என்ன உட்கார வெச்சு மணப்பெண் போன்று நலுங்கு பண்ணிறியே மிஷ்கின்: வெட்கப்பட்ட ஷங்கர்!

மணி ரத்னம், மிஷ்கின், அட்லி உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்துகொண்ட அந்த விழா குறித்து இயக்குநர் வசந்த பாலன் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளதாவது...
என்ன உட்கார வெச்சு மணப்பெண் போன்று நலுங்கு பண்ணிறியே மிஷ்கின்: வெட்கப்பட்ட ஷங்கர்!

இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படம் 1993-ல் வெளிவந்தது. ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.0 படம் சமீபத்தில் வெளிவந்தது. 

இந்நிலையில் ஷங்கர் திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி கடந்த வருடம் ஜூலை 30 அன்று (ஜெண்டில்மேன் வெளியான தினம்), ஷங்கரின் உதவி இயக்குநர்கள் தங்களுடைய குருவுக்கு விழா ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவில் ஷங்கரும் அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய இன்றைய இயக்குநர்களும் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் ஏற்பாடு செய்த ஷங்கர் 25 என்கிற கொண்டாட்ட நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். மணி ரத்னம், மிஷ்கின், அட்லி உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்துகொண்ட அந்த விழா குறித்து இயக்குநர் வசந்த பாலன் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளதாவது:

போன வருடம் எங்கள் குரு இயக்குநர் ஷங்கர் அவர்களின் 25 வது ஆண்டு வெற்றி திரைப்பயணத்தை அவரின் உதவி இயக்குநர்கள் அனைவரும் கொண்டாடினோம். அதுபோல இயக்குநர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று இயக்குநர் லிங்குசாமி விரும்ப… இயக்குநர் மிஷ்கினுடன் மேலும் பல இயக்குநர்களும் இணைந்து இந்த விழாவை நடத்த தயாரானார்கள்.

கடந்த ஏப்ரல் 20ம் தேதி இரவு மிஷ்கினின் அலுவலகத்தில் மாலை 6.30 மணிக்கு கேக் வெட்டி விழா துவங்கியது. மிஷ்கினின் அலுவலகமே ஒரு சினிமா கவிதை. அதற்குள் இயக்குநர்கள் பாக்யராஜ் சார், மணிரத்னம் சார், பார்த்திபன் சார், கௌதம், ரஞ்சித் ,பாண்டிராஜ் ,சசி, பாலாஜி சக்திவேல், மோகன் ராஜா, அட்லி, ராம், மாரி செல்வராஜ், எழில் நான் உட்பட இன்னும் பல இயக்குநர்கள் சூழ அந்த மரகத இரவை கொண்டாடினோம்.

உலக இயக்குநர்களின் புகைப்படங்களும் உலக இலக்கியங்களும் சூழ்ந்துள்ள ஒரு சின்ன அறையில் இசையும் பாடல்களும் நிறைந்து வழிந்தது. ஒவ்வொரு இயக்குநரும் மணி சாரை வணங்கி ஷங்கர் சாரை புகழ என அந்த இடம் கந்தர்வ வனமானது. கௌதம் இளையராஜாவின் பாடலைப் பாடத் துவங்க மிஷ்கின், லிங்குசாமி, பாண்டிராஜ் நடனமாட மொத்த இடமும் இசையில் கொந்தளித்தது. மணி சாரை மோகன் ராஜா கட்டிப்பிடித்து காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழ….என்னவென்று சொல்வது! பள்ளித்தோழர்களின் ரீயூனியன் போல ஆனது. மிஷ்கின் ஷங்கர் சாரை உட்கார வைத்து 25 வருடத்தைப் போற்றும் வகையில் 25 விதமான கிப்ட்களை வழங்கினார். கிப்ட் கவரை பிரிப்பதற்கு முன்பு அது என்னவிதமான கிப்ட் என்று கண்டுபிடித்தால் 2000 ருபாய் பணம் பரிசு. பாண்டிராஜ் ஒரு பரிசை அடையாளம் கண்டு 2000 ருபாய் பரிசு பெற்றார். ஷங்கர் சார் “என்ன உட்கார வெச்சு மணப்பெண் போன்று நலுங்கு பண்ணிறியே மிஷ்கின்” என்று வெட்கத்தில் சொல்ல கூட்டம் சிரித்து மகிழ்ந்தது. 26 வது கிப்ட் என்ன என்று மிஷ்கின்  கேட்க கூட்டம் பலவாறு பதில்களை கூறியது. மிஷ்கின் “ஷங்கர் சாரை முத்தமிடுவது” என்று கூற கூட்டம் இன்னும் அன்பில் உருகியது. அனைத்து இயக்குநர்களும் ஷங்கர் சாரை வணங்கி இறுகத் தழுவி முத்தமிட்டனர். இறுதியாக மணி சார் ஷங்கர் சாரை கட்டித்தழுவி முத்தமிட்டார்.

எத்தனை கோடிகளும் தர முடியாத தருணம்.
எத்தனை கோடி கண் வேண்டும் அதை காண……
ஷங்கர் கண்களில் ஆனந்தக்கண்ணீர்  .

இயக்குநர் என்றவன் யார் ?
அவனுக்கு என்ன சக்தியிருக்கிறது என்பதை மணி சார் வார்த்தைகளில் கேட்க மகுடிக்கு மயங்கி அத்தனை இயக்குநர்களும் அவர் காலில் விழுந்தோம்.

நாயகன் எப்படி எடுத்தேன், அக்னி நட்சத்திரம் முதல் கடல் எப்படி எடுத்தேன் என்ற தேவ ரகசியத்தை பிரம்ம முகூர்த்தத்தில் என்னிடமும் ராமிடமும்  பகிர்ந்து கொண்டார். ஆகா இறைவன் வரம் தந்தது போன்று இருந்தது.
யார் தருவார் இந்த கணத்தை இந்த தருணத்தை? ஆகா ஆகா நான் இருப்பது சொர்க்கத்திலா என்று என்னை நான் கிள்ளிக்கொண்டேன்.

இந்த இடத்தில் இயக்குநர் சிகரம் பாலசந்தர் சார், பாலுமகேந்திரா சார், பாரதிராஜா சார், மகேந்திரன் சார் இல்லை, அதான் ஒரு குறை என்று மணி சொல்ல அந்த அத்தனை பேரையும் சேர்த்து தான் சார் நீங்க என்று நான் சொல்ல லிங்கு என்னை முத்தமிட்டான்.

இறுதியில் ஷங்கர் சார் ஏற்புரை வழங்கினார்.

பாலசந்தர் ஷாரின் 100 படங்களுக்கு முன் 
இயக்குநர் மணி சாரின் சாதனைகளுக்கு முன்பு 
இந்த சாதனையெல்லாம் ஒன்றுமில்லை. 
இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
உங்கள் அத்தனை பேரின் அன்பிற்கு இணையாக வேறு எதுவுமில்லை என்று கூறினார்.

அரங்கமெங்கும் அன்பின் நட்பின் நதி ஓடிக்கொண்டிருந்தது. யாருக்கும் தான் பெரிய இயக்குநர் என்ற எந்த கர்வமில்லை. அனைவரும் ஒரு பள்ளி சிறுவர்களாகத் தங்கள் ஆசிரியரை பார்ப்பதை போல இயக்குநர் மணி சாரையும் ஷங்கர் சாரை வணங்கிய வண்ணம் இருந்தனர். அது தான் பேரின்பம் பெருந்தருணம்.

விடிய விடிய இசையும் பாட்டும் தொடர்ந்தது. வாழ்நாள் முழுக்க யாரும் மறக்கமுடியா இரவு. உன்னதமான நாள் என்று எழுதியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com