கடைசி வரை வாய்க்கு ருசியாக சாப்பிடக் கூடிய உடல் ஆரோக்கியம் வேண்டும்! நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேட்டி!

உடற் பயிற்சி.  அதே போன்று  நீச்சல்.  நன்றாக நீச்சல் தெரிந்தவர்களுக்கு தண்ணீர் மிக நல்ல நண்பன்.
கடைசி வரை வாய்க்கு ருசியாக சாப்பிடக் கூடிய உடல் ஆரோக்கியம் வேண்டும்! நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேட்டி!

ஆரம்பத்தில் நாடகம், சின்னதிரை நடிகர். பின்னர் சினிமாவில் தனது நடிப்பு திறமையைத்  தொடர்ந்தார். குதிரை ஏற்ற பயிற்சி பெற்றவர், டப்பிங் கலைஞர் என பல சிறப்புகளை கொண்டவர் எம்.எஸ்.பாஸ்கர்.  அவர்,  தனக்குப் 'பிடித்த பத்து'  குறித்து இங்கே கூறுகிறார்:

இடம், தோட்டம்: ஆங்கிலத்தில் சொல்வார்களே 'Nest is the bestʼ என்று, அது போல் என்றும் நான் இருக்கும் விருகம்பாக்கம் வீடுதான் எனக்கு எல்லாம். காரணம் இங்குதான் என் குடும்பம், அதாவது என் மனைவி, மகள் ஐஸ்வர்யா, மகன் ஆதித்யா ஆகியோர் இருக்கிறார்கள்.  இந்த வீட்டை என் சம்பாதியத்தில் வாங்கியதில் எனக்கு எப்பவும்  பெருமை  உண்டு. அதே போன்று  சிறுவயதில் இருந்தே ஒரு பண்ணை வீடு வாங்கவேண்டும் என்ற ஆசை உண்டு. பேரம்பாக்கத்தை அடுத்த இறையாமங்களம் என்ற இடத்தில் வாங்கி உள்ளேன். அதில் சிறிய தோட்டத்தையும், வீட்டையும் கட்டி வருகிறேன். அருமையான கிராமம், பண்பான மனிதர்கள், நல்ல காற்று. அங்கு சென்றால் என்னையே நான் மறந்து விடுவேன். 

மனிதர்கள்: நான் என்றுமே மனிதர்களில் பாகுபாடு பார்ப்பது கிடையாது. காரணம் அடுத்த பிறப்பு என்ன என்று நமக்கு தெரியாது. அதனால் இந்த பிறப்பில் நாம் சந்திக்கின்ற எல்லாரையும் நேசிக்கிற  பண்பு வேண்டும் என்று நான் வைராக்கியமாக இருக்கிறேன். அதனாலேயே யாரையும் பிடிக்கும், பிடிக்காது என்று  பிரித்து பார்ப்பது கிடையாது.

சாப்பாடு:  எனது தந்தை ஒரு முறை என்னிடம் சொன்னது என்ன தெரியுமா? 'உனக்கு தோட்டம், நிலம், கார், பங்களா வேண்டும் என்று எதையும் ஆண்டவனிடம் கேட்காதே. கடைசி வரை வாய்க்கு ருசியாக சாப்பிடக் கூடிய உடல் ஆரோக்கியம் வேண்டும்' என்று மட்டும் கேள் என்றார்.  அதனால் எனக்கு சுடு சோறும் பிடிக்கும்,  பழையதும் பிடிக்கும்.  சைவமும் பிடிக்கும் அசைவமும் பிடிக்கும்.  இதுதான் வேண்டும்,  இது  வேண்டாம் என்று என்றுமே நான் சொல்ல மாட்டேன்.  இளநீர், மோர், எலுமிச்சை பழம் கலந்த சோடா ஆகியவைகளை விரும்பி குடிப்பேன். 

வாகனம்: சமீபத்தில் என் அன்பு மகள் ஐஸ்வர்யா எனக்கு பரிசளித்த இரு சக்கர மோட்டார் சைக்கிள்.  அதே போன்று நான் வாங்கிய  கார். நான் பல கார்களை வாங்கி சில வருடங்கள் வைத்துக் கொண்டு பின்னர் விற்று விடுவேன். எதுவானாலும் நானே ஓட்டிக் கொண்டு செல்ல, என் குடும்பம் அதில் அமர்ந்து வர, அதை விட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்.

உடற்பயிற்சி: இரண்டு வகையான உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்து வருகிறேன். நடை பயிற்சி செய்தால் உடம்பில் உள்ள எல்லா பாகங்களும் வலுப்பெறுகின்றன. சர்க்கரை நோய் குறையும், ரத்த அழுத்தம் சீராக மாறும் என்றெல்லாம் சொல்கின்றனர்.  அது சரியோ இல்லையோ,  நடை  ஒரு சிறந்த

உடற் பயிற்சி.  அதே போன்று  நீச்சல்.  நன்றாக நீச்சல் தெரிந்தவர்களுக்கு தண்ணீர் மிக நல்ல நண்பன்.  நாம் தண்ணீரில் இறங்கி நீந்துகின்ற போது அதன் அலைகள் நம்மை தாலாட்டுகின்ற மாதிரி இருக்கும். சந்தோஷமாக நீச்சல் அடித்து விட்டு வந்தால் சோர்வு நீங்கி, புத்துணர்வு ஏற்படும்.  இரவு நன்றாக பசிக்கும், நிம்மதியான தூக்கம் வரும்.  உடலில் உள்ள வாயு, கொழுப்பு குறையும்.  இந்த இரண்டும் அற்புதமான  உடற்பயிற்சிகள்.

விலங்கு: நான் வளர்க்கும் எல்லா விலங்கும் என் நண்பன்தான்.  காரணம், அவைகளுக்கு மனிதர்களை போல் துரோகம் செய்ய தெரியாது.  அவைகளுக்கு அன்பு காட்ட தெரியும் அல்லது ஆக்ரோஷமாக நடந்துகொள்ள தெரியும். இந்த இரண்டு குணாதிசயங்கள் மட்டுமே அவைகளிடம்  உண்டு.  எல்லோருக்கும் தெரிந்த, நான் விரும்பும் குதிரை மீது கொண்ட பாசம்தான். அதே போல் பசு மாட்டை நாம் கோமாதா என்று அழைக்கிறோமே அதை மறக்க முடியுமா.

ஊர்: நான் படப்பிடிப்பிற்காக பல ஊர்களுக்கு செல்கிறேன். எந்த ஊரில் பசுமை நிறைந்திருக்கின்றதோ, அந்த ஊரில் நான் இருக்கவே விரும்புவேன். வேலை நிமித்தம் சென்னையில் இருந்தாலும் மனம்  வயல் வெளிகளையே நாடுகிறது. மலை அடிவாரம், பறவைகளின் ரீங்காரம், சலசலக்கும் ஓடை, இவையெல்லாம் உள்ள இடத்தில் ஒரு வீடு.  சமீபத்தில் ஓகேனக்கல் சென்றிருந்தேன்.  அங்குள்ள அருவியில் குளித்துவிட்டு,  அங்கே கிடைக்கும் மீன் வகை உணவுகளை சாப்பிட்டால் அதுவே சொர்க்கம்.

விளையாட்டு: கால்பந்து, ஹாக்கி இந்த இரு விளையாட்டுகளையும் நான் ரசித்து பார்ப்பேன். சிறு வயதில் நான் விளையாடிய கிட்டிப்புல், கோலி, செஸ், பணம் வைக்காமல் சீட்டு விளையாடுவது, கேரம் போர்டு ஆகியவை இருந்தால் விளையாடிக் கொண்டே  இருக்கலாம். 

அரட்டை:  நண்பர்களோடு அரட்டை  அடிப்பது விருப்பமான ஒன்று.  என் நேர் எதிர் வீட்டில் வசிப்பவர் நடிகர் இளவரசு.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் வாசலில் நின்று கொண்டே  நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். அதே போல் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ எனது நண்பர்கள் தினகரன், பாபுஸ்,  டப்பிங் வெங்கட்  ஆகியோருடன் பேசி பொழுதை செலவிடுவதில் எனக்கு விருப்பம் அதிகம்.

தூக்கம்: இப்பொழுதெல்லாம் ஓய்வு கிடைப்பது அரிதாகி வருகிறது.  அதனால் கிடைக்கும் இடத்திலேயே என்னை நித்திரா தேவி ஆட்கொண்டு விடுவாள். ஓசை இல்லாமல் இருந்தாலும் சரி, இரைச்சல் மிகுந்த இடமாக இருந்தாலும் சரி, நான் படுத்தால் சந்தோஷமாக தூங்கி விடுவேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com