இந்த 10 விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்! நடிகை ரோகிணி பேட்டி!

குழந்தை நட்சத்திரம், நடிகை, பாடலாசிரியர், கதை வசனகர்த்தா, திரைப்பட இயக்குநர், டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று திறமைகள் பல கொண்டவர் நடிகை ரோகிணி.
இந்த 10 விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்! நடிகை ரோகிணி பேட்டி!

குழந்தை நட்சத்திரம், நடிகை, பாடலாசிரியர், கதை வசனகர்த்தா, திரைப்பட இயக்குநர், டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று திறமைகள் பல கொண்டவர் நடிகை ரோகிணி. 'ஸ்திரீ' என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய திரைப்பட special mention விருதை 1995 - ஆம் ஆண்டு பெற்றவர். தனக்கு 'பிடித்த பத்து' பற்றி இங்கு கூறுகிறார்.

இயற்கை: என் வாழ்க்கை என்றும் இயற்கையோடு இணைந்து இருக்கவே அசைப்படுவேன். மரம், செடி, கொடி, நீர் நிலைகள், மலை, அருவி இப்படி எது இருந்தாலும் அல்லது மலை மற்றும் ஆறு அல்லது நீர்வீழ்ச்சி இருந்தால் அதுவே சொர்க்கம். அதனாலேயே நான் வருடத்திற்கு பல முறை இம்மாதிரியான இடங்களுக்குச் செல்வதை திட்டம் போட்டு செய்து வருகிறேன். ஒரு முறை ஜப்பான் நாட்டிற்கு சென்றேன். அங்கு ஒரு சூடான வசந்த அருவியை (spring) பார்த்த உடன் அங்கேயே உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன். நேரம் போனதே எனக்கு தெரியவில்லை. 

பழங்கள்: எனக்கு எல்லாப் பழமும் பிடிக்கும் என்றாலும் வாழைப்பழம் மீது அதீதமான ஒரு நாட்டம் உண்டு. சிறுவயதில் இந்த விருப்பம் அதிகமாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். எங்கே வாழைப்பழத்தைப் பார்த்தாலும் என் கை தானாகவே போய் அதை எடுக்கும். என்னை ஒரு பெயர் வைக்கும் விழாவிற்கு அழைத்துக் கொண்டு போயிருந்தார்கள். அங்கு ஒரு அறை முழுக்க வாழைப்பழங்கள் இருந்ததை பார்த்த பிறகு விடுவேனா? உறவினர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொருவராக அழைத்து வாழைப்பழம் கேட்க, ஒவ்வொருவரும் மற்றவர்கள் எனக்கு வாழைப்பழம் தந்ததை அறியாமல் எடுத்துக் கொடுக்க, அன்று இரவே அதிகமான வாழைப்பழம் சப்பிட்டதால் உடல் நலம் குன்றியது. ஆனாலும் வாழைப்பழ ஆசை இன்றும் என்னை விட்டபாடில்லை. 

எல்லாரும் சமம்: ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயத்தை நான் மிகவும் விரும்புவேன். எனக்கு எல்லாரையும் சமமாக பாவிக்கும் எண்ணமும், பண்பு இருக்கிறது. இப்படி எனது நண்பர்களும் பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படிப்பட்டவர்களுடன் நான் பொழுதை போக்கவே ஆசைப்படுவேன். நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியரான பாலா திருபுரசுந்தரி எல்லாரையும் சமமாக பாவிக்கும் பழக்கத்தை எனக்கு கற்றுக் கொடுதார்கள். 

புத்தகங்கள்: தினமும் ஏதாவது ஒரு புத்தகம் படிக்காமல் நான் இருக்க மாட்டேன். புத்தகம் படிப்பது என்பது அன்றாட பணிகளில் ஒன்று. இயற்கையைப் பற்றிய புத்தகங்களை நான் விரும்பிப் படிப்பேன். அதே போன்று நகரங்களை பற்றிய புத்தகங்களையும், நான் ஆசையோடு படிப்பேன். குறிப்பாக எப்படி ஒரு நகரம் உருவானது, அதன் மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என்று அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புவேன். படிக்கும் போது மென்மையான இசை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் சுகமாக படிக்க முடியும். கதை புத்தகங்கள் என்றால் நான் விரும்பும் ஆசிரியர்கள் அசோகமித்ரன், ச. தமிழ்ச்செல்வன், நக்கீரன், சூழலியல் பற்றி எழுதும் பாமயன் என்று பட்டியல் ரொம்ப நீளும். 

ரயில் பயணம்: இருசக்கர வண்டி முதல் விமானம் வரை. எனக்கு மிகவும் விருப்பமான பயணம் எது தெரியுமா? ரயில் பயணம்தான். அதிலும் நீண்ட பயணம் என்றால் நான் கண்டிப்பாக ரயிலில் செல்வதையே விரும்புவேன். அதுவும் இரவு நேர பயணம் என்றாலோ, மழை தூரிக் கொண்டிருந்தாலோ எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். எனது மகனை நான் கல்லூரிப் படிப்பிற்காக அமெரிக்க நாட்டிற்கு அழைத்து சென்ற போது, ரயில் பயணத்தைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். காரணம் அவனுக்கு ரயில் பயணம் சுகமானதாக இருக்கிறது என்ற எண்ணம் வரவேண்டும் என்பதற்காகத்தான். உண்மையிலேயே என் மகன் அந்த பயணத்தை ரொம்ப விரும்பினான். 

வெளிநாடுகள் என்றால் என் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. ஏன் தெரியுமா? அங்குள்ள மக்கள், அவர்களின் வீட்டு கட்டமைப்பு, தெருக்களை அமைத்திருக்கும் அழகு, உணவு, நகர நிர்மாணம், கிராமம் எப்படி இருக்கிறது, அவர்களது வாழ்க்கை முறை என பலவற்றை நம்மால் பார்க்க முடியும். 

ஓவியம்: நான் எப்பொழுது அமைதியை விரும்பினாலும் வண்ணங்களுடன் உட்கார்ந்து விடுவேன். சாதாரணமாக ஓவியம் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். மனம் சஞ்ஜலப்படும் போதெல்லாம் வண்ணங்கள்தான் என்னை திரும்பவும் என் நிலைக்கு அழைத்து வருகின்றன. அதே போல் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்ப்பதிலும் எனக்கு விருப்பம் உண்டு. ஒருமுறை நான் ஃபிரான்ஸ் (France) நாட்டில் உள்ள பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஓவியத் தெருவில் நுழைந்தவுடன் நான் மிகவும் மகிழ்ந்தேன். என்னை அறியாமல் பலமணிநேரம் அந்த தெருவில் கழித்தேன். ஒவ்வொரு ஓவியத்தையும், அவர்கள் வரையும் முறையையும் பார்த்து பிரமித்தேன்.

சமையல்: நான் நன்றாக சமையல் செய்வதாக பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் எனது மகன் விரும்பும் வண்ணம் சமைப்பதையே நான் விரும்புவேன். காரணம், அவனுக்கு அதீதமான ரசனை உண்டு. சுலபத்தில் அவனை திருப்தி படுத்த முடியாது. சுவையோடு இருக்கிறது என்று அவன் சொன்னாலே நான் மகிழ்ச்சி அடைவேன். எந்த பொருளோடு எதை சேர்த்தால் என்ன சுவை வரும் என்று ஓரளவிற்கு எனக்கு தெரியும் என்பதனால் சரியாக சேர்த்து அவனுக்கு புதுசு புதுசாக செய்து தர விரும்புவேன். சமீபத்தில் அவனுக்காக ஒரு அசைவ உணவு ஒன்றை புதிதாக கற்றுக் கொண்டு செய்து அவனது பாராட்டுதல்களை பெற்றேன். 

பேசும் கதை: எனது 'யு ட்யூப்' சேனலின் பெயர்தான் 'பேசும் கதை'. என்னுடைய குரலிலேயே சிறுகதைகளை படித்து, அதை ஒலிப்பதிவு செய்து, அதை எனது சேனலில் பதிவிறக்கம் செய்வது, சமீபத்தில் நடந்த ஒரு சந்தோஷமான நிகழ்வு. இதுவரை இரண்டு கதைகளைதான் நான் இப்படி செய்து உள்ளேன். அவை ச.தமிழ்ச் செல்வனின் குரல்கள், வண்ணதாசனின் நடுகை. ஆனால் பல்வேறு சிறுகதைகளை நமது இளைய தலைமுறைக்கு சொல்ல நான் நினைக்கும் சுலபமான வழி இது என்று நினைக்கிறேன். இது ஆரம்பம் தான்.

தோழிகள்: எனக்கு பல்வேறு தோழிகள் எனது நட்பு வட்டத்தில் உள்ளனர். எல்லாருக்குமே என்மேல் அன்பு அதிகம். அவர்கள் மேல் நான் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறேன். எல்லாரையும் நான் பெயர் சொல்ல ஆரம்பித்தால் அதற்கு இங்கு இடம் போதாது. அதனால் எனது நெருங்கிய தோழிகள் தனஸ்ரீ, லக்ஷ்மி இருவருடன் நான் அதிக நேரம் செலவிட என்றுமே விரும்புவேன். சமீபத்தில் இவர்களுடன் நான் கொடைக்கானல் சென்றிருந்தேன். காரணம் என்ன தெரியுமா? பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர்களை பார்த்து ரசிக்கத்தான். 

தியானம்: வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத விஷயங்கள் என்று எடுத்துக் கொண்டால் பல உண்டு. என்னைப் பொருத்தவரை தினமும் தியானம் செய்வது மிகவும் முக்கியமான விஷயம். எதை வேண்டுமானாலும் நாளை செய்யலாம் என்று தள்ளிப் போடலாம். ஆனால் தினமும் தியானம் செய்வதை எந்தக் காரணம் கொண்டும் தள்ளிப் போடவே கூடாது. ஒரு மாதம் நம்மை இந்த தியானத்திற்கு பழக்கப்படுத்திவிட்டால், அப்புறம் அதன் பயன்கள் நம்மை அறியாமல் அந்த நேரத்திற்கு தியானம் செய்ய தூண்டும். தியானம் செய்யும்போது எனது வேண்டுதல் இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும், மக்கள் அனைவரும் நலமாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வேண்டுவேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com