எல்லாவற்றையும் கடந்தது அன்பு மட்டுமே!

எல்லாவற்றையும் கடந்தது அன்பு மட்டுமே!

இப்போதெல்லாம் வித்தியாசமாக கதை பிடித்து, திரைக்கதையாக்கி படப்பிடிப்பு முடித்து வர

இப்போதெல்லாம் வித்தியாசமாக கதை பிடித்து, திரைக்கதையாக்கி படப்பிடிப்பு முடித்து வர, ஒன்றரை வருஷத்துக்கு மேல் ஆகி விடுகிறது. காலதாமதங்கள், சினிமாவில் தவிர்க்க முடியாதது. இதனால் நிறைய முயற்சிகள் தள்ளிப் போனது. அதுதான் தாமதம். சினிமாவில் எப்போதும்

உற்சாகப்படுத்திக்கவும் அப்டேட் செய்துக் கொள்ளவும் கிடைக்கிற நேரம்தான் முக்கியம். இப்போது பாருங்க...  சமூக வலைதளங்களில் படத்தை பற்றிய அப்டேட்ஸ், எங்க பட  டீஸரை முகநூலில் வெளியிடுகிற அளவுக்கு நம்பிக்கை தந்துள்ளது. எவ்வளவு ரீச்! எவ்வளவு கமெண்ட்ஸ்!  சமூக வலைதளங்கள், எங்களை மாதிரியான சின்ன இயக்குநர்களுக்கு இன்றைக்கு மிகப்பெரிய இடம். 

இந்த அறிவியல், நாளைக்கே சினிமாவைவிட பெரிய மீடியாவாகக் கூட ஆகலாம். எல்லாத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.  அனுபவத்துடன் பேச ஆரம்பிக்கிறார் அறிமுக இயக்குநர் காந்தி மணிவாசகம். இயக்குநர் மணிவாசகத்தின் மகன். இப்போது  'களவாணி மாப்பிள்ளை'  படத்தின் மூலம் கோடம்பாக்கம் நுழைகிறார். 

என்ன கதை....

தலைப்புதான் கதை. மாப்பிள்ளைக்கும், மாமியாருக்கும் இடையில் நடக்கும் களேபரங்களும், பரபர சம்பவங்களுமான கதை. எதார்த்தமான சினிமா. வாழ்க்கையில் சோதனை வரும்  நேரங்களில் சோர்ந்து உடைந்து போய் உட்கார்ந்திடாமல், நினைத்த விஷயங்களை அடைந்தே தீரணும் என்கிற வெறியோடு இந்த இரண்டு பேரும் முட்டி மோதுகிறார்கள்.  பொள்ளாச்சி நகரப் பின்னணியில் நடக்கிற கதை. இன்றைக்கு  வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிற பிரச்னைகளை வைத்து சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். 

கதை எழுதி இயக்குகிற அளவுக்கு  இதில் வியக்க வைத்த விஷயம் என்னவாக இருக்கும்...

சாப்பாடு, சம்பளம், சந்தோஷம் எனக் கிடைக்கிற வாழ்வு, எல்லோருக்கும் எப்போதும் அமைவது இல்லை.  அப்படி கிடைத்தாலும் கனவு, லட்சியம், வேட்கை என துரத்தும் இந்த வாழ்வில் ஒரு கட்டத்தில் எங்கோ போய் விடுகிறோம்.  மனித மனம் எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலேயே கடந்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அடைய வேண்டியவற்றை அடைந்து விடுகிறது. இனி அடைய வேண்டி ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு சொல்கிறவர்களை கூட நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் அடைந்து விட்டோம், என்ற நிலைக்கு வந்த பின்னர்தான், இங்கே பிரச்னைகளே துளிர் விடுகிறது. பணம் பிரச்னை இல்லை என்கிற போது மனம் பிரச்னையாகி விடுகிறது.   எல்லாம் அடைந்த பின் அன்புக்கு ஏங்குகிறோம். வன்மம் இல்லா உலகை அடைய தவிக்கிறோம். சந்தோஷங்களுக்கு காத்திருக்கிறோம். எப்போதும் பரிசுத்தமான காதலுக்குப் பரிதவிக்கிறோம். ஒவ்வொரு கணமும் மாறுவதுதான் மனித மனம்.  அப்போது உணரும் ஒரு தனிமைதான்  நாம் யார் என்று உணர வைக்கும். அப்படி உணர்ந்த ஒரு சங்கதிதான் இந்த கதை.  பணம், பொறாமை எல்லாவற்றையும் கடந்து  நிலைத்து நிற்பது அன்பும், மனிதநேயமும்தான் என்று உணர வைக்கும் களம். பின்னணியில் ஒரு நிஜ சம்பவமும் இருக்கிறது. 

 இந்த மென்மையான உணர்வுகளை சொல்றது சரியா இருக்குமா...

எப்பவுமே மென்மையான உணர்வுகளை எல்லாரும் மதிப்பார்கள். சினிமாவில் டிரெண்ட் என்று ஒரு அம்சமே கிடையாது. பெரிய பட்ஜெட் படங்கள் ஜெயித்துக் கொண்டிருந்த வேளையில்தான்  "சேது',  "அழகி',  "பருத்தி வீரன்', "மொழி', "வெயில்'  என உணர்வுகளை சொன்ன படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. நாம் சொல்ல வருகிற விஷயத்தை  சரியாக  சொன்னாலே  போதும். மக்கள் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். காமெடி, கமர்ஷியல் என்று சில படங்கள் ஜெயித்து விட்டால்,  எல்லாப் படங்களும் ஜெயிப்பதாக நினைக்கிறோம். அது அப்படி இல்லை. விஷூவல் ட்ரீட்மெண்ட் நன்றாக இருந்தால் மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.   மண்ணை, வாழ்க்கையை, கலாசாரத்தை, மழையை, காதலை சொல்லக் கூடிய வாய்ப்பாகவே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். 

படத்தில் வேறென்ன சிறப்பு..

என் அப்பா மணிவாசகம்  ஒரு பார்முலா வைத்திருப்பார். மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல், நிறைய காமெடி என்று யோசிப்பார். அதன் படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்ஷியல் வெற்றி பெற்றது. அதைத்தான் நானும் தொட்டிருக்கிறேன். ஒரு குடும்பம், அதற்குள் இருக்கும் பொறாமை, சந்தோஷம் என எல்லாவற்றையும் இணைத்திருக்கிறேன்.  வழக்கமாக மாமியார், மருமகள் கதைகளைத்தான் சினிமாவில் பார்த்திருப்போம். 

மாமியார், மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும்.  அப்படி வந்த ஒரு சில படங்களுக்கும் இங்கே ஏக வரவேற்பு. 

அட்டக்கத்தி தினேஷ், அதிதி மேனன், தேவயாணி, ஆனந்த்ராஜ் இந்த  நான்கு பேரைச் சுற்றி நகர்கிறது  கதை.  'விசாரணை' மாதிரி படங்கள் செய்து கொண்டு இருந்த நேரத்தில் இந்தக் கதையை அட்டக்கத்தி தினேஷ் கேட்டார். கொஞ்சம் சீரியஸ் சினிமாவில் இருந்து விலகி, இந்த கதையில் அவ்வளவு ஆர்வமாக நடித்திருக்கிறார். 

அட்டக்கத்தி தினேஷ் - அதிதி மேனன் இருவருக்குமான கெமிஸ்ட்ரியை விட தினேஷூக்கும் தேவயாணிக்குமான  கெமிஸ்ட்ரிதான் பிரமாதமாக வந்திருக்கிறது.  அதிதி மேனன் புது விதமாக இருப்பார்.  ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com