மான் வேட்டை வழக்கு: தபு, சையஃப் அலி கான் உள்ளிட்டோருக்கு மீண்டும் சிக்கல்?

சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடிய வழக்கில் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே, சையஃப் அலி கான் ஆகியோரை ஜோத்பூர் நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது
மான் வேட்டை வழக்கு: தபு, சையஃப் அலி கான் உள்ளிட்டோருக்கு மீண்டும் சிக்கல்?

சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடிய வழக்கில் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே, சையஃப் அலி கான் ஆகியோரை ஜோத்பூர் நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக ராஜஸ்தான் அரசு இன்று (சனிக்கிழமை) தெரிவித்தது.

சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட 20 ஆண்டுகால வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதையடுத்து, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதேவேளையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த திரை நட்சத்திரங்கள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே, சையஃப் அலி கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே, சையஃப் அலி கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்தது. 

வழக்கு விபரம்:

கடந்த 1998-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் 'ஹம் சாத் சாத் ஹைன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் சல்மான், தபு, நீலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டன. அன்றைய தினம் இரவில், வனப்பகுதிக்கு அருகே ஜிப்சி வாகனத்தில் சல்மான் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது அரிய வகை மான்கள் அங்கு உலவிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு மான்களை சல்மான் கான் வேட்டையாடினார். உடன் சென்ற நட்சத்திரங்களும் அதற்கு உதவியதாகத் தெரிகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 9/61-இன் கீழ் சல்மான், சையஃப் அலி கான், தபு, நீலம், சோனாலி, துஷ்யந்த் சிங் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. அந்த சட்டப் பிரிவின்படி குற்றம் நிரூபணமானால் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

ஜோத்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பலதரப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தச் சூழலில், கடந்த மார்ச் 28-ஆம் தேதி வழக்கின் மீதான இறுதி வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. அதைக் கேட்டறிந்த நீதிபதி தேவ் குமார் கத்ரி, ஏப்ரல் 5-ம் ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக அறிவித்தார்.

அதன்படி, ஏப்ரல் 5-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

தீர்ப்பின் விவரங்களை அறிவதற்காக சல்மான் கான் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். குற்றம்சாட்டப்பட்ட பிற நட்சத்திரங்களும் ஆஜராகியிருந்தனர். வழக்கின் வாத, பிரதிவாதங்களும், சாட்சியங்களும் சல்மான் கான் மான் வேட்டையில் ஈடுபட்டதை உறுதி செய்திருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார். வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான் கான் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தபு உள்ளிட்ட 5 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதி விளக்கமளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com