வெள்ள நிவாரண நிதி விஷயத்தில் பிரபாஸைப் பார்த்து மலையாள நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்: கேரள அமைச்சர்!

மலையாளத் திரைப்பட உலகோடு நேரடித் தொடர்பில்லாத நடிகர் பிரபாஸ் முதல்வர் வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் அளித்திருக்கிறார்.
வெள்ள நிவாரண நிதி விஷயத்தில் பிரபாஸைப் பார்த்து மலையாள நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்: கேரள அமைச்சர்!

சமீபத்திய கேரள வெள்ளச் சேதத்தின் போது  அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேரள முதல்வர் துயர் நிவாரண நிதிக்காக தமிழ் மற்றும் தெலுங்கு ஹீரோக்கள் தாராளமாக நிதியை அள்ளி வழங்கினர். இச்செய்தி ஊடகங்கள் தோறும் வெளியாகின.

இதைப் பற்றிப் பேசும்போது கேரள சுற்றுலாத்துறை அமைச்சரான காடம்பள்ளி சுரேந்திரன்; கோடிகளில் சம்பளம் பெறும் மலையாள ஹீரோக்கள்... தமிழ் மற்றும் தெலுங்கு ஹீரோக்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகவே வெள்ள நிவாரண நிதி அளித்திருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் பிரபாஸ் மலையாளத் திரைப்படங்களில் நடித்ததில்லை. ஆனாலும் அவருக்கு மலையாளத்தில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மலையாளத் திரைப்பட உலகோடு நேரடித் தொடர்பில்லாத நடிகர் பிரபாஸ் முதல்வர் வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் அளித்திருக்கிறார். தமிழ் நடிகர் விஜய்க்கு மலையாளத்தில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவரும் கூட 75 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி அளித்திருக்கிறார். முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்காக தமிழ் திரையுலகிலிருந்து வெளிவந்த உதவி நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியுடையதாக இருந்தது. சகோதரர்களான அவர்கள் இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் நிதி அளித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் 1 கோடி நிதி அளித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இங்கே மலையாளத் திரையுலகில் 4 கோடி ரூபாய் கார் வைத்திருக்கும் நடிகர்கள் கூட மிகக்குறைவாகவே நிதி அளித்திருக்கிறார்கள்.

நடிகர் மோகன்லால் 25 லட்சம் ரூபாய் நிதி அளித்திருக்கிறார். நடிகர் மம்மூட்டியும் அவரது மகன் நடிகர் துல்கர் சல்மானும் இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதி அளித்திருக்கிறார்கள். இன்னும் பல நடிகர்கள் களத்தில் இறங்கி வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டத்தைப் பாராட்டியே தீர வேண்டும் என்ற போதும் கேரளத்தில் இது வரலாறு காணாத சேதம்... இந்த சேதத்தைச் சரி செய்ய மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில் பக்கத்து மாநில நடிகர்கள் அளவுக்கு இவர்கள் நிதி அளிக்கவில்லையே என்பது வருத்தத்திற்குரிய விஷயம். கருணைக் கொடை எப்படி அளிப்பதென அவர்கள் எல்லோரும் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். என காடம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார். 

அவரது கருத்தையே மூத்த மலையாள நடிகை ஷீலாவும் தெரிவித்திருந்தார்.

என்றபோதும் பிரபாஸ் அளித்த முதல்வர் வெள்ள நிவாரண நிதி குறித்து இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன. அவர் அளித்த நிதி 25 லட்சம் ரூபாய் மட்டுமே என்றும் இல்லை 1 கோடி ரூபாய் என்றும் இருவேறு விதமான கருத்துகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com