வசவுச் சொற்களிலேயே பதில் சொல்லும் ஒரு பெண்ணைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது! ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கெளதம் மேனன் பாராட்டு!

பாலிவுட் சினிமாவைப் பொறுத்தவரை தீபிகா படுகோனேவுக்கு எப்போதுமே முதலிடம்.
வசவுச் சொற்களிலேயே பதில் சொல்லும் ஒரு பெண்ணைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது! ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கெளதம் மேனன் பாராட்டு!

* வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்துள்ள படம் 'வட சென்னை'. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம், கடந்த 17-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல கலவையான விமர்சனங்கள் இந்த படத்துக்கு வந்துள்ளன. கதை சொன்ன விதத்தில் வெற்றிமாறன் தேர்ந்த இயக்குநராக கவனம் ஈர்க்கிறார். இப்படத்தை பாராட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன் எழுதியுள்ள கடிதம்... 'வெற்றிமாறன்... என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அற்புதமான இயக்கம், காட்சியமைப்பு. எழுத்து - இயக்கம் என உங்கள் பெயர் வரும்போது ரசிகர்கள் கைதட்டும் சத்தத்தைக் கேட்பதை விட சிறந்த உணர்வு இல்லை. தனுஷுக்கு எளிதாக வரும் ஒன்றில் அற்புதமாகச் செயல்படும்போது, அவரைத் தாண்டி எங்கும் பார்க்க முடியவில்லை. துணிச்சலாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா உயர்ந்து நிற்கிறார். அழகு, வசீகரம். வசவுச் சொற்கள் பேசும் இளம்பெண் கதாபாத்திரத்தில் நம்மை ஈர்த்து விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன் மனதில் இருப்பதைப் பேசும், ஆண்களுக்கு வசவுச் சொற்களிலேயே பதில் சொல்லும் ஒரு பெண்ணைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார் கௌதம்மேனன். 

• பாலிவுட் சினிமாவைப் பொறுத்தவரை தீபிகா படுகோனேவுக்கு எப்போதுமே முதலிடம். பல புதிய நடிகைகளின் வரவு நிகழ்ந்தாலும் தீபிகாவுக்கென தனி இடம் அங்கே உண்டு. தமிழில் "கோச்சடையான்' படம் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. தீபிகா நடித்து வெளியான 'பத்மாவத்' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் வில்லனாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரன்வீர். இருவரும் இந்தப் படத்தில் நடிக்கும்போது காதல்வயப்பட்டனர். இருவருமே இதை மறுக்காத நிலையில், தற்போது திருமண தேதி வெளியாகியுள்ளது. திருமண அழைப்பிதழை இருவரும் வெளியிட்டுள்ளனர். ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. நவம்பர் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் திருமணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் சினிமா வட்டாரமே இவர்களின் திருமணத்துக்கு தயாராகி வருகிறது. இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் 4 நாட்கள் வரை திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்படவுள்ளனர். தமிழ் சினிமாவில் யாருக்கெல்லாம் அழைப்பு என்பது தெரியவில்லை. 

• மலையாள பட கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரத கதையை பீமன் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லும் வகையில் "இரண்டாம் ஊழம்' என்ற ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார். அதை மையமாக வைத்து "மகாபாரதம்' படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. மோகன்லால் நடிக்க இருப்பதாகவும் சுமார் ஆயிரம் கோடி வரை பட்ஜெட் பிடிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் பல வருடங்கள் ஆகியும் அதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கான அறிகுறி தெரியவில்லை. இதையடுத்து எம்.டி.வாசுதேவன் நாயர் வழக்கு தொடர்ந்தார். அதில்,"பல வருடங்கள் ஆகியும் "இரண்டாம் ஊழம்' ஸ்கிரிப்ட்டை மையமாக வைத்து படம் தொடங்கப்படவில்லை. இனியும் அதற்காக காத்திருக்க விரும்பவில்லை. எனவே எனது ஸ்கிரிப்ட்டை மையமாக வைத்து அப்படத்தைத் தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கேட்டிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று இடைக்கால தடை வழங்கியுள்ளது நீதிமன்றம். இதற்கிடையில், ""வேறு ஒரு படத்தை இயக்குவதில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம் எனவும், இது குறித்து வாசுதேவன் நாயருடன் பேச உள்ளேன்'' என்று இயக்குநர் வி.எ.ஸ்ரீகுமார் மேனன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் தொடங்கப்படுமா இல்லை கைவிடப்படுமா என்ற குழப்பம் நீடிக்கிறது. 

•'மீடூ ஹேஷ்டேக்' மூலம் பலரும் பாலியல் சீண்டல்கள் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் முதலில் ஹாலிவுட் சினிமாவில் வெடித்தது என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதை மறுத்து, மீடூ விவகாரத்தை முதலில் பேசியது நான்தான் என்கிறார் பத்மபிரியா. 'தவமாய் தவமிருந்து', 'பட்டியல்', "சத்தம் போடாதே' போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை பத்மப்ரியா. தற்போது மலையாள படங்களில் நடித்து வருவதுடன் மலையாள திரையுலகில் இயங்கி வரும் பெண்கள் அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார். மல்லுவுட் நடிகை ஒருவரை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய விவகாரத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். அவரை மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் மீண்டும் உறுப்பினராகச் சேர்த்தது தவறு என்று நடிகைகள் போராடி வருகின்றனர். அதற்கு ஆதரவாக பத்மப்ரியாவும் குரல் கொடுத்து வருகிறார். சமீபகாலமாக மீ டூ விவகாரம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தனுஸ்ரீ தத்தா தொடங்கி பல்வேறு நட்சத்திரங்கள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை அம்பலப்படுத்தி வருகின்றனர். "நடிகை ஒருவரை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விவகாரத்தில்தான் இந்த விவகாரம் பேசப்படத் தொடங்கியது. இந்த விவகாரத்தில் நடிகைக்கு நடிகர் சங்கமான அம்மா அமைப்பு நீதி வழங்க மறுத்திருக்கிறது. இது எங்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார் பத்மபிரியா.

* 'சகுனி', "மாசு என்கிற மாசிலாமணி', 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படங்களில் நடித்திருப்பவர் நடிகை ப்ரணிதா. தமிழில் பெரிதாக வாய்ப்பு இல்லாத நிலையில் கன்னடப் பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்தியுள்ளார். அரசு பள்ளியைக் காத்து மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக தன்னார்வ அமைப்புகள் கேட்டு கொண்டதன் பேரில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார். இது பற்றி பேசும் போது... 'பெங்களூரில் உள்ள உள்ளூர் அரசு பள்ளியில் தன்னார்வலராக 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தினேன். அப்போது அந்த பள்ளியின் சூழல்பற்றி எனக்குத் தெரிய வந்தது. தற்போது அப்பள்ளியை நான் தத்தெடுத்திருக்கிறேன். அரசு பள்ளியை காத்து மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த இந்த ஆண்டு தொடக்கத்தில் சில தன்னார்வலர்கள் முன்வந்தனர். அவர்களுடன் நானும் இணைந்து இப்பணியை மேற்கொண்டிருக்கிறேன். இந்த பள்ளியின் தேவைகளை நிறைவேற்ற தற்போதைக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கியிருக்கிறோம். மாணவிகளுக்கான கழிவறை வசதி உள்ளிட்டவையும் இதில் நிறைவேற்றப்படும். இது போன்று இன்னும் சில பள்ளிகளுக்கும் என்னை அழைத்திருக்கிறார்கள். அங்கும் செல்லவுள்ளேன்' என்று தெரிவித்தார் ப்ரணிதா.

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com