ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இறந்த மூன்று தமிழ் நகைச்சுவை நடிகர்கள்!

நகைச்சுவை நடிகர்களாகவும் குணச்சித்திர நடிகர்களாகவும் அறியப்பட்ட மூன்று தமிழ் நடிகர்கள் கடந்த ஒருவாரத்தில்...
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இறந்த மூன்று தமிழ் நகைச்சுவை நடிகர்கள்!

நகைச்சுவை நடிகர்களாகவும் குணச்சித்திர நடிகர்களாகவும் அறியப்பட்ட மூன்று தமிழ் நடிகர்கள் கடந்த ஒருவாரத்தில் மரணமடைந்துள்ளார்கள். 

கடந்த திங்களன்று ராக்கெட் ராமநாதனும் கடந்த புதனன்று வெள்ளை சுப்பையாவும் நேற்று கோவை செந்திலும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளார்கள். இவர்களின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

திரைப்பட குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகரான கோவை செந்தில் (74) உடல்நலக் குறைவால் கோவையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகில் உள்ள பூமலூர் ஊராட்சி, பள்ளிபாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1966இல் பணியில் சேர்ந்த இவர், 1987இல் வங்கி வேலையிலிருந்து விலகி, முழுநேர நடிகரானார். இயக்குநர் கே.பாக்யராஜின் ஆஸ்தான நடிகரான இவர், ஒரு கை ஓசை, இது நம்ம ஆளு, படையப்பா உள்பட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக கோவை, வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இவருக்கு மனைவி லட்சுமி, மகன் திலக், மகள் நர்மதா ஆகியோர் உள்ளனர்.  சூலூர், பெரிய குளக்கரை எரிவாயு மயானத்தில் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.

நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா (78) உடல் நலக் குறைவால் மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.  ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியைச் சேர்ந்தவர் நடிகர் வெள்ளை சுப்பையா. இவரது மனைவி சாவித்திரி (60). மகள் தனலட்சுமி. சிறுவயது முதலே திரைப்படத் துறையின் மீது ஆர்வம் கொண்ட வெள்ளை சுப்பையா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் மேட்டுப்பாளையம் சிவன்புரம் காலனியில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, செப்டம்பர் 1ஆம் தேதி வீட்டில் மயங்கி விழுந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், புதன்கிழமை இரவு 8.40 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் மேட்டுப்பாளையம் நகராட்சி, சாந்திவனம் மின் மயானத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் எரியூட்டப்பட்டது. 

வெள்ளை சுப்பையா தமிழக அரசின் கலைச்செல்வன், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் 2016-17ஆம் ஆண்டுக்கான கலை முதுமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி, 36 முதல் 50 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி, 51 முதல் 60 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.)

பலகுரல் மன்னன் என்று புகழப்பட்ட நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் (74) உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார். 'ஸ்பரிசம்',ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது', வளர்த்தகடா', மண்சோறு', கோயில்யானை', நாம்', வரம்' உள்ளிட்ட பல படங்களில் ராக்கெட் ராமநாதன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, அசோகன் உள்ளிட்ட பலரது குரலில் பேசும் திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் முதல் பலகுரல் மன்னன் என்றும் புகழப்பட்டவர். தமிழக அரசின் கலைமாமணி விருது, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது பெற்றவர். அவருக்கு மனைவி பானுமதி, மகள் சாய்பாலா, மகன் சாய் குரு பாலாஜி ஆகியோர் உள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த ராக்கெட் ராமநாதனின் உடல் திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது. மூவரின் இறப்புக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com