் பத்மினியும்' மலர்விழி, 'தர்மதுரை' அன்புச் செல்வி, "காக்கா முட்டை' அம்மா
என் உடலில் சிவப்பு நிறம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால், நான் தமிழ் முகம்! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி பேட்டி!

'பண்ணையாரும் பத்மினியும்' மலர்விழி, 'தர்மதுரை' அன்புச் செல்வி, "காக்கா முட்டை' அம்மா.. என ஒவ்வொரு படத்திலும் தன் கதாபாத்திரங்களை கவனிக்க வைக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.  'சாமி 2',   'செக்க சிவந்த வானம்' வெளிவந்த நிலையில் அடுத்து வந்திருக்கிறது  'வட சென்னை'.  அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும்  'துருவ நட்சத்திரம்'  எதிர்பார்ப்பில் இருக்கிறது. 

'சாமி 2'  தொடர்ந்து விக்ரமுடன்  'துருவ நட்சத்திரம்'.... கிராமத்துக் கதைகள் தொடங்கி இப்போது கௌதம் மேனன் படம்.  எப்படி இருக்கிறது அனுபவம்...

அவர் படங்களில் சின்ன சின்ன பெண் கதாபாத்திரங்களுக்கு கூட  அதிக முக்கியத்துவம் இருக்கும்.  அதுவுமில்லாமல் அவர் படங்களில் வேறு கலர் இருக்கும்.  அப்படி நம்மை பார்க்க வேண்டும் என யாருக்குத்தான் ஆசை இருக்காது.  அவர் அழைத்தார்.  அதை ஏற்றுக் கொண்டேன்.  கிராமத்துக் கதாபாத்திரங்கள்ல அதிகம் நடித்துக் கொண்டு இருந்த எனக்கு க்ளாஸியான ஹீரோயினாக நடிக்கிறது ரொம்ப புதிதாக இருந்தது.  ஆனால், அவர் சொல்லிக் கொடுத்த மாதிரி நான் நடிக்கவில்லை.  அதில் கொஞ்சம் என் ஸ்டைலையும் சேர்த்து  நடித்தேன்.  ""நீங்க நடிச்சது எனக்குப் பிடிச்சிருந்துச்சு'' என்று கெüதம் சார் சொன்னார்.  அவரது  ஹீரோயின்ஸ் இங்கிலீஷ் பேசுவார்கள், அழகாக இருப்பாங்க.. அப்படித்தான் இதில் இருப்பேன். 

'செக்கச் சிவந்த வானம்'  படம் வரைக்கும் விஜய் சேதுபதியுடன் நடிக்கிறீர்கள்.... அது நிறைய கதைகளில் கை கூடுகிற மாதிரியும் தெரிகிறது...

காயத்ரி, ரம்யா நம்பீசன், நந்திதா இவர்கள் எல்லாரும் என்னைவிட  அதிக படங்கள் விஜய் சேதுபதியோடு நடித்திருக்கிறார்கள். நான் மூன்று படங்களில்தான்  நடித்திருக்கிறேன்.  அந்த படங்கள் எல்லோரின் கவனத்துக்கு வந்திருக்கிறது. இந்தக் கேள்வியைக் என்னிடம் மட்டுமே கேட்காம எல்லோரிடமும் கேளுங்கள். "பண்ணையாரும் பத்மினியும்', "தர்மதுரை' படங்களில் சில காட்சிகளில்தான் வருவேன். அதைத்தான் பெரிதாக பேசுகிறார்கள். 

மணிரத்னம், கௌதம் வாசுதேவ்மேனன்,  ஹரி  என அடுத்தடுத்து சீனியர் இயக்குநர்களின் படங்கள் தொடர்ந்து வருகிறது... சினிமாவில் இது பெரிய மாற்றம் இல்லையா?

'காக்கா முட்டை' , 'தர்மதுரை' படங்களில் நன்றாக நடித்தது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதை பார்த்த பெரிய இயக்குநர்கள் என்னை அவர்கள் எழுதும் கதைகளில் பொருத்தி பார்த்திருக்கலாம். அதுதான் அருமையான வாய்ப்புகள் வந்திருக்கிறது. விஷயம் இல்லாமல் இயக்குநர்கள் என்னைத் தேர்வு செய்ய மாட்டார்கள். இது ரசிகர்களுக்கும் தெரியும். ஒரு ஹீரோயினுக்கு எந்த இடம் தர வேண்டும் என்பது இயக்குநர்களுக்குத் தெரியும். அந்த வகையில்தான் என்னை எல்லோரும் பார்க்கிறார்கள். என் உடலில் சிவப்பு நிறம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால், நான் தமிழ் முகம்.  நம் மனசில் கருப்புதான் அழகு என்று பதிந்துள்ளது.  அதற்காக கூட  என்னை அவர்கள் தேர்வு செய்திருக்கலாம். 

ஒரு கதாபாத்திரத்தின் சாயலை புரிந்துக் கொள்ள முடியாத இயக்குநர்கள் யாரும் என்னை அணுகவே மாட்டார்கள். நான் வழக்கமான சினிமாக்களுக்கு செட் ஆக மாட்டேன்.  எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த படங்களில் நான் இருக்க மாட்டேன். 

'கனா' படத்தில்  நீங்க ஒரு கிரிக்கெட்  பிளேயர். அதற்கான பயிற்சிகள் எப்படி....

ஒரு கிரிக்கெட்டரைதான் இதில் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தார்கள். ஆனால், கிரிக்கெட் வீரர்களுக்கு மேட்ச் விளையாடுவதுதான் தொழில்.  நடிப்பது அவர்களின் வேலை இல்லை. அதனால் கடைசியில் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த படப்பிடிப்பு காலம் ரொம்பவே சவால் நிறைந்தது. வேறு எந்தப் படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமல் இதில் நடித்தேன். 

ஏனென்றால் இதில் நான் ஒரு பவுலர். பேட்ஸ்மேனாக இருந்தாக்கூட பயிற்சிகள் எளிதாக இருந்திருக்கும்.  அதனால் காலையில இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணிநேரம் என்று பவுலிங் ஸ்டைல் கற்றுக் கொள்ள சுமார் 65 நாள்கள் வரை பயிற்சிகள் இருந்தது. இத்துடன் சேர்த்து படப்பிடிப்பும் இருக்கும். இதற்கு முன் பெண்கள் கிரிக்கெட்டை வைத்து படங்கள் எடுத்ததில்லை. அதனால் யாருமே தொடாத உச்சமாக இது இருக்கும்.  விளையாட்டு தொடர்பான கதைகளில் இது புது உற்சாகம்.  சத்யராஜ் சார் என் அப்பாவாக நடிக்கிறார். அவருடன் நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 

மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறீர்கள்...

ஆமாம்.. சினிமாவில் என் அடுத்தக்கட்ட  நகர்வு.  இதுவரை  இரண்டு மலையாளப் படங்களில் நடித்திருக்கிறேன்.  'டாடி' என்கிற ஒரு ஹிந்திப் படம் நடித்திருக்கிறேன்.  ஹிந்தியில் நடிக்கும்போது மொழி ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது. வசனங்கள் மனப்பாடம் செய்வதில் பிரச்னை இருந்தது.  டப்பிங் வரை எல்லாமே பிரச்னை.  "டாடி'  பட இயக்குநர் அஷிம் அஹுவாலியா படங்கள் மீது பொதுவாகவே நிறைய விமர்சனங்கள் வைக்கப்படும்.  அவர் படங்கள் ரசிகர்களைப் பல கேள்விகளுக்கு உள்ளாக்கும். கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அவரோட  படங்கள் போய் வந்திருக்கிறது.

'டாடி' படத்தையும் விருது விழாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எடுத்தார்கள்.  அந்த அளவுக்கு போனதில் எனக்கு பெரிய மன தைரியம் வந்திருக்கிறது.  மலையாள வாய்ப்புகள் நிறைய வருகிறது. அதை தேர்வு செய்வதில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது.  ஆனால் பெரும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. 

கல்யாணம் பற்றி...

கல்யாணம், குழந்தைகள் எல்லாம் எனக்கு பிடிக்கும்.  ஆனால், சினிமா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. மறுபடியும் அந்த யோசனை எப்போது வருகிறதோ, அப்போது கல்யாணம் செய்து கொள்வேன்.  நான் நடிக்கிற கதாபாத்திரங்கள் தனித்துவமாக இருப்பதால், கல்யாணம் எனக்கு தடையாக இருக்காது என நினைக்கிறேன். 

தமிழ் பெண்ணாக வந்து பெறும் உயரம் அடைந்து இருக்கிறீர்கள்...

நிறைய பேர் இதைப் பற்றி பேசும் போது, பெருமையாக இருக்கும்.  நான் 'காஸ்டிங் கவுச்' மாதிரியான பிரச்னைகளை இதுவரை சந்தித்ததில்லை. பெரிய இயக்குநர்கள், பெரிய படங்கள் என வரும்போது பெரும் தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது.  

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com