என் படங்கள் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் நான்? நடிகர் சிவகார்த்திகேயன் பரபரப்பு பேட்டி!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களுக்கு பிறகு பொன்ராமுடன் மூன்றாவது முறையாக
என் படங்கள் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் நான்? நடிகர் சிவகார்த்திகேயன் பரபரப்பு பேட்டி!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களுக்கு பிறகு பொன்ராமுடன் மூன்றாவது முறையாக வெற்றிக் கூட்டணி அமைத்து சீமராஜா படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படம் இன்று விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் பற்றியும், தனக்கு இந்த இடம் கிடைத்தது எப்படி என்பது குறித்து சிவகார்த்திகேயன் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்துக்கு அளித்த பேட்டியின் சில துளிகள் இவை.

பொன்ராம் சிவா இந்தக் கூட்டணி எப்படி?
 
காலேஜ் படிக்கும் போது முதல் ஆண்டில் ஒரு நண்பனைச் சந்திப்போம். மூன்று ஆண்டு படிப்பு முடிப்பதற்குள், அந்த நண்பன் நமக்கு நெருக்கமாகிவிடுவான். அப்படிப்பட்ட ஒரு நண்பர்தான் பொன்ராம். அவர் படங்களில் நடிக்கையில் என்னால் இயல்பாக இருக்க முடிகிறது. என் மீதான நம்பிக்கை, எதிர்ப்பார்ப்பு எல்லாவற்றையும் உணர்ந்தே இருக்கிறேன். ஒரு தியேட்டரில் 400 பேர் ரசித்தால் அது வெற்றி படம். 600 பேர் ரசித்தால் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அதே படத்தை  800 பேர் ரசித்தால் அது சூப்பர் டூப்பர் ப்ளாக் பஸ்டர் ஹிட். எனவே மக்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை மிகச் சரியாக நாம் கணித்து விட்டால் போதும் படம் ஹிட்டாகிவிடும். மக்களுக்கு பிடித்ததை கொடுக்கவே நல்ல கூட்டணியை அமைக்கிறோம். அந்த கூட்டணியுடன் இணைந்து படம் எடுப்பதால் வெற்றி பெறுகிறது. பொன்ராமுடன் வேலை செய்யும் போது அதிக பிரஷர் இருக்காது. ஆனால் படம் வெளியிடும் போது எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது. இதற்கு முந்தைய சாதனைகளை தாண்டி இந்த படம் வெற்றி பெற வேண்டுமே என்ற எண்ணத்துடன் அனைவரும் வேலை செய்வோம். எங்கள் வெற்றிக் கூட்டணிக்கு நான் தான் என்றோ இல்லை  அவர் தான் என்றோ பிரித்துக் கூற முடியாது. 

நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்களை கவனித்தால், நகரம் மற்றும் கிராமப்புறம் என இரண்டிலும் நடித்து வருகிறீர்களே?

ஆமாம். எனக்கு இந்த ரெண்டு வகையான படங்களில் நடக்க விருப்பம். கமர்ஷியல் படங்களைப் பொருத்தவரையில் நீங்கள் புதிய விஷயங்கள் எதுவும் செய்ய முடியாது. காட்சிகள் மற்றும் கதைக்களன்களில் வேண்டுமானால் வித்யாசத்தைக் காட்டலாம். ஆனால் அவை ஒரே மாதிரியான படங்கள் தான்.

பெரிய கதாநாயகிகளுடன் மட்டும் தொடர்ந்து நடிக்கிறீர்கள்?

இன்று வரை தயாரிப்பாளர் அல்லது இயக்குநர்கள்தான் என் படத்தின் கதாநாயகியை முடிவு செய்கிறார்கள். ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ் அந்த ரோலுக்கு எப்படியிருப்பார் என்று கருத்து கேட்டார்கள், மற்றபடி இயக்குநர்களின் தேர்வில் நான் தலையிடுவதில்லை. 

இந்தப் படத்தில் சமந்தா கதையை கேட்டு அதில் அவருக்கு முக்கியமான ரோல் என்றதும் உடனடியாக நடிக்கச் சம்மதித்துவிட்டார். இதில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும்ம் என்று சொன்னவுடன், ஆர்வத்துடன் களத்தில் இறங்கி கற்றுக் கொண்டார். ஆக்‌ஷன் மற்றும் காதல் காட்சிகள் இரண்டுமே இப்படத்தில் அவருக்கு உண்டு. பாவாடை தாவணி போட்டு முதன்முறையாக தமிழ் சினிமாவில் காட்சி தரவிருக்கிறார் சமந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நெப்போலியன், சிம்ரன் எனப் பெரிய நட்சத்திர அணி உள்ளதே...

ஆமாம், இந்தப் படத்தில் நிறைய கதாபாத்திரங்களும் அவர்களைச் சுற்றி நிகழும் சம்பவங்களும் உண்டு. சிங்கம்பட்டி ஜமின் பற்றிய கதை இது. 80 வயதான ஜமின்தார்  இன்னமும் அந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அதை மையமாக வைத்து பின்னப்பட்ட இந்தக் கதையைத்தான் பொன்ராம் இயக்கியுள்ளார். படத்தில் மண் சார்ந்த போராட்டங்களும் இருக்கும். படத்தில் நெப்போலியன் ராஜாவாக நடித்துள்ளார். நான் இளவரசன். சிம்ரன் காளீஸ்வரி எனும் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நான் சிம்ரனின் பெரிய ரசிகன். அவருடைய நடனம் மிகவும் பிடிக்கும் என்று படப்பிடிப்பின் போது அவரிடம் சொன்னேன். அவருடைய படங்களைப் பற்றி பேசுவோம். திரையில் நான் பார்த்து ரசித்த ஒருவரை நேரில் சந்தித்து சரளமாகப் பேசுவதுடன், அவருடன் சேர்ந்து நடிப்பது என்பது நான் கனவிலும் எதிர்பார்க்காத ஒன்று. இந்தப் படத்தின் கதாநாயகியான சமந்தாவுக்கு ஒரு மெச்சூர்ட் டீச்சர் ரோல். லால் வில்லனாகவும், சூரி காமெடி ரோலிலும் கலக்கியுள்ளனர்.

இந்தப் படம் காமெடி படமா? சீரியஸ் படமா?

இது மாஸ் படம். எல்லா வயதினருக்கும் பிடிக்கும். முக்கியமான குழந்தைகளை ரசிக்க வைக்கும் ஒரு அழகான படமாகவே இருக்கும். குழந்தைகளை கவரும் வகையில் காமெடி இருக்கும். அதே சமயம் பெரியவர்களுக்கும், எமோஷனல் காட்சிகள், மெசேஜ் உண்டு. ஆனால் என்னுடைய மற்ற படங்களை விட சீமராஜாவில் காமெடி குறைவு என்பது உண்மைதான். இந்தப் படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளேன். இளவரசன் கதாபாத்திரம் ஒன்றும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த முன்னோர் கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளேன். இரண்டுக்குமான வித்யாசத்தை கூடுமானவரை செய்துள்ளேன். படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும்.

சினிமாவில் இந்த இடத்தை நீங்கள் எதிர்பார்த்தீர்களா? உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

இல்லவே இல்லை. சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் தொலைக்காட்சி சானலில் ஐந்து வருடம் வேலை செய்ததால் மக்களுக்கு நெருக்கமானவாகிவிட்டேன். அவர்கள் என்னை தங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து அன்பு செலுத்தினார்கள். எனக்கு அவர்கள் தந்த அங்கீகாரம் மற்றும் அன்பும் அரவணைப்பும் தான் மேலும் மேலும் என்னை உற்சாகப்படுத்தி உழைக்க வைத்து வெள்ளித் திரை வரை பயணம் செய்ய வைத்தது.

என்னுடைய நெருங்கிய நண்பர்கள் கல்லூரி தினங்களிலிருந்து என்னுடன் பழகியவர்கள்தான். இப்போதும் சந்தித்து பேசி மகிழ்வோம். சட்டென்று ஒரு ஐஸ்க்ரீம் கடைக்குப் போய் காஷுவலாக ஐஸ் க்ரீம் சாப்பிடுவோம். பணத்தை விட மனிதர்கள் தான் முக்கியம் என்று வாழ்ந்த பெற்றோரின் மகன் நான். என்னுடைய படங்கள் வேண்டுமானாலும் வெற்றி அடைந்திருக்கலாம். நான் அப்படியே தான் இருக்கிறேன். இன்னும் நான் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.

உங்கள் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படங்கள் என்ன?

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு காமெடி படத்தில் நடிக்கிறேன். அதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். சதீஷ், யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவைத் தவிர ரவிக்குமார் இயக்கத்தில் ஸ்கைஃபை ஜானர் படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதில் ரகுல் ப்ரீத்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

னா படம் உங்கள் தயாரிப்பில் வெளிவர விருக்கும் முதல் படம். அது குறித்து?

ஒரு விவசாயியின் மகள் கிரிக்கெட் வீரராகும் கதையான அந்த சப்ஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்தது. கனா என்ற இந்தப் படத்தை என் நண்பன் அருண் ராஜாவையே இயக்க சொன்னேன். இந்தப் படத்திற்காக இயக்குனர் அருண் ராஜா அப்பா மகள் சம்மந்தப்பட்ட பாடல் உள்ளது. அதை நீங்களும் உங்கள் மகளும் பாட வேண்டும் என்றார். பாடலை பதிவு செய்து வெளியிட்டதும். அது  யூ டியூபில் ஹிட் அடித்துவிட்டது. மகளின் தோழிகளும், ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இது போன்ற கதைகளை தயாரிக்க முடிவு செய்துள்ளேன். அதை என் நண்பர்களை வைத்து செயல்படுத்தி வருவேன். 

பேட்டி - கோபிநாத் ராஜேந்திரன் / தமிழில் உமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com