ஆசானிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன?: மனம் திறக்கும் பிரபல இயக்குநர்கள்!

காலையிலிருந்து மதியம் வரை அசராமல் உழைப்பார். பிறகு மதிய உணவுக்கு வீட்டுக்குச் சென்றுவிடுவார்... 
ஆசானிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன?: மனம் திறக்கும் பிரபல இயக்குநர்கள்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் அவர்களுடைய ஆசான்களைப் பற்றி பேசாமல் இருக்கமாட்டார்கள். தங்களுடைய குருக்களிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்டது என்ன என்று இயக்குநர்கள் சிலர் கூறியதாவது:

சந்தான பாரதி (குணா, மகாநதி)
குரு: ஸ்ரீதர்

ஸ்ரீதர் சார், மிக வேகமாகப் பணியாற்றுவார். முன்கூட்டியே திட்டமிட்டு குழப்பங்களைத் தவிர்ப்பார். காலையிலிருந்து மதியம் வரை அசராமல் உழைப்பார். பிறகு மதிய உணவுக்கு வீட்டுக்குச் சென்றுவிடுவார். திரும்பிவந்து அதே வேகத்தில் பணியாற்றுவார். நடுவில் இடைவேளை எடுத்துக்கொள்ளமாட்டார். அதனால்தான் குறுகிய காலங்களில் அவரால் படங்களை முடிக்கமுடிந்தது. இந்த வேகத்தை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். 

கே. ரங்கராஜ் (உதய கீதம், பாடு நிலாவே)
குரு: பாரதிராஜா

அவரைக் கூர்ந்து கவனிப்பதிலேயே திரைப்படங்கள் குறித்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. பெரிய இயக்குநர்கள் என்று திமிர் அவரிடம் இருக்காது. அவருடைய கைகள் அசுத்தமானாலும் பரவாயில்லை என இறங்கி வேலை செய்வார். சிலசமயம் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும் ஈடுபடுவார். மற்றவர்களை அருமையாக மிமிக்ரி செய்வார். நடிகர்கள் முதல் அவர் சந்திக்கும் நபர்களை வரை அனைவருடைய செய்கைகளையும் நடித்துக்காட்டுவார். யதார்த்தமான கதாபாத்திரங்களை உருவாக்க இந்தத் திறமை அவருக்கு உதவியது. இதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

வசந்த் (ஆசை, ரிதம்)
குரு: கே. பாலச்சந்தர்

அவருடைய மேஜையில் ஒரு குறிப்பு இருக்கும். மன்னிப்புகளில் எனக்கு ஆர்வம் இல்லை. அவர் என்ன செய்யச் சொன்னாலும் அதை நாங்கள் செய்துமுடிக்கவேண்டும் என எதிர்பார்ப்பார். அவர் கூறுகிற அனைத்தும் செய்யக்கூடியவையாகவே இருக்கும். அவருடைய சமகால இயக்குநர்கள் செய்யாததை இவர் செய்வதில் ஆர்வம் காட்டுவார். முதலாவதாக வருவதை விடவும் புதிதாக ஏதாவது செய்வதில் முதல் ஆளாக இருக்கவேண்டும் என்று எங்களுக்குப் போதிப்பார். இது அவருடைய கொள்கை. இது என்னிடம் ஆழமாகப் பதிந்துவிட்டது. 

சீனு ராமசாமி (தர்மதுரை, தென்மேற்குப் பருவக்காற்று)
குரு: பாலு மகேந்திரா

என்னுடைய தற்போதைய வாழ்வை பாலு மகேந்திராவுக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர் என்னைத் தேர்வுசெய்யாவிட்டிருந்தால் என்னால் திரைத்துறையில் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கமுடியாது. நம்பிக்கையுடன் செயல்படுவதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். எவ்விதச் சூழலிலும் அவர் தன்னம்பிக்கையுடன் இருப்பார். தன் திறமை மீது அவருக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு.

படத்தின் தரத்தில் அவர் சமரசம் செய்துகொள்ளமாட்டார். சிலசமயங்களில் மூன்று வருடங்களாகக் கதை விவாதத்திலேயே வேலைகள் நகர்ந்துகொண்டிருக்கும். படத்தின் மீது திருப்தி இருந்தால் மட்டுமே களத்தில் இறங்குவார். சோர்வின்றி பணியாற்ற நல்ல உடற்தகுதியுடன் இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவார். அவரிடம் திரைப்படம் மீதிருந்த காதலும் விடாமுயற்சியும் அவரிடம் உதவியாளர்களாக இருந்த அனைவரிடமும் தொற்றிக்கொண்டது. 

பார்த்திபன் (புதிய பாதை, ஹவுஸ்ஃபுல்)
குரு: கே. பாக்யராஜ்

என்னை அழைத்து இதுகுறித்து பேசுகிறீர்கள் என்றால் அதற்கு முழுக்காரணம் என் குரு பாக்யராஜ் தான். எனக்குத் தெரிந்த எல்லாவற்றுக்கும் காரணம் அவர்தான். அவருக்குப் பதிலாக இன்னொருவரிடம் நான் வேலை செய்திருந்தால், நான் இயக்குநராகவே கதாநாயகனாகவோ ஆகியிருப்பேன். ஆனால் இரண்டாகவும் என்னால் ஆகமுடிந்ததற்கு அவரே காரணம். 

அவரிடம் நான் சேர்வதற்கு முன்பு, எனக்குத் தெரிந்த யோசனைகளையே சிறந்ததாக எண்ணியிருந்தேன். ஆனால் அவர் ஒரு சிறந்த படக்காட்சியைச் சொல்லிவிட்டு, அதைத் தவறான உதாரணமாகக் கொள்ளவேண்டும் என்பார். எனவே அதைவிடவும் சிறந்த காட்சியை யோசிக்கச் சொல்வார். அப்போதுதான் என்னுடைய யோசனைகள் எல்லாம் சரியாக இல்லை என அறிந்தேன். காட்சிகளில் மாற்றம் கொண்டுவருவது அவருக்குப் பிடிக்காது. ஒரு காட்சி அவருக்குத் திருப்தியாக இல்லாவிட்டால், உடனே அதை மீண்டும் படம் பிடிக்க விருப்பப்படுவார், அதற்காக எத்தனை உழைப்பை அளித்திருந்தாலும். மோசமான படத்தொகுப்பு, காட்சி அளிக்கும் உணர்வைக் கெடுப்பதாக எண்ணுவார். 

விஜய் (மதராசப்பட்டினம், தெய்வ திருமகள்)
குரு: பிரியதர்ஷன்

பிரியதர்ஷன் சாருக்கு உதவியாளராக இருப்பதென்பது, பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்குச் சமம். எனக்குத் திரைப்படத் தொழில்நுட்பம் குறித்து ஒன்றும் தெரியாது. என் படத்தில் நீங்கள் பார்ப்பது எல்லாமே அவரிடமிருந்து கற்றுக்கொண்டதுதான். என்னுடைய ஒவ்வொரு ஷாட்டிலும் அவருடைய தாக்கத்தைக் காணமுடியும். ஒரு காட்சியை அமைப்பதில் அவர் மேஜிக் செய்வார். நாம் நினைத்துப்பார்க்கமுடியாத இடங்களிலெல்லாம் அவர் ஒரு காட்சியைப் படம்பிடிப்பார். நம் கற்பனைக்கு எட்டாத வகையில் ஒரு காட்சியை அமைப்பார். இப்போதும் நான் ஒரு படத்தை ஆரம்பிக்கும்போது அவரிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்வேன். அவருக்கு உள்ள திறமையில் 10 சதவிகிதம் எனக்குக் கிடைத்தால் நான் மகிழ்வேன்.

அறிவழகன் (ஈரம், குற்றம் 23)
குரு: ஷங்கர்

அவர் படங்களில் எப்படி ஊக்கமாக அமைகிறதோ அதேபோல அவருடைய பொறுப்புணர்வு, அவருடைய உதவியாளர்களுக்கு ஊக்கமாக அமையும். நுணுக்கான விஷயங்களுக்கு அவர் காட்டும் அக்கறை மிகவும் சிறப்பாக இருக்கும். ஒரு படத்தில் எந்தளவுக்குத் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தமுடியும் என யோசிப்பார். மேலும் அவர் ரசிகர்கள் என்ன விரும்புவார்கள் என்பதை எப்போதும் யோசித்துக்கொண்டிருப்பார். ரசிகர்களின் சமகால ரசனையை அறிந்துவைத்திருப்பார். அதை எப்படிப் படத்துக்கு மாற்றுவது என்பது அவருக்குத் தெரியும்.

கண்ணன் (ஜெயம் கொண்டான், இவன் தந்திரன்)
குரு: மணி ரத்னம்

அவரிடம் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். ஒன்றை மட்டும் குறிப்பிடவேண்டுமென்றால், முழுத் திரைக்கதை இல்லாமல் படப்பிடிக்குச் செல்லமாட்டார். அதற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்வார். அதில் திருப்தியடைந்துவிட்டால், 40-45 நாள்களில் படப்பிடிப்பை முடித்துவிடுவார். மெட்ராஸ் டாக்கீஸின் மூலமாக முழுத் திரைக்கதையின் முக்கியத்துவத்தை நான் அறிந்துகொண்டேன். அதுதான் படப்பிடிப்புச் செலவு, உடைகள், நடிப்பு மற்றும் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நான் அதைப் பின்பற்றுகிறேன். அதனால்தான் என்னால் 40 நாள்களில் படப்பிடிப்பை முடித்துக்கொள்ள முடிகிறது.

அஜய் ஞானமுத்து (டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்)
குரு: ஏ.ஆர். முருகதாஸ்

அவருக்காக நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். அப்படி இல்லாவிட்டால், தற்போது நான் எங்கு இருப்பேன் எனத் தெரியாது. திரைக்கதை எழுதுவதிலிருந்து ரசிகர்களைப் புரிந்துகொள்வது வரை அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளார். மேலும், அவரிடமிருந்து வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுக்கொண்டுள்ளேன். அவர் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்கள் குறித்து நிறைய சொல்வார், மேலும் அந்தக் கஷ்டங்களை நாங்கள் சந்திக்காதவாறு பார்த்துக்கொள்வார். அவரிடம் பணிபுரிவது மிகவும் சுலபமானது. எங்களுக்கெல்லாம் அவர் இயக்குநர் மட்டுமல்ல. அவருடைய உதவியாளர்களுக்கு எப்போதும் உதவியாக இருப்பார். நான் இரு படங்களை இயக்கியிருந்தாலும் ஒரு தேவைக்காக நான் எப்போதும் அவரிடம் செல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com